கடலில் போய் வீணாக கலக்கும் தண்ணீர்


கடலில்  போய்  வீணாக  கலக்கும்  தண்ணீர்
x
தினத்தந்தி 5 March 2017 9:30 PM GMT (Updated: 5 March 2017 6:25 PM GMT)

தமிழ்நாட்டில் தற்போது வரலாறு காணாத ஒரு வறட்சி தொடங்கியுள்ளது. கடந்த 146 ஆண்டுகளாக இதுபோன்ற வறட்சி தமிழ்நாட்டில் இருந்ததில்லை என்று சொல்லப்படுகிறது.

மிழ்நாட்டில் தற்போது வரலாறு காணாத ஒரு வறட்சி தொடங்கியுள்ளது. கடந்த 146 ஆண்டுகளாக இதுபோன்ற வறட்சி தமிழ்நாட்டில் இருந்ததில்லை என்று சொல்லப்படுகிறது.    சமீபத்தில்   திருநெல்வேலி,   தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களுக்கு கூட்டுகுடிநீர் திட்டங்களின் கீழ் தண்ணீர் வழங்கிவரும் தாமிரபரணி ஆற்றில் இருந்து கோ–கோ கோலா, பெப்சி தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்குவது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ.யான எம்.அப்பாவு மற்றும் திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளரான  டி.ஏ.பிரபாகர் ஆகியோர் தொடர்ந்த 2 பொதுநல வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டாலும், நீதிபதிகள் கூறியிருக்கும் சில கருத்துகள், அரசு உடனடியாக செய்யவேண்டிய நடவடிக்கைகளை பகிரங்கமாக எடுத்துக்காட்டுகிறது. இந்த வழக்கில் மாநில அரசாங்கம் தாக்கல் செய்த அறிக்கையில், ‘தாமிரபரணி ஆற்றில் இருந்து 5,049 மில்லியன் கனஅடி (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) தண்ணீர் கடலில் போய் கலந்துகொண்டிருக்கும் நிலையில், 43 மில்லியன் கனஅடி தண்ணீர்தான் இந்த இரு தொழிற்சாலைகளுக்கும் வழங்கப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கமே 5,049 மில்லியன் கனஅடி தண்ணீர் வீணாக கடலில் போய் சேருகிறது என்று சொல்வதை பார்க்கும்போது, இந்த தண்ணீரையெல்லாம் முறையாக சேமித்துவைக்க திட்டங்களை நிறைவேற்றியிருந்தால், தண்ணீர் பஞ்சம் தலையெடுத்திருக்காதே என்பதுதான் பொதுமக்களின் கருத்தாக இருக்கிறது. இந்தத்தீர்ப்பில் நீதிபதிகள், ‘சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு, கடந்த 70 ஆண்டுகளாக அரசாங்கம் இதுபோல கடலில் போய் கலக்கும் தண்ணீரை சேமிக்க போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை’ என்ற வருத்தத்தை பதிவுசெய்திருக்கிறார்கள். எத்தனையோ நுண்ணிய ஆய்வுகள், பரிந்துரைகள் இதுபோல வீணாக கடலில் போய் கலக்கும் தண்ணீரை தடுக்க, குளங்கள், ஏரிகள் உருவாக்கப்படவேண்டும் என்று தெரிவித்திருந்தாலும், ஒரு நடவடிக்கையையும் காணவில்லை என்று கூறியுள்ளது. இப்போது மட்டுமல்ல, வருங்காலத்திலும் ஒவ்வொரு சொட்டுத்தண்ணீரையும் சேமிக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

ஏற்கனவே தாமிரபரணி ஆற்றில் இருந்து கடலில் போய் வீணாக கலக்கும் தண்ணீரில் 3 ஆயிரம் மில்லியன் கனஅடி தண்ணீரை வறண்ட பகுதிகளான நாங்குநேரி, ராதாபுரம், திசையன்விளை, சாத்தான்குளம், திருச்செந்தூர், உடன்குடி போன்ற பகுதிகளுக்கு கொண்டுசெல்லும் வகையில், 2009–ல் தி.மு.க. ஆட்சியில் ரூ.369 கோடி செலவில் தாமிரபரணி–கருமேனியாறு–நம்பியாறு இணைப்புத்திட்டம் என்றபெயரில் ஒரு வெள்ளப்பெருக்கு கால்வாய் தோண்ட திட்டமிடப்பட்டு, அதற்காக ரூ.214 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு, பாதிபணிகள் முடிந்துள்ள நிலையில், இப்போது அப்படியே கிடப்பில் இருக்கிறது. இந்தத்திட்டத்தை உடனடியாக தொடர்ந்து செயல்படுத்தவேண்டும். இதுபோல, மேலும் பல திட்டங்கள் தமிழக அரசு நிதியிலிருந்தோ, மத்திய அரசு நிதியை பெற்றோ, உலக வங்கி நிதியை பெற்றோ, ஆசிய வளர்ச்சி வங்கி நிதியை பெற்றோ தொடங்கினால், அரசாங்கம் சொல்கிற இந்த 5,049 மில்லியன் கனஅடி தண்ணீரை மக்களுக்கு தேவைப்படும் இடங்களுக்கு திருப்பி அனுப்பமுடியும். ஆங்காங்கு தடுப்பு அணைகளைக்கட்டினால் குறிப்பிட்ட அளவு தண்ணீர் தேங்கியிருக்கும். நிலத்தடி நீரும் பெருகும். ஆக, மொத்தத்தில் கடலில் போய் வீணாக கலக்கிறது என்று இனி அரசாங்கம் ஒருபோதும் சொல்லக்கூடாது. எவ்வளவு மழைபெய்தாலும், எவ்வளவு வெள்ளம் வந்தாலும், அந்த தண்ணீரையெல்லாம் மக்களுக்கு எப்போதும் பயன்படும் வகையில், ஆங்காங்கு திருப்பிவிடப்பட்டு, கால்வாய்களிலும், ஏரிகளிலும், குளங்களிலும் நிரப்பப்படுகிறது என்று பெருமையோடு சொல்லும் நிலைமையை தமிழக அரசு உருவாக்கவேண்டும். அதற்கு தாமிரபரணி ஒரு எடுத்துக்காட்டாக, தொடக்கமாக இருக்கட்டும்.

Next Story