வார்தா நிவாரணமும், வறட்சி நிவாரணமும் என்ன ஆச்சு?


வார்தா நிவாரணமும், வறட்சி நிவாரணமும் என்ன ஆச்சு?
x
தினத்தந்தி 26 Feb 2017 8:29 PM GMT (Updated: 26 Feb 2017 8:28 PM GMT)

இந்திய வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கர், கடந்த 18–ந் தேதி இலங்கை தலைநகர் கொழும்புக்கு அரசுமுறை பயணமாக சென்றார்.

ந்திய வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கர், கடந்த 18–ந் தேதி இலங்கை தலைநகர் கொழும்புக்கு அரசுமுறை பயணமாக சென்றார். இந்த பயணத்தில் அவர் இலங்கை கடற்படையால் அவ்வப்போது தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் கொடுமைகள் பற்றி பேசி, ஒருமுடிவுக்கு வழிவகுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இலங்கையில் ஏற்பட்டுள்ள வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடி தேவைக்காக இந்தியா 100 மெட்ரிக் டன் அரிசியையும், 3 தண்ணீர் டேங்கர்களையும் உடனடியாக வழங்கும் என்றும், இலங்கையில் நிலவும் வறட்சியை சமாளிக்க எதிர்காலத்தில் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கத் தயாராக இருக்கிறது என்றும் கூறியுள்ளார். இயற்கை சீற்றத்தால் யார் பாதிக்கப்பட்டாலும், மனிதாபிமான முறையில் உதவி செய்ய வேண்டியது நிச்சயமாக ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றாகும். ஆனால், இலங்கைக்கு செய்யும் அந்த உடனடி உதவியை, தமிழகத்துக்கு மத்திய அரசாங்கம் இன்னும் செய்யவில்லையே? என்பதுதான் மிகவும் கவலையளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12–ந் தேதி 130 முதல் 140 கிலோமீட்டர் வேகம் வரை வீசிய ‘வார்தா புயல்’, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் போன்ற மாவட்டங்களை அப்படியே புரட்டிப் போட்டு விட்டது.

இந்த வார்தா புயலின் சேதத்தை மதிப்பிட மத்திய குழு தமிழகத்துக்கு வந்தது. அப்போது முதல்–அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், பிரதமரை சந்தித்து சேதவிவரத்தை தெரிவித்து, ரூ.22 ஆயிரத்து 573 கோடி சீரமைப்புக்காக கேட்டார். எல்லா அலுவலக நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இந்த தொகை இன்னும் வந்து சேரவில்லை. புயல்தான் வந்ததே தவிர, மழையைக் கொண்டு வரவில்லை. இதுமட்டுமல்லாமல், பருவமழை முற்றிலுமாக பொய்த்து விட்டதால், தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவு கடும் வறட்சி நிலவுகிறது. 1846–ம் ஆண்டுக்கு பிறகு இப்படி ஒரு வறட்சியை தமிழகம் இப்போதுதான் கண்டுகொண்டிருக்கிறது. ஏற்கனவே கடந்த ஜனவரி மாதமே ஓ.பன்னீர்செல்வம் பிரதமரை சந்தித்து வறட்சி நிதியாக ரூ.39 ஆயிரத்து 565 கோடி நிதி அளிக்க வேண்டுமென்று நேரிலும் கோரினார். ஒரு விரிவான மனுவையும் பிரதமர் அலுவலகத்தில் வழங்கினார்.

வறட்சி பாதித்த பகுதிகளை மத்திய குழு நேரில் வந்து மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பார்த்து விட்டு சென்றாலும், இன்னும் எந்த தொகையும் வரவில்லை. விவசாய தொழிலாளர்களெல்லாம் தங்களுக்கு வாழ்வளித்த தங்கள் தாயைப்போல நினைத்துக் கொண்டிருந்த பயிர்கள் கருகிய நிலையையும், நிலங்களெல்லாம் பாளம் பாளமாக வெடித்திருக்கும் நிலையையும் கண்டு கண்ணீர்விட்டு அழுது கொண்டிருக்கிறார்கள். இந்த துயரத்தை தாங்கிக் கொள்ள முடியாமல், இனி இந்த உலகில் நம் உயிர் இருந்து என்ன பயன்? என்றளவில் 267 பேர் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பாலும் உயிர் இழந்திருக்கிறார்கள். விவசாயிகள் மட்டுமல்லாமல், காடுகளில் ஏற்பட்டுள்ள வறட்சியால் தண்ணீர் இல்லாமல், தீவனம் இல்லாமல் 4 யானைகள் உயிரிழந்துள்ளன. ஆக, மனிதர்களுக்கும், வனவிலங்குகளுக்கும் தண்ணீர் பஞ்சம் கடுமையாகி விட்டது. தமிழகம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மத்திய அரசாங்கம், தமிழக அரசு கோரும் ரூ.39 ஆயிரத்து 565 கோடியை தேசிய பேரிடர் நிதியிலிருந்து வழங்க உத்தரவிட வேண்டும். சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் கொண்ட பெஞ்சு, ‘மாநில அரசு கோரிய இந்த நிவாரண நிதி வி‌ஷயத்தில் மத்திய அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது? என்பதை மார்ச் 9–ந் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டிருக்கிறது. மார்ச் 9–ந் தேதிக்குள் தங்கள் நிலைப்பாட்டை மத்திய அரசாங்கம் எப்படியும் தெரிவித்தாக வேண்டும். ஆனால், அதற்கு முன்பு இலங்கைக்கு உடனடியாக வறட்சி நிவாரண உதவிகளை வழங்கியதைபோல, தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்பதுதான் தமிழக மக்கள் விடுக்கும் கருணை கோரிக்கையாகும்.

Next Story