‘நீட்’ தேர்வுக்கான விண்ணப்பம்


‘நீட்’ தேர்வுக்கான விண்ணப்பம்
x
தினத்தந்தி 27 Feb 2017 9:00 PM GMT (Updated: 2017-02-27T19:48:17+05:30)

தமிழ்நாடு முழுவதும் குறிப்பாக பிளஸ்–2 தேர்வு எழுதப்போகும் மாணவர்களிடம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ‘நீட்’ தேர்வாகும்.

மிழ்நாடு முழுவதும் குறிப்பாக பிளஸ்–2 தேர்வு எழுதப்போகும் மாணவர்களிடம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ‘நீட்’ தேர்வாகும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புப்படி, இந்தியா முழுவதிலும் மருத்துவக்கல்லூரி மற்றும் பல் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக, தேசிய தகுதிக்காண் நுழைவுத்தேர்வு என்னும் ‘நீட்’ தேர்வு நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 2007–ம் ஆண்டு முதல் நுழைவுத்தேர்வு கிடையாது. பிளஸ்–2 தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே இந்தப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடந்துவருகிறது. நுழைவுத்தேர்வு என்றால், கிராமப்புறங்களில் உள்ள ஏழை–எளிய மாணவர்களுக்கு நிச்சயமாக இதுபோன்ற தேர்வு எழுதுவதற்கு பயிற்சியில்லாத நிலையில், மருத்துவக்கல்லூரிகளில் சேர்வதற்கான வாய்ப்பு கிடைக்காது. இந்த ஆண்டு உறுதியாக ‘நீட்’ தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டிய நிலையில், தமிழகத்தில் இதற்கு கிளம்பிய கடுமையான எதிர்ப்பின் காரணமாக, தமிழக சட்டசபையில் கடந்த ஜனவரி 31–ந்தேதி ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதற்காக ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டு, அந்தமசோதா கவர்னரின் ஒப்புதலையும் பெற்று, இப்போது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக மத்திய அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

மத்திய அரசாங்கத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை, சுகாதாரத்துறை, சட்டத்துறை ஆகியவை இந்த மசோதாவிற்கு பரிந்துரையளித்த பிறகுதான், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு செல்லமுடியும். மத்திய அரசாங்கம் விரைவில் இந்தப்பரிந்துரையை அளித்து, ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெற்றுத்தர முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திரமோடியை நேற்று டெல்லியில் சந்தித்து வலியுறுத்தினார். ‘நீட்’ தேர்வுக்காக மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்வதற்கான கடைசிநாள் மார்ச் 1–ந்தேதி (நாளை) தான். எனவே, இன்னமும் ‘நீட்’ தேர்வுக்கு தமிழக மாணவர்களுக்கு விலக்கு நிச்சயமாக கிடைக்கும் என்று உறுதிசெய்யப்படாத நிலையில், பாதுகாப்புக்காக அனைத்து மாணவர்களும் உடனடியாக ‘நீட்’ தேர்வு எழுத  cbseneet.nic.in  என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்வது மிகவும் தேவையான ஒன்றாகும். இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வை தமிழிலும் எழுதலாம். ஒருவேளை இந்த விலக்கு கிடைப்பதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்காவிட்டாலோ, அல்லது உச்சநீதிமன்றம் இந்த மசோதா செல்லாது என்று அறிவித்துவிட்டாலோ, மாணவர்கள் ‘நீட்’ தேர்வு மூலமாகத்தான் மருத்துவக்கல்லூரியிலும், பல் மருத்துவக்கல்லூரியிலும் சேர்வதற்கான கட்டாயம் ஏற்பட்டுவிடும்.

ஆனால், ‘நீட்’ என்றால் நமது மாணவர்களுக்கு அதற்குரிய கல்வித்தரம் இல்லை என்பது நிதர்சனமான உண்மையாகும். கடந்த ஆண்டு ‘நீட்’ தேர்வு எழுதியவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் 41.9 சதவீதம் பேர்தான் தேர்வாகியிருக்கிறார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த 33,204 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 13,916 பேர்கள்தான் தேர்வாகியிருக்கிறார்கள். தென்மாநிலங்களிலேயே தமிழக மாணவர்களின் தேர்ச்சிவிகிதம்தான் மிகமிக குறைவு என்பது வருத்தத்திற்குரியதாகும். கேரளாவில் 79.77 சதவீதம் மாணவர்களும், தெலுங்கானாவில் 77.08 சதவீத மாணவர்களும், ஆந்திராவில் 72.93 சதவீத மாணவர்களும், கர்நாடகத்தில் 71.85 சதவீத மாணவர்களும் தேர்வுபெற்றிருக்கிறார்கள். ‘நீட்’ தேர்வில் வெற்றிபெற தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்கள் 45 சதவீதம் மதிப்பெண்களும், மற்ற மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்களும் எடுக்கவேண்டும். ஆக, 58 சதவீத மாணவர்கள், 50 சதவீத மார்க்குகள் கூட எடுக்கமுடியவில்லை என்றால், நிச்சயமாக தமிழகத்தின் கல்வித்தரம் குறித்து மறுஆய்வு நடத்தவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. ‘நீட்’ தேர்வு எழுதுவதிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கிறதோ?, இல்லையோ?. கண்டிப்பாக மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவது குறித்து அரசு தீவிர நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும். அதையும் உடனடியாக எடுக்க வேண்டும்.


Next Story