கடல் வளத்துக்கு பெரும் பாதிப்பு


கடல் வளத்துக்கு பெரும் பாதிப்பு
x
தினத்தந்தி 24 Feb 2017 9:30 PM GMT (Updated: 24 Feb 2017 12:20 PM GMT)

சென்னையில் கடந்த சிலநாட்களாக நடந்த அரசியல் பரபரப்பில், ஒருபெரிய ஆபத்து மக்களின் கண்களிலிருந்து மறைக்கப்பட்டுவிட்டது.

சென்னையில் கடந்த சிலநாட்களாக நடந்த அரசியல் பரபரப்பில், ஒருபெரிய ஆபத்து மக்களின் கண்களிலிருந்து மறைக்கப்பட்டுவிட்டது. அது இன்னும் தன்கோரக்கரங்களை தமிழக கடல்பகுதிகளில் பரவவிட்டுக்கொண்டிருக்கிறது. ஜனவரி மாதம் 28–ந்தேதி அதிகாலை 3.45 மணிக்கு எண்ணூர் துறைமுகத்திலிருந்து சமையல் கியாசை இறக்கிவிட்டு, வெளியேவந்த மேப்பிள் என்ற கப்பலும், மிகவும் கடினமான நச்சுத்தன்மை கொண்ட எரிபொருள் எண்ணெய் அல்லது ‘பங்கர் ஆயில்’ என்று அழைக்கப்படும் எண்ணெயை ஏற்றிக்கொண்டு எண்ணூர் துறைமுகத்துக்குள் நுழைந்த ‘டான் காஞ்சீபுரம்’ என்ற கப்பலும் மோதிக்கொண்டன. ‘டான் காஞ்சீபுரம்’ கப்பலில் 21 ஆயிரத்து 141 டன் ‘பங்கர் ஆயில்’ இருந்தது. இந்த மோதலில் எரிபொருள் ஏற்றிவந்த கப்பலிலிருந்து எண்ணெய் பீறிட்டு பாய்ந்து கடலில் கொட்டியது. சற்றுநேரத்தில் எண்ணெய் படலமாக கடல் காட்சிஅளித்தது. ஆமைகளும், மீன்களும் கூட்டம் கூட்டமாக செத்துமிதந்தன.

எண்ணூர் காமராஜர் துறைமுகக்கழகம் முதலில், ‘ஒரு டன் எண்ணெய்தான் வெளியே கொட்டியிருக்கிறது. ஆபத்து ஒன்றுமில்லை, எல்லாவற்றையும் கட்டுப்படுத்திவிட்டோம்’ என்று பூசி மெழுகியது. ஆனால், சற்றுநேரத்தில் வந்த கடலோர காவல்படை, இந்த பெரிய ஆபத்தை பகிரங்கமாக வெளியே சொல்லிவிட்டது. அதன்பிறகுதான் இதன்கொடுமையினால் கடல்வளத்துக்கு ஏற்படும் பாதிப்பு மக்களுக்கு தெரியவந்தது. உடனடியாக இந்த எண்ணெய் படிமத்தை எடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால், கடலின் அலைமூலம் கொஞ்சம் கொஞ்சமாக இந்த படிமங்கள் கடலில் கலந்து வெகுதூரத்துக்கு சென்றுவிட்டன. எதிர்பாராத எரிபொருள் ஆபத்து பேரிடர் மீட்புத்திட்டம் 1996–ம்ஆண்டு முதல் அமலில் இருக்கிறது. ஆனால், அந்தத்திட்டத்தின் அடிப்படையில் இந்த எண்ணெய் மீட்புபணிகள் நடந்ததா? என்பது ஐயத்தில் உள்ளது. இதுமட்டுமல்லாமல், மாநிலஅளவில் இதுபோன்று எதிர்பாராத பேரிடர் மீட்புத்திட்டம் நிறைவேற்றப்படவேண்டும்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கடலோர காவல்படை இதைத்தான் கூறிக்கொண்டிருக்கிறது. ஆனால், இன்னும் இதுபோன்றத்திட்டம் தமிழகஅரசால் நிறைவேற்றப்படவில்லை. ‘இந்த எண்ணெய் படிமங்களை எல்லாம் எடுத்து முடித்துவிட்டோம், புதைத்துவிட்டோம்’ என்று துறைமுகம் சார்பில் தெரிவித்தாலும், இன்னும் முழுமையாக அகற்றப்படாமல் சென்னைக்கு அருகில் எர்ணாவூர் பகுதிகளில் கடற்கரையில் படிந்துகொண்டிருக்கிறது. இப்போது கடலூர் மாவட்டம், தேவனாம்பட்டினம் கடற்கரை வரை சென்றுவிட்டது. மேலும், இந்த படிமம் இன்னும் விரைவில் நீண்டதூரத்துக்கு சென்றுவிடும் என்ற அபாயம் வெகுவாக இருக்கிறது. தமிழகத்தின் மீன்வளத்தையே இது முற்றிலுமாக அழித்துவிடும். தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இந்த பிரச்சினை விசாரணையில் இருக்கிறது. 2010–ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில், மெக்சிகோ வளைகுடா கடலில் கலந்த இதுபோன்ற எரிபொருளின் பாதிப்பு இன்னும் சரியாகவில்லை. நிறைய கடல்வாழ் உயிரினங்கள் அழிந்துவிட்டன. கடற்கரையிலிருந்து 10 மைல் தூரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள் உடல்நிலையில் பெரும்பாதிப்பு இன்னும் உள்ளது. தமிழ்நாட்டிலும் இப்போது கடலின் மேற்பரப்பில் படர்ந்துகொண்டிருக்கும் இந்த எண்ணெய் படிமம், சூரிய ஒளிக்கதிர்களை கடலுக்குள் புகாமல் தடுத்து, கடல்வாழ் உயிரினங்கள், தாவரங்களை முற்றிலுமாக அழித்துவிடும். எனவே 1,076 கிலோமீட்டர் நீள தமிழக கடற்கரையில் வாழும் மீனவர்கள் வாழ்வில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், மீன்களெல்லாம் அழிந்துவிடாமல் தடுக்கவும் இந்த எண்ணெய் படிமத்தை அகற்றும்பணிகளில் எண்ணூர் துறைமுகமும், மத்திய அரசாங்கமும், மாநில அரசும் இணைந்து உடனடியாக பேரிடர் மீட்புதிட்டத்தை நிறைவேற்றி, மக்களை பெரும் பாதிப்பிலிருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Next Story