ஆகாய தாமரையை அகற்றும் போராட்டம்


ஆகாய  தாமரையை  அகற்றும்  போராட்டம்
x
தினத்தந்தி 7 March 2017 9:30 PM GMT (Updated: 2017-03-07T19:33:41+05:30)

தமிழ்நாட்டில் ஓடும் ஆறுகளில் தாமிரபரணி ஆறு ஒன்றுதான் தமிழ்நாட்டிலேயே உற்பத்தியாகும் ஆறு. எப்போதும் வற்றாத ஜீவநதியாக அதாவது, கொஞ்சம் தண்ணீராவது ஓடிக்கொண்டிருக்கும் ஆறுதான் தாமிரபரணி.

மிழ்நாட்டில் ஓடும் ஆறுகளில் தாமிரபரணி ஆறு ஒன்றுதான் தமிழ்நாட்டிலேயே உற்பத்தியாகும் ஆறு. எப்போதும் வற்றாத ஜீவநதியாக அதாவது, கொஞ்சம் தண்ணீராவது ஓடிக்கொண்டிருக்கும் ஆறுதான் தாமிரபரணி. நெல்லைக்கு அருகிலுள்ள ‘சிப்காட்’ வளாகத்தில் அமைந்துள்ள பல தொழிற்சாலைகளுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்துதான் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதில், ‘பெப்சி, கோ–கோ கோலா கம்பெனிக்கு மட்டும் தினமும் 24 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு ரூ.37.50 காசு என்ற விகிதத்தில் வழங்கப்படுவதை குறிப்பிட்டு, சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் 2 பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால், இந்த பொதுநல வழக்குகள் பொதுநலத்துக்காக தொடரப்படவில்லை. இதில் ஒருமனுதாரர் பல ஆண்டுகளாக இந்த நிறுவனங்களின் வழக்குகளை நடத்திக்கொண்டிருந்தார். இப்போது அங்கிருந்து பணிநிறுத்தம் செய்யப்பட்டதால், அந்த கோபத்தில் பழிதீர்க்க இந்த வழக்குகளை தொடர்ந்துள்ளார் என்று இந்த நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் கூறியதால், அப்படி இந்த 2 வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

இதை எதிர்த்து திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்களில் போராட்டம் தீவிரமாக நடந்துவருகிறது. பல்வேறு வகையான போராட்டங்களை எல்லோரும் நடத்திவந்தாலும், இயற்கை வள பாதுகாப்பு கூட்டமைப்பு என்ற சமூகஆர்வலர் அமைப்பை நடத்தியவர்கள் போராட்டம், எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது மட்டுமல்லாமல், பெரும் ஆதரவையும் தந்துள்ளது. முதலில் ‘பெப்சி, கோ–கோ கோலா கம்பெனிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஆற்றின் கரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். வண்ணாரப்பேட்டை அருகே தாமிரபரணி ஆற்றின் கரையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்குப்பிறகு, இந்த சமூக ஆர்வலர்கள் ஆற்றுக்குள் இறங்கி அங்கு படர்ந்திருந்த ஆகாய தாமரையை அகற்றி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்தப்போராட்டம் தொடரும் என்று அறிவித்திருக்கிறார்கள். அரசாங்கமும், அதிகாரிகளும் செய்யவேண்டிய வேலையை, போராட்டம் நடத்தியவர்கள் செய்தது அனைவரையும் பெரிய ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதுபோன்று ஆக்கப்பூர்வமான போராட்டங்கள்தான் இனி பொதுமக்கள் மத்தியில் எடுபடும்.

பொதுவாக, ஜனநாயக நாட்டில் யாரும் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்ட உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மறியல், தர்ணா, மனிதசங்கிலி போன்ற பலவகையான போராட்டங்கள் நடத்துவதில் தவறே இல்லை. ஆனால், உண்ணாவிரதம் என்பது தங்களை தாங்களே வருத்திக்கொள்வதுதான். மற்ற போராட்டங்கள் எல்லாம் அவர்கள் உணர்வை வெளிகாட்டும் வகையில் அமைந்திருக்கும். அது பொதுமக்களுக்கு பெரும் இடையூறையும் ஏற்படுத்தும். எடுத்துக்காட்டாக, ஒரு இடத்தில் மறியலோ, சாலைமறியலோ, தர்ணாவோ நடந்தால் நிச்சயமாக போக்குவரத்து பெரிதும் பாதிப்புக்குள்ளாகும். அவசரத்துக்கு பொதுமக்கள் எங்கேயும் போகமுடியாது. இத்தகைய நேரங்களில் அவர்கள் போராட்டக்காரர்களை குறைப்பட்டுக்கொள்வார்களே தவிர, அந்தப்போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து ஆதரவு தெரிவிக்கமாட்டார்கள். இதனால்தான், ஜப்பான் நாட்டில் எந்தப்போராட்டம் என்றாலும், தாங்கள் பார்க்கும் பணியில் கூடுதல்நேரம் பார்த்து உற்பத்தியை பெருக்குவார்கள். சிலபோராட்டங்களில் ரத்ததானம் செய்து தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள். அதுபோல, திருநெல்வேலி இப்போது வழிகாட்டிவிட்டது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் போராட்ட உணர்வோடு அந்தப்பணியை வேகமாக செய்வார்கள் என்பதால், இதையே ஒரு பாடமாகக்கொண்டு, இனிமேல் போராட்டம் நடத்துபவர்கள் எல்லோரும் இதுபோல ஆகாய தாமரையை அகற்றும் பணியில் இறங்கினால், பொதுமக்கள் ஆதரவும் கிடைக்கும். அரசாங்கத்தின் கவனத்தையும் ஈர்க்கும். அரசாங்கமும் தாங்கள் செய்யவேண்டிய வேலையை பொதுமக்கள் கையில் எடுத்துக்கொண்டு செய்கிறார்களே என்று உணர்ந்து, அவர்களையே ஆகாய தாமரையை அகற்றும் பணியில் ஈடுபடவைக்கும்.

Next Story