தேர்தல் முடிவுகள் சொல்லும் பாடம்


தேர்தல் முடிவுகள் சொல்லும் பாடம்
x
தினத்தந்தி 12 March 2017 9:30 PM GMT (Updated: 12 March 2017 12:00 PM GMT)

2019–ல் நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. எல்லோருமே மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்குமா?, அல்லது காங்கிரஸ் உயிர்பெற்று எழுந்துவிடுமா? என்ற கணிப்புகளுடன் இருக்கிறார்கள்.

2019–ல் நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. எல்லோருமே மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்குமா?, அல்லது காங்கிரஸ் உயிர்பெற்று எழுந்துவிடுமா? என்ற கணிப்புகளுடன் இருக்கிறார்கள். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 4–ந் தேதி முதல் இந்த மாதம் 8–ந் தேதிவரை உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8–ந் தேதி பிரதமர் நரேந்திரமோடி திடீரென 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தபிறகு நடக்கும் முதல் தேர்தல் என்றநிலையில், இதற்கு பொதுமக்களின் ஆதரவு இருக்கிறதா? இதுபோல, பா.ஜ.க. அரசாங்கத்தின் திட்டங்கள் அனைத்துக்கும் மக்கள் ஆதரவு உண்டா? என்பதை இந்த தேர்தலிலே பார்த்துவிடலாம் என்ற பொதுவான கருத்து இருந்தது. இதில், உத்தரபிரதேச மாநில தேர்தல் முடிவு எல்லோரையும் உன்னிப்பாக கவனிக்க வைத்தது. ஏனெனில், நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலம் உத்தரபிரதேசம். ஜனாதிபதி தேர்தலில் தங்கள் வேட்பாளரின் வெற்றிக்கும், டெல்லி மேல்–சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை தங்கள் கட்சிக்கு அதிகரிக்கவும், உத்தரபிரதேச தேர்தல் வெற்றி எல்லோருக்கும் பெரிதும் கைகொடுக்கும்.

இப்போது நடந்த சட்டமன்ற தேர்தல்களில் உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. 14 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய வெற்றியைப் பெற்றுள்ளது. மற்றகட்சிகளை பக்கத்திலேயே காணவில்லை. சுனாமி புயல்போல இது அரசியலில் ‘சுநமோ’ புயல் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பா.ஜ.க. 312 இடங்களில் தனியாக வெற்றி பெற்றுள்ளது. இதன் கூட்டணி கட்சிகள் 13 இடங்களை கைப்பற்றியுள்ளன. உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 70 இடங்களில் 57 இடங்களில் பா.ஜ.க.தான் வெற்றி வாகை சூடியுள்ளது. பஞ்சாப்பில் மட்டும் சிரோமணி அகாலிதளம்–பா.ஜ.க. கூட்டணியை தோற்கடித்து மொத்தமுள்ள 117 இடங்களில் காங்கிரஸ் 77 இடங்களில் வெற்றிபெற்று 10 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் அரியணை ஏறுகிறது. கோவா, மணிப்பூரில் நிலைமை இழுபறியாக உள்ளது. மொத்தம் 40 தொகுதிகளைக் கொண்ட கோவாவில் காங்கிரஸ் 17 இடங்களிலும், பா.ஜ.க. 13 இடங்களிலும்தான் வெற்றிபெற்று இருக்கிறது. இதுபோல, மணிப்பூரிலும் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் காங்கிரஸ் 28 இடங்களிலும், பா.ஜ.க. 21 இடங்களிலும் வெற்றிபெற்று இருக்கிறது. இருவருக்குமே தனிப்பெரும்பான்மை இல்லாதநிலையில் ஒருசில இடங்களில் மட்டும் வெற்றிபெற்று இருக்கும் சுயேட்சைகளும், மாநில கட்சிகளும்தான் ‘கிங்மேக்கர்’களாக இருந்து இரு கட்சிகளில் ஒருவரை ஆட்சி கட்டிலில் அமர வைப்பார்கள். ஓட்டு சதவீதத்தை எடுத்துக்கொண்டால் பஞ்சாப்பை தவிர மற்ற மாநிலங்கள் எல்லாவற்றிலும் மற்ற கட்சிகளைவிட பா.ஜ.க.வுக்குதான் அதிகம் கிடைத்துள்ளது. மொத்தத்தில் 2012 தேர்தல் முடிவுகள் அப்படியே மாறிவிட்டன.

உத்தரபிரதேச மாநிலத்தில் தலித்துகள் ஏறத்தாழ 20 சதவீதமும், இஸ்லாமியர்கள் ஏறத்தாழ 20 சதவீதமும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ஏறத்தாழ 40 சதவீதமும், உயர்வகுப்பினரும் ஏறத்தாழ 20 சதவீதத்தினரும் இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், மக்கள் சாதிவாரி கணக்குகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டியுள்ளன. இந்த தேர்தல் அளித்துள்ள பாடம், வாக்காளர்கள் மிகத்தெளிவான முடிவுகளை எடுக்கும் ஆற்றல் பெற்றவர்கள் என்பதுதான். சாதி, மதம், இனம் அவர்களுக்கு இரண்டாம்பட்சம்தான். தங்கள் மாநிலத்தில் எந்தக்கட்சி வெற்றிபெற்றால், சிறப்பான ஆட்சி நடத்துவார்கள் என்றவகையில், அந்தந்த மாநிலங்களுக்குரிய சாதக, பாதகங்களை ஆராய்ந்து ஓட்டளித்திருக்கிறார்கள். மிக முக்கியமாக ஊழல் புகார்களுக்கு கடும் எதிரான உணர்வலையில்தான் இன்றைய இளைய சமுதாயம் இருக்கிறது. மொத்தத்தில், மக்கள் மனதில் இப்போது வளர்ச்சி ஒன்றுதான், அதுவும் தங்கள் மாநிலத்தின் வளர்ச்சிதான் கண்ணில் தெரிகிறது. இதுதான் இனி எல்லா தேர்தல்களிலும் எதிரொலிக்கும்.

Next Story