இது முழு நிவாரணம் அல்ல


இது  முழு  நிவாரணம்  அல்ல
x
தினத்தந்தி 23 Feb 2017 9:30 PM GMT (Updated: 2017-02-23T19:39:28+05:30)

தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்கிறார்கள். பயிர்கள் செழித்து வளர்ந்தால்தான் அவர்கள் வாழ்வும் செழித்துவளரும், பயிர்கள் கருகிவிட்டால், அவர்கள் வாழ்வாதாரமும் பெரிதளவில் பாதிக்கப்பட்டுவிடும்.

மிழ்நாட்டில் பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்கிறார்கள். பயிர்கள் செழித்து வளர்ந்தால்தான் அவர்கள் வாழ்வும் செழித்துவளரும், பயிர்கள் கருகிவிட்டால், அவர்கள் வாழ்வாதாரமும் பெரிதளவில் பாதிக்கப்பட்டுவிடும். கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைவாகவும், வடகிழக்கு பருவமழை பொய்த்தும் விட்டதால் வரலாறு காணாத வறட்சியால் தமிழக மக்கள் குறிப்பாக, வேளாண்பெருங்குடி மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகிவிட்டார்கள். கடந்த மாதம் மத்திய அரசாங்கம் அனுப்பிய உயர்மட்டக்குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றிப்பார்த்து வறட்சியை நேரில் ஆய்வு செய்தனர். தமிழ்நாட்டில் உள்ள 16 ஆயிரத்து 682 வருவாய் கிராமங்களில், 13 ஆயிரத்து 305 கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசு சார்பில் மத்திய அரசாங்கம் வறட்சி நிவாரண நிதியாக ரூ.39 ஆயிரத்து 565 கோடியை தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து வழங்கவேண்டும் என்று விடுத்த கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இப்போது தமிழக அரசு விவசாயிகளுக்கு ரூ.2,247 கோடி பயிர்கள் இழப்பீடு நிவாரண தொகையாக வழங்க உத்தரவிட்டுள்ளது. இதன்படி, பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கும் மற்றும் இதர பாசன பயிர்களுக்கும் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.5,465–ம், மானாவரி பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரமும், நீண்டகால பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.7,287–ம், பட்டுப்புழு வளர்ப்புக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.2,428–லிருந்து ரூ.3 ஆயிரம் வரையும் இடுபொருள் நிவாரண தொகையாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

மொத்தம் 50 லட்சத்து 34 ஆயிரத்து 237 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்த பயிர்கள் சேதமடைந்துள்ளதால், 32 லட்சத்து 30 ஆயிரத்து 191 விவசாயிகள் இந்த இடுபொருள் நிவாரண உதவித்தொகையை பெற தகுதியுடையவர்கள். இது 5 ஏக்கருக்கும் குறைவான அளவில் நிலம் வைத்திருக்கும் சிறு குறு விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. 5 ஏக்கருக்குமேல் வைத்திருப்பவர்களையும் இப்போது பெரிய விவசாயிகளாக கருதிவிடமுடியாது. இழப்பு என்பது எல்லோருக்கும் ஏற்பட்டுள்ளது என்பதால், இந்த உச்சவரம்பை தமிழக அரசு சற்று உயர்த்தினால் நல்லது. விவசாயிகளை பொறுத்தமட்டில், அரசு வழங்கியுள்ள இந்த நிவாரணம், தாங்கள் அடைந்த இழப்பீட்டை நிச்சயம் சரிக்கட்டாது. ‘‘இது யானை பசிக்கு சோளப்பொரிப்போலதான்’’ என்று கூறுகிறார்கள். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவரான பி.ஆர்.பாண்டியன், அரசு நியமித்த தொழில்நுட்பக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட செலவே நெற்பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் ஆகும். மானாவரி பயிருக்கு ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.15 ஆயிரம்வரை ஒரு ஏக்கருக்கு சாகுபடி செலவாகும். நீண்டகால பயிர்களுக்கு அதாவது கரும்பு, வாழை போன்ற பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.75 ஆயிரம்வரை செலவாகும். 2012–13–ல் இதுபோல வறட்சி ஏற்பட்ட நேரத்தில், இந்தியாவிலேயே முதல்முறையாக ஜெயலலிதா வறட்சி நிவாரண உதவித்தொகையை விவசாயிகளுக்கு வழங்கும்போது முழு உற்பத்திசெலவையும் அரசு தந்துவிடும், காப்பீட்டு தொகை வரும்போது அந்த தொகையை அரசு விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் என்று சொல்லி, ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை வழங்கினார். அந்தவகையில், மத்திய அரசாங்கத்திடம் கேட்ட வறட்சி நிவாரணத்தொகையை வற்புறுத்திப்பெற்று, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதலாக நிவாரண உதவி வழங்கவேண்டும். பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவுசெய்துள்ள 14 லட்சத்து 99 ஆயிரம் விவசாயிகளுக்கும் வழங்கப்படும் ஏக்கருக்கு ரூ.4,800 முதல் ரூ.69 ஆயிரம் வரையிலான காப்பீட்டுத்தொகையை பெற்றுத்தருவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Next Story