வரவேற்க வேண்டிய குடிமராமத்து திட்டம்


வரவேற்க வேண்டிய குடிமராமத்து திட்டம்
x
தினத்தந்தி 13 March 2017 8:30 PM GMT (Updated: 2017-03-13T19:51:50+05:30)

பண்டைய காலங்களில் தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புறங்களில் மக்கள் தங்கள் அடிப்படை வசதிகளை தாங்களே உருவாக்கினார்கள், பராமரித்தார்கள். தங்கள் உடல் உழைப்பையும் வழங்கினார்கள்.

ண்டைய காலங்களில் தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புறங்களில் மக்கள் தங்கள் அடிப்படை வசதிகளை தாங்களே உருவாக்கினார்கள், பராமரித்தார்கள். தங்கள் உடல் உழைப்பையும் வழங்கினார்கள். தொழிற்சாலைகளெல்லாம் தோன்றுவதற்கு முன்பு மக்களுக்கு தெரிந்த ஒரேதொழில் விவசாயம்தான். அப்போதெல்லாம் விவசாயத்துக்குத் தேவையான தண்ணீர் வழங்கும் ஏரிகள், குளங்கள், வாய்க்கால்களை ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்தும்பணி, சாலைகளை உருவாக்கி சீரமைக்கும் பணி, சாலைகளின் குறுக்கேயுள்ள மரங்களை வெட்டும்பணி போன்ற பலபணிகளை அந்தந்த ஊர் மக்களே செய்துவந்தார்கள். இதற்காக தேவைப்படும் பணத்தை ‘‘ஊர்ப்படி’’ என்றபெயரில் அறுவடை நேரங்களிலும், பொருட்களை விற்கும்போதும் தானியமாகவோ, பணமாகவோ பெற்றுவந்தார்கள். ஒவ்வொரு ஊரிலும் இந்த ஊர்ப்படியை வசூலிக்கும் கணக்கர் ஒருவர் இருப்பார். அந்தபணத்தை வைத்துக்கொண்டு, அந்த கிராம தலைவர் மேற்பார்வையில் பெரியவர்களைக் கொண்ட ஒருசபை அனைத்துபணிகளையும் செய்யும். கிராம மக்களின் உடல்உழைப்பும் இருக்கும். இதைத்தான் குடிமராமத்து என்று காலம்காலமாக சொல்லிவந்தார்கள்.

குடிமராமத்து பணிகளின் எடுத்துக்காட்டுதான், காவிரி ஆற்றின் குறுக்கே கரிகாலன் சோழன் மன்னரால் கட்டப்பட்டு இன்றும் கம்பீரமாக காட்சி அளிக்கும் ‘‘கல்லணையாகும்’’. ‘‘கல்லணையை’’ நிர்வகித்தது குடிமராமத்து என்றபெயரில் விவசாயிகள்தான். இன்றைய காலகட்டத்திலும் தற்போது கடுமையான வறட்சி நிலவிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அரசு மட்டுமல்லாமல், பொதுமக்களையும் இதுபோன்று நீர்நிலைகளை பராமரிக்க ஈடுபடுத்தி கொள்ளும்வகையில், பண்டையகால குடிமராமத்து திட்டத்தை மீண்டும் தமிழக அரசு கொண்டுவந்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். கிராம மக்கள் தங்கள் உழைப்பு மற்றும் பொருள், பணம் பங்களிப்பு மூலம் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நீர்நிலைகளை பராமரிக்கும் திட்டம்தான் இது. இந்த திட்டத்தின்படி, வரத்து கால்வாய்கள், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகளை புனரமைத்தல், பலப்படுத்துதல் ஆங்காங்குள்ள நீர்நிலைகளில் இருக்கும் கலுங்குகள், மதகுகளை மீண்டும் கட்டுதல், நீர்வழிகளில் அடைத்திருக்கும் ஆகாய தாமரை போன்ற செடிகளை அகற்றுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

10 லட்சம் ரூபாய்க்கு குறைவான மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் பணிகள் அங்குள்ள விவசாயிகள், பாசன சபைகள், ஆயக்கட்டுதாரர்கள் மற்றும் ஆயக்கட்டுதாரர்களின் தொகுப்பின்மூலம் அவர்களாலேயே மேற்கொள்ளப்படும். பொதுப்பணித்துறை தீட்டும் திட்டங்களை பொதுமக்கள் செயல்படுத்துவார்கள். இந்த ரூ.10 லட்சத்துக்கு குறைவான மதிப்பீட்டில் 10 சதவீத தொகையை பாசன சங்கங்களிலிருந்து உழைப்பாகவோ, பொருளாகவோ, பணம் பங்களிப்பாகவோ பெறப்பட திட்டமிட்டுள்ளது. இந்த நிதிஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள 30 மாவட்டங்களில் 1,519 பணிகள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. வறட்சி நிலவும் இந்த நேரத்தில், கிராம மக்களுக்கு வேறுபணிகள் இல்லாததால் நிச்சயமாக அனைவரும் இதில் ஈடுபடமுடியும். தமிழ்நாடு முழுவதுக்கும் ரூ.100 கோடி என்பது நிச்சயமாக போதாது. இந்த தொகையை அரசே இன்னும் அதிகரிக்கவேண்டும். நமது ஊருக்கான பணிகளை நாம்தான் செய்கிறோம் என்ற பெருமிதத்தை பொதுமக்கள் கொள்ளவேண்டும். மேலும், மிகத்தீவிரமாக இந்த பணியில் ஈடுபடுவதற்கு விவசாய சங்கங்கள், ஊர் பெரியவர்கள், கிராமசபைகளை ஊக்குவிக்கவேண்டும். அனைத்து நீர்நிலைகளையும் ஆழப்படுத்தவும், கரைகளை உயர்த்தவும், சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்றவும், எல்லாவற்றுக்கும் மேலாக நீர்நிலைகளை பாழ்படுத்திக்கொண்டிருக்கும் ஆகாய தாமரைகளை அடியோடு ஒழிக்கவும் இந்தத்திட்டம் நிச்சயமாக பெரும்பயனை விளைவிக்கும். ‘‘குடிமராமத்து பணிகளை செயல்படுத்துவோம், எங்கள் ஊரிலுள்ள அனைத்து பராமரிப்பு பணிகளையும் நாங்களே மேற்கொள்வோம், மற்ற ஊர்களுக்கு எடுத்துக்காட்டாக எங்கள் ஊர் திகழ்கிறது’’ என்ற பெருமையைப்பெற அனைத்து கிராம மக்களும் உறுதி மேற்கொள்ளவேண்டிய நேரம் இது.


Next Story