ஆற்று மணலுக்கு பதிலாக மாற்று மணல்


ஆற்று மணலுக்கு பதிலாக மாற்று மணல்
x
தினத்தந்தி 6 March 2017 8:30 PM GMT (Updated: 6 March 2017 6:19 PM GMT)

தற்போது தமிழ்நாட்டில் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. பருவமழை பொய்த்ததால், ஆறுகளெல்லாம் பாலைவனம்போல காட்சியளிக்கிறது.

90 வயதைக் கடந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.யான அப்பாவு, ஐகோர்ட்டு வக்கீல் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி வக்கீல் ஜோயல் போன்ற பல தலைவர்கள் ஆற்றில் நடக்கும் மணல் கொள்ளையை எதிர்த்து நடத்திய போராட்டங்கள், தொடர்ந்த வழக்குகள், மக்களுக்கு அவர்கள் மீது பெரும்மதிப்பை ஏற்படுத்தியுள்ளன. தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு, கடந்த பல ஆண்டுகளாகவே ஆற்றுமணல் கொள்ளையை ஒழித்தே தீருவேன் என்ற தணியாத லட்சியத்தோடு இதுவரையில், சட்டரீதியாக நீதிமன்றங்களில் பலவழக்குகளை தொடர்ந்துள்ளார். இதுவரை அவர் பல தீர்ப்புகளை பெற்றிருந்தாலும், தற்போது உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் கொண்ட பெஞ்சு, ‘ஆற்று மணலுக்கு மாற்றாக மாற்று மணல் அதாவது, கருங்கல் ஜல்லி மற்றும் குவாரி துகள்களை கட்டிடப்பணிகளுக்கு பயன்படுத்துவதை சட்டப்பூர்வமாக்கி, ஆற்றுமணல் எடுக்கும் அனைத்து லைசென்சுகளையும் ரத்து செய்யவேண்டும் என்ற அப்பாவு கோரிக்கையை அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது. இது, தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. பருவமழை பொய்த்ததால், ஆறுகளெல்லாம் பாலைவனம்போல காட்சியளிக்கிறது. ஆழ்குழாய் கிணறுகள், திறந்தவெளி கிணறுகளை பயன்படுத்தி தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம் என்றால், நிலத்தடி நீர்மட்டமும் கீழே போய்விட்டது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆறுகளில் தொடர்ந்து மணல் கொள்ளையடிக்கப்பட்டு வருவதால் கட்டாந்தரையாகி ஆறுகளில் தண்ணீர் பிடிப்பும் இல்லை. தண்ணீரும் வேகமாக ஓடி கடலில் கலந்துவிடுகிறது. நிறைய மணல் இருந்தால் தண்ணீர்பிடிப்பு அதிகமாக இருக்கும். அதன்காரணமாக நிலத்தடி நீர்மட்டமும் உயரும். ஆனால், பணத்துக்கு ஆசைப்பட்டு தொடர்ந்து நடந்தகொள்ளையில், ஆறுகள் எல்லாம் கட்டாந்தரையாகிவிட்டன. கேரளா மாநிலத்தில் 40–க்கும் மேற்பட்ட ஆறுகள் வற்றாத வளத்தோடு எப்போது பார்த்தாலும் தண்ணீரோடு ஓடிக்கொண்டிருப்பதற்கு காரணம், அங்கு ஒரு கைப்பிடி மணலைக்கூட யாரும் அள்ளிக்கொண்டு போகாதபடி கடுமையான சட்டம் போட்டிருக்கிறது.

கேரளா போன்று தமிழ்நாட்டிலும் மணல் கொள்ளையை தடுக்க ஒரு நிலைமை வராதா? என்று ஒட்டுமொத்த தமிழகமே இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆற்றுமணல் என்பது இயற்கை நமக்கு தந்த வரப்பிரசாதம். நிலத்தடிநீர் உள்பட நீர்வளங்களை, சுற்றுச்சூழலை பாதுகாக்க மணல் மிகமிக அவசியம். ஒரு செ.மீட்டர் அளவிலான மணல்சேர பலஆண்டுகளாகும். ஆனால், ஒரு நிமிடத்தில் லாரி லாரியாக அள்ளிக்கொண்டுபோகிறார்கள். தற்போது உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அதாவது, கட்டிடப்பணிகளுக்கு கருங்கல் ஜல்லி, குவாரி துகள்கள் போன்றவற்றை பயன்படுத்தவேண்டும் என்று ஏற்கனவே கடந்த 30.8.2012 அன்று தமிழக பொதுப்பணித்துறையும் ஒரு உத்தரவாக பிறப்பித்துள்ளது. ஆற்றுமணலைவிட இந்த மாற்று மணல்தான் தரம் உயர்ந்தது, உறுதியானது என்று கேரளா, மராட்டியத்தில் 20 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார்கள். ஐ.எஸ்.ஐ. சான்றிதழ் இருக்கிறது. ஆக, இப்போது ஏற்கனவே பிறப்பித்த தமிழக அரசின் உத்தரவை தீவிரமாக அமல்படுத்தி, அதோடு ஆற்றுமணல் கொள்ளைக்கும் ஒரு முழுமையான தடைவிதித்து அரசு, மக்களின் மனதில் பால் வார்க்கவேண்டும் என்பதே தமிழக மக்களின் கோரிக்கையாகும். மேலும், கருங்கல் ஜல்லி, குவாரி துகள்களை உற்பத்தி செய்யும் வகையில் தனியாருக்கு தாராளமாக லைசென்சு வழங்கி ஊக்குவிக்கவேண்டும். இதனால் வேலைவாய்ப்புகளும் பெருகும். இனிமேலாவது ஆறுகளில் மணல் சேரட்டும், வளம் பெருகட்டும்.

Next Story