சம்பிரதாயமாக ஆகிவிடக்கூடாது


சம்பிரதாயமாக  ஆகிவிடக்கூடாது
x
தினத்தந்தி 28 Feb 2017 9:30 PM GMT (Updated: 2017-02-28T22:51:46+05:30)

மறைந்த தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார், பத்திரிகையாளர்களுக்கெல்லாம் ஒரு ஞானத்தந்தையாக திகழ்ந்தவர். அவர் இதழியலுக்கு போட்டுக்கொடுத்த பாதையில்தான், இன்றும் பத்திரிகையாளர்கள் வெற்றிகரமாக பீடுநடைபோட முடிகிறது.

றைந்த தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார், பத்திரிகையாளர்களுக்கெல்லாம் ஒரு ஞானத்தந்தையாக திகழ்ந்தவர். அவர் இதழியலுக்கு போட்டுக்கொடுத்த பாதையில்தான், இன்றும் பத்திரிகையாளர்கள் வெற்றிகரமாக பீடுநடைபோட முடிகிறது. பத்திரிகைத்துறையில் காலடி எடுத்துவைக்கும் இளம்பத்திரிகையாளர்களுக்கு அவர் ஏராளமான பால பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளார். அதில் ‘முக்கால உண்மை’ என்று அவர் கூறியஒன்றாகும். சில வி‌ஷயங்கள் ‘கடந்த காலத்திலும் நடக்கும். நிகழ்காலத்திலும் நடக்கும். எதிர்காலத்திலும் நடக்கும்’ என்பார். அதுபோன்ற ஒரு ‘முக்கால உண்மை’ தான் இப்போது பிரதமரிடம், தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடுத்த மனுவிலும் உள்ளது. பொதுவாக மாநில முதல்–அமைச்சர்கள் பதவியேற்ற உடனேயும், தொடர்ந்து சிலநேரங்களிலும் டெல்லிக்குச்சென்று பிரதமரை சந்தித்து மனுகொடுப்பது வழக்கம். அதுபோல, இப்போது தமிழக முதல்–அமைச்சராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசியிருக்கிறார். 30 நிமிடம் நடந்த இந்த சந்திப்பில், 106 பக்கங்கள் கொண்ட கோரிக்கை மனுவையும் கொடுத்துள்ளார்.

‘‘காவிரி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பை நிறைவேற்றும் வகையில், காவிரி மேலாண்மை வாரியமும், காவிரிநீர் ஒழுங்காற்றுகுழுவும் அமைக்கவேண்டும். மேகதாது அணைத்திட்டத்தை நிறைவேற்றவேண்டாம் என்று கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தவேண்டும். முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தவேண்டும். தென்னக நதிகளை இணைக்கவேண்டும். அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு உதவவேண்டும். பாக்ஜலசந்தியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையை மீட்டுத்தரவேண்டும். கச்சத்தீவை மீட்டுத்தரவேண்டும். தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரத்தை பெற்றுச்செல்ல தனியாக பசுமை வழித்தடம் அமைக்கவேண்டும். கூடங்குளம் 3–வது, 4–வது யூனிட்டில் உற்பத்தியாகும் முழு மின்சாரத்தையும் தமிழகத்திற்கே தரவேண்டும். தமிழ்நாட்டில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்கவேண்டும். மெட்ரோ ரெயில் திட்டத்தை வேகமாக நிறைவேற்ற உதவவேண்டும். ஐகோர்ட்டில் தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும்’’ என்பது போன்ற 23 தலைப்புகளில் கோரிக்கைகளை பிரதமரிடம் கொடுத்திருக்கிறார். நான் எடுத்துவைத்த கோரிக்கைகளை பிரதமர் மிகவும் கவனமாக கேட்டுக்கொண்டார் என்று நிருபர்களிடம், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிகவும் பெருமிதத்தோடு கூறியிருக்கிறார். ஆனால், இந்த மனுக்களில் கூறியிருக்கிற கோரிக்கைகள் எல்லாம் 3.6.2014, 7.8.2015, 14.6.2016 ஆகிய தேதிகளில் பிரதமர் நரேந்திரமோடியிடம், மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா கொடுத்த மனுக்களின் மறுபிரதியாகத்தான், அதாவது ஜெராக்ஸ் காப்பிபோலத்தான் இந்த மனுவும் இருக்கிறது. ஜெயலலிதா இந்த தேதிகளில் கொடுத்த மனுக்களிலேயே அதற்குமுன்பு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில், பிரதமர் மன்மோகன்சிங்கிடம் அவர் கொடுத்த மனுக்களிலுள்ள பல அம்சங்கள்தான் இருந்தன.

இப்போதும் அதேபோல ஜெயலலிதா தாக்கல்செய்த மனுக்களிலுள்ள பலகோரிக்கைகள் அப்படியே எடப்பாடி மனுவிலும் இருப்பதைப்பார்த்தால், இது சம்பிரதாயத்திற்காக கொடுக்கப்பட்டதுபோலத்தான் தெரிகிறது. எடப்பாடி பழனிசாமி கொடுத்த மனுவில், தமிழகத்திற்கு தேவையான வறட்சி நிவாரணநிதி, ‘வார்தா’ புயல் நிவாரணநிதி, விவசாயிகளிடம் கலந்து ஆலோசிக்காமல், தமிழக அரசு ஒப்புதல் இல்லாமல், ஹைட்ரோ கார்பன் திட்டப்பணிகளை மேற்கொள்ளவேண்டாம் என்பது போன்ற கோரிக்கைகள்தான் புதிதாக இருக்கிறது. எனவே, இப்போது பிரதமரிடம் மனுகொடுத்துவிட்டோம், கோரிக்கைகளையெல்லாம் அவர் பரிசீலிப்பார் என்று நினைக்காமல், ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கோரிக்கையையும் நிறைவேற்றுவதற்கு மத்திய அரசாங்கம் என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது? என்று கவனித்து, ஒவ்வொரு கோரிக்கையையும் நிறைவேற்ற தொடர்ந்து வற்புறுத்தவேண்டும். இதில் ஒவ்வொரு துறை செயலாளர்களின் பங்கு பெரும்பங்காக இருக்கிறது. முதல்–அமைச்சர் விடுத்த 23 தலைப்புகளில் உள்ள கோரிக்கைகளை மத்திய அரசாங்கம் நிறைவேற்றிவிட்டாலே, தமிழகம் நிச்சயமாக வளர்ச்சிப்பாதையில் செல்லும்.

Next Story