பிரிட்ஜோ சாவுக்கு பதில் சொல்லியே தீரவேண்டும்


பிரிட்ஜோ சாவுக்கு பதில் சொல்லியே தீரவேண்டும்
x
தினத்தந்தி 8 March 2017 9:30 PM GMT (Updated: 2017-03-08T20:14:50+05:30)

சர்வதேச கடல் எல்லைக்கு 4 மைல் உள்ளே நாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே இந்திய பகுதிக்குள் நேற்றுமுன்தினம் இரவு 2 படகுகளில் வந்து மீன்பிடித்த 10 இலங்கை மீனவர்களை, இந்திய கடற்படை கைது செய்து காவலில் வைத்துள்ளது.

ர்வதேச கடல் எல்லைக்கு 4 மைல் உள்ளே நாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே இந்திய பகுதிக்குள் நேற்றுமுன்தினம் இரவு 2 படகுகளில் வந்து மீன்பிடித்த 10 இலங்கை மீனவர்களை, இந்திய கடற்படை கைது செய்து காவலில் வைத்துள்ளது. இந்திய எல்லைக்குள் நுழைந்த இலங்கை மீனவர்களை, இந்திய கடற்படை அடிக்கவோ, துன்புறுத்தவோ இல்லை. ஆனால், கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் மீது அவ்வப்போது இலங்கை கடற்படை ஈவு இரக்கமின்றி துப்பாக்கியால்சுடும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. கடந்த 6–ந்தேதி இரவில் ராமேசுவரத்தில் இருந்து ஒரு படகில் 6 மீனவர்கள் மீன்பிடிக்க புறப்பட்டனர். தனுஷ்கோடிக்கும், கச்சத்தீவுக்கும் நடுவில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, 2 பேர் பயணம் செய்யக்கூடிய 5 வாட்டர் ஸ்கூட்டர்களிலும், அதிவிரைவு படகுகளிலும் வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சுற்றிவளைத்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். எல்லா மீனவர்களும் பயந்துபோய் படகில் படுத்துக் கொண்டாலும், 21 வயதான பிரிட்ஜோ என்ற வாலிபரின் கழுத்தில் குண்டுபாய்ந்து அப்படியே ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

இந்தசம்பவத்தில், மற்றொரு மீனவரான சரோன் என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக கரையை நோக்கி வேகமாக வந்தனர். அடுத்த கொஞ்சநேரத்தில் அதாவது நள்ளிரவு 12.15 மணியளவில் ராமேசுவரம் துறைமுகப்பகுதிக்கு அந்தபடகு வந்துசேர்ந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு சென்றாலும், வருகிற வழியிலேயே பிரிட்ஜோ மரணமடைந்து விட்டார். பிரிட்ஜோவுடன் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், ‘நாங்கள் இந்திய எல்லைக்குள் பேச்சாளை என்று கூறப்படும் மத்தி அல்லது சாளை மீன்களைத்தான் பிடித்துக்கொண்டிருந்தோம். இது இந்திய கடல்பகுதிக்குள்தான் கிடைக்கும்’ என்று தெளிவாக கூறுகிறார்கள். ராமேசுவரம் கடற்கரையிலிருந்து சர்வதேச கடல் எல்லை 22.22 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. துப்பாக்கிச்சூடு நடந்து ஏறத்தாழ 2 மணிநேரத்திற்குள்ளேயே பிரிட்ஜோ சென்ற படகு கரைக்கு வந்துவிட்டது. இந்த கணக்குகளையெல்லாம் வைத்துப்பார்த்தால் நிச்சயமாக அவர்கள் சர்வதேச கடல்எல்லையை தாண்டியிருக்க முடியாது என்பதுதான் பெரும்பாலான மீனவர்களின் கருத்தாகும். அப்படியே எல்லையைத்தாண்டி சென்றிருந்தாலும், அதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தவேண்டும் என்பது சரியான நியதியல்ல. எப்படி சர்வதேச கடல்எல்லையை தாண்டி, இந்திய கடல்எல்லைக்குள் மீன்பிடித்துக்கொண்டிருந்த இலங்கை மீனவர்களை இந்திய கடற்படை பிடித்ததோ, அதுபோல எந்தவித வன்முறையும் இல்லாமல் தமிழக மீனவர்களை பிடித்து இலங்கை சிறைக்கு கொண்டு போயிருந்திருக்கலாம். பிரிட்ஜோவை சுட்டுக்கொலை செய்ததற்கு இலங்கை அரசாங்கம் பதில் சொல்லியே தீர வேண்டும். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை இந்திய அரசாங்கம் கைது செய்து மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சமீப காலங்களாக கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை வேட்டையாடுவதுபோல, இலங்கை கடற்படை விரட்டி, விரட்டிப்பிடிக்கிறது. ஏற்கனவே கடந்த 4, 5–ந்தேதிகளிலும் இதுபோல 3 சம்பவங்களில் 32 தமிழக மீனவர்களை கைது செய்து, அவர்கள் சென்ற 5 மீன்பிடி படகுகளையும் இலங்கை கடற்படை கைப்பற்றி சென்றிருக்கிறது. வெகுகாலமாகவே மத்திய அரசாங்கத்திடம், தமிழக அரசு கோருவது, இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்துங்கள் என்பதுதான். அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தைகளில் எல்லாம் துப்பாக்கிச்சூடு நடத்தப்படமாட்டாது என்று உறுதியளித்தும், இப்போது ஒரு உயிர் பலியாகியிருக்கிறது. தமிழக மீனவர்களுக்கு ஆழ்கடலில் மீன்பிடிக்க பயிற்சியளித்து அதற்கு தேவையான படகுகள், உபகரணங்கள் வாங்க தமிழக அரசு ரூ.1,650 கோடி கேட்டுக் கொண்டிருக்கிறது. அதை உடனடியாக மத்திய அரசாங்கம் வழங்க வேண்டும். அதுபோல, இனியும் காலதாமதம் செய்யாமல் நிரந்தரதீர்வு காண வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக்கையாக இருக்கிறது.

Next Story