விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்துவிடுமே


விலைவாசி  உயர்வுக்கு  வழிவகுத்துவிடுமே
x
தினத்தந்தி 9 March 2017 9:30 PM GMT (Updated: 2017-03-09T19:04:29+05:30)

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்டு ரீகன் சிறந்த பொருளாதார நிபுணரும், சமூகவியல் நிபுணரும் ஆவார். அவர்கூறிய பல கருத்துரைகள் இன்றளவும் மேற்கோள்களாக காட்டப்பட்டு வருகின்றன.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்டு ரீகன் சிறந்த பொருளாதார நிபுணரும், சமூகவியல் நிபுணரும் ஆவார். அவர்கூறிய பல கருத்துரைகள் இன்றளவும் மேற்கோள்களாக காட்டப்பட்டு வருகின்றன. விலைவாசி உயர்வு அதாவது, பணவீக்கம் குறித்து அவர் அன்று கூறியது இன்றும் யதார்த்த உண்மையாக இருக் கிறது. பணவீக்கம் அதிகமானால் நிச்சயமாக பொருளா தாரத்தில் பெரிய பாதிப்பு ஏற்படும். அதனால்தான் விலைவாசி உயர்வுபற்றி ரீகன் கூறும்போது, ‘‘விலைவாசி உயர்வு என்பது ஒரு திருடனைப்போன்ற கொடூரமானது. ஆயுதம் ஏந்திய வழிப்பறி கொள்ளைக்காரனைப்போல அச்சுறுத்துவது. நம்மை தாக்குபவனைப்போல மரண அடி கொடுப்பது’’ என்றார்.

விலைவாசி உயர்வு என்பதை ஏழை–பணக்காரர் யாருமே விரும்பமாட்டார்கள். ஏனெனில், இது சாதாரண அடிமட்டத்து ஏழையையும் பெரிதும் பாதிக்கும். செல்வந்தர் களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அந்தவகையில், தமிழ் நாட்டில் தற்போது விலைவாசி உயர்வை இன்னும் அதிகரிக்க செய்யும் வகையில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்புக்கூட்டு வரியை தமிழக அரசு திடீரென உயர்த்தி யுள்ளது. வருகிற 16–ந்தேதி தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. பொதுவாக, பட்ஜெட்டில் தான் வரிஉயர்வு, வரிக்குறைப்பு போன்ற மாற்றங்கள் அறிவிக்கப்படும். அடுத்த சிலநாட்களில், தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படஇருக்கிறது. இந்த பட்ஜெட் ‘வரியில்லாத பட்ஜெட்’ என்று அறிவிக்கப்படவேண்டும் என்ற நோக்கத்தினாலோ என்னவோ?, அதுவரை பொறுத் திருக்காமல் திடீரென தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியை உயர்த்தியுள்ளது. பெட்ரோல் மீது ஏற்கனவே 27 சதவீத மதிப்பு கூட்டுவரியும், டீசல் மீது 21.43 சதவீத மதிப்புக்கூட்டு வரியும், தமிழ்நாட்டில் வசூலிக் கப்பட்டு வருகிறது. பெட்ரோலுக்கு 7 சதவீதம் உயர்த்தி, அதாவது 34 சதவீத மதிப்புக்கூட்டுவரி என்றும், டீசலுக்கு 3.57 சதவீதம் அதாவது, இனி மதிப்புகூட்டுவரி 25 சதவீதம் என்றும் உயர்த்தி, அதுவும் உடனடியாக அமலுக்கு வருகிறது என்று தமிழக அரசு அறிவித்துவிட்டது. இதன் காரணமாக, ஒரேநாளில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.78 காசும், டீசலுக்கு ரூ.1.76 காசும் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.70.61 காசுகளாக இருந்த நிலைமாறி, தற்போது ரூ.74.39 காசு களாகி விட்டது. இதுபோல, டீசல் ஒரு லிட்டருக்கு ரூ.60.73 காசுகளாக இருந்த நிலைமாறி, தற்போது ரூ.62.49 காசு களாக மாறிவிட்டது. அரசை பொறுத்தமட்டில், அண்டை மாநிலங்களைவிட தமிழ்நாட்டில்தான் மதிப்புக்கூட்டுவரி குறைவு என்று சொன்னாலும், பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தமட்டில், டெல்லி, கொல்கத்தாவைவிட சென்னை யில்தான் விலை அதிகமாக இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை என்பது இப்போதெல்லாம் சாதாரண ஏழை–எளிய தொழிலாளியையும் பாதிக்கக்கூடியதாகும். அன்றாட பயன்பாட்டிற்கு ஒரு மொபட் இல்லாவிட்டால், ஒரு ஏழை தொழிலாளியால்கூட தன் பணிக்கு செல்லமுடியாது. வாழ்க்கையை நடத்தமுடியாது. அந்தவகையில், ஒவ்வொரு தொழிலாளிக்கும் பெட்ரோல் விலை என்பது அன்றாட செலவாகிவிட்டது. அதுபோல, டீசல் விலை உயர்வு என்பது அனைத்துபொருட்களின் விலையையும் உயர்த்த வழிவகுத்துவிடும். ஏனெனில், பெரும்பாலான பொருட்கள் லாரி மூலம்தான் சந்தைக்கு எடுத்துக்கொண்டுவரப்படு கின்றன. இந்த டீசல் விலை உயர்வால், சரக்கு போக்கு வரத்து கட்டணம் உயரும் நிலையில், நிச்சயமாக அதன் தாக்கம் சாதாரண மக்களுக்கு விலைவாசி உயர்வாகத்தான் அவர்கள் தலையில் சுமத்தப்படும். கடுமையான வறட்சி நிலவும் இந்த நேரத்தில், எல்லாப்பொருட்களின் விலையும் உயர்ந்துள்ள நிலையில், இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது நிச்சயமாக விலைவாசி உயர்வுக்கு மேலும் வழிவகுக்கும் என்பதால், தமிழக அரசு இதை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

Next Story