பிரசவத்தில் சிசேரியன் அறுவை சிகிச்சை


பிரசவத்தில்  சிசேரியன்  அறுவை சிகிச்சை
x
தினத்தந்தி 10 March 2017 9:30 PM GMT (Updated: 2017-03-10T20:09:38+05:30)

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மந்திரி மேனகாகாந்தி எப்போதுமே அதிரடி அறிவிப்புகளை அறிவிப்பது வழக்கம். இப்போது மத்திய சுகாதார மந்திரிக்கு அவர் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

த்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மந்திரி மேனகாகாந்தி எப்போதுமே அதிரடி அறிவிப்புகளை அறிவிப்பது வழக்கம். இப்போது மத்திய சுகாதார மந்திரிக்கு அவர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் நடக்கும் பிரசவங் களில் எத்தனை பிரசவங்கள் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலமாக நடைபெற்றது? என்பதை விளக்கும் போர்டுகள் வைக்கப்பட வேண்டும் என்று எழுதியிருக்கிறார். தகுந்த மருத்துவக் காரணம் இல்லாமல், பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு இயற்கையான பிரசவம் நடைபெறவிடாமல், சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து பிரசவம் நடத்தும் மகப்பேறு நிபுணர்களை பெயரிட்டு, அவர்களை வெட்கப் படுத்தவேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார். டாக்டர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், பெண்கள் மத்தியிலும் இந்த அறிவிப்புக்கு ஆதரவு இல்லை.

ஒரு காலத்தில் குழந்தைபேறு என்பது ‘மறுபிறவி’ எடுத்தது போல கருதப்பட்டது. தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால், 34.1 சதவீத பிரசவங்கள் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலமாகத்தான் நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் சிசேரியன் அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை 1.5 சதவீதம் உயர்ந்து கொண்டேப் போகிறது. 90 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில்தான் நடக் கின்றன. ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கு பிரசவங்கள் அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ, அல்லது அரசு மருத்துவமனைகளிலோதான் நடக்கின்றன. இத்தகைய அரசு மருத்துவமனைகளில் நடக்கும் பிரசவங் களில் 25 சதவீதம் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலமாகத் தான் நடக்கிறது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாகத் தான் இத்தகைய சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் நிலையில், அங்கு நடக்கும் சிசேரியன் அறுவை சிகிச்சைகள் பணத்துக்காக நடக்கிறது என்று யாராலும் நிச்சயமாக சொல்ல முடியாது. மேலும், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் பெரும்பாலான தாய்மார்களுக்கு அதாவது, 6 லட்சத்து 50 ஆயிரம் தாய்மார்களுக்கு தமிழக அரசு ‘‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின்’’ கீழ் 3 தவணைகளில் ரூ.12 ஆயிரம் உதவித் தொகையாக வழங்கியது. இந்தத்தொகை இப்போது ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகையை பெறும் தாய்மார்கள், கர்ப்பம் அடைந்து 3–வது மாதத்தி லிருந்து முக்கியமான அனைத்து மருத்துவ சோதனை களுக்கும் உட்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில்தான் பிரசவம் நடக்கிறது.

எனவே, பெரும்பாலான தாய்மார்களின் சிசேரியன் அறுவை சிகிச்சைப் பற்றி எந்தகுறையும் சொல்லமுடியாது. அரசு மருத்துவமனைகளிலேயே நடக்கும் சிசேரியன் அறுவை சிகிச்சை எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 11 சதவீதம் உயர்ந்திருக்கிறது. தனியார் மருத்துவமனை களில் நடக்கும் பிரசவங்களிலும் 51.3 சதவீத பிரசவங்கள் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம்தான் நடக்கிறது. காரணம் இல்லாமல், எந்த டாக்டரும் சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு வலியுறுத்த மாட்டார்கள். இப்போதுள்ள பெண்கள் பலர் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு விதமான நோய்களுக்கு ஆட்படுவதால், உடல் உழைப்பு இல்லாமல் இருப்பதால், அவர்களே இயற்கை பிரசவம் என்றால் என்ன ஆகுமோ? என்றும், நல்லநேரத்தில் குழந்தை பிறக்கவேண்டும் என்பதற்காகவும் பாதுகாப்பான சிசேரியன் அறுவை சிகிச்சையை வற்புறுத்துகிறார்கள். ஒருபுறம் சிசேரியன் அறுவை சிகிச்சை எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருந்தாலும், மறுபுறம் குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை மற்றும் மகப்பேறு காலத்தில் தாய் மார்களின் இறப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரம் குழந்தைகளுக்கு 30 என்ற எண்ணிக்கையாக இருந்தது. இப்போது 19 ஆக குறைந்து விட்டது. இதேபோல, பெண்கள் இறப்பு விகிதமும் வெகுவாக குறைந்துள்ளது. பிரசவம் எவ்வாறு நடக்க வேண்டும் என்பதை டாக்டர்களும், கர்ப்பிணி பெண்களும் மற்றும் அவர்களது குடும்பத் தினரும்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, இதில் அரசு தலையீடு என்பதோ, டாக்டர்களை பெயரிட்டு அவமதிப்பது என்பதோ நிச்சயமாக ஏற்புடையதல்ல.

Next Story