நிதிநிலை பாதிப்பில் பட்ஜெட்


நிதிநிலை பாதிப்பில் பட்ஜெட்
x
தினத்தந்தி 16 March 2017 8:30 PM GMT (Updated: 16 March 2017 2:54 PM GMT)

பொதுவாக ஒவ்வொரு ஆண்டும், அரசின் பொதுபட்ஜெட்டை மக்கள் ஆவலோடு எதிர்பார்ப்பார்கள்.

பொதுவாக ஒவ்வொரு ஆண்டும், அரசின் பொதுபட்ஜெட்டை மக்கள் ஆவலோடு எதிர்பார்ப்பார்கள். ஏனெனில், பட்ஜெட்டில்தான் அரசின் வரவு–செலவு திட்டங்கள் தெளிவாக தெரியும். அரசின் வருவாய் எவ்வளவு?, செலவு எவ்வளவு?, பற்றாக்குறை எவ்வளவு?, கடன் எவ்வளவு? என்பதை மக்கள் அறிந்து கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல், அரசு என்னென்ன புதிய திட்டங்களை நிறைவேற்றப்போகிறது?, என்னென்ன வரிமாற்றங்கள் செய்யப் போகிறது? என்பதையெல்லாம் காட்டும் காலக்கண்ணாடிதான் பொதுபட்ஜெட். தமிழக சட்டசபையில் ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்ற வகையில், நிதி அமைச்சர் ஜெயக்குமார் 100 பக்க பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். ஜெயக்குமாருக்கும் இதுதான் முதல் பட்ஜெட். பட்ஜெட்டில் ஜெயக்குமார் நிறைய சலுகைகள், புதிய திட்டங்களை அறிவிப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால், 2 மணி 35 நிமிடம் பட்ஜெட் உரையை வாசிக்க நேரம் எடுத்துக் கொண்ட ஜெயக்குமார், ஒரு கட்டத்தில் எக்ஸ்பிரஸ் வேகத்தில் உரையை வாசித்தார்.

புதிய வரிகள் இல்லையென்று பட்ஜெட்டிலேயே நிதி அமைச்சர் தெரிவித்திருக்கிறார். ஆனால், அடுத்த சில மாதங்களில் அமலுக்கு வர இருக்கும் சரக்கு சேவை வரியால் பல பொருட்களுக்கு வரி உயருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு சரக்கு சேவைவரியில் அதிக வரிச்சுமை இல்லாமல் பார்த்துக் கொள்வதற்கு தமிழக அரசு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்றபடி, 3½ லட்சம் ஏழைக்குடும்பங்களுக்கு இலவச மனை பட்டா வழங்கப்படும் என்று பெருமையோடு சொல்லியிருக்கிறார். கிராமப்புற மேம்பாட்டு திட்டங்கள், நீர்வள நிலதிட்டங்கள் மற்றும் கால்நடை வளர்ச்சி, மீன்வள வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்கள் வரவேற்புக்குரியது. ஒரு லட்சம் இளைஞர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி, ஒரு லட்சம் பெண்களுக்கு மானியவிலையில் ஸ்கூட்டர் வாங்க நிதி ஒதுக்கீடு, ஒரு கோடி டன் உணவு உற்பத்தி செய்ய இலக்கு போன்றவை அனைவராலும் பாராட்டப்படும். மற்றபடி எல்லா திட்டங்களும் ஏற்கனவே நிறைவேற்றப்படும் திட்டங்கள்தான். அதற்கு நிதி ஒதுக்கீடுதான் அதிகரிக்கப்பட்டுள்ளதே தவிர, புதிதாக எதுவும் இல்லை. இந்த ஆண்டு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். ஏற்கனவே நடந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் எவ்வளவு புதிய தொழில்கள் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளன?, எவ்வளவு பேருக்கு புதிதாக வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன? என்பதையெல்லாம் தெரிவித்தால் தான், இத்தகைய சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். வேலைவாய்ப்புகளை பெருக்க பெரிய அளவில் புதிதாக எந்தவித திட்டங்களும் இல்லாதது பெரிய குறைபாடாகும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அலகுகள் செயலிழந்ததன் காரணங்களை தொழில் வாரியாக கண்டறிவதற்கும், அத்தகைய தொழில்கள் மீண்டும் செயல்பட புத்துயிரூட்டுவதற்கு உரிய உதவி செய்ய அரசு ஒரு சிறப்பு ஆய்வை மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது. இப்படி தொழில்கள் வீழ்ச்சி அடையும் நிலையில், மொத்த உற்பத்தி மதிப்பு எப்படி உயரும்?, வேலைவாய்ப்பு எப்படி பெருகும்?.

இதுமட்டுமல்லாமல், கடந்த ஆண்டு பட்ஜெட்டை விட, வருவாய் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை, மொத்த கடன் சுமை எல்லாமே உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு தமிழக அரசின்மீது உள்ள கடன் ரூ.2 லட்சத்து 52 ஆயிரத்து 431 கோடியாக இருந்தது. ஆனால், இப்போது ரூ.3 லட்சத்து 14 ஆயிரத்து 366 கோடியாக உயர்ந்திருக்கிறது. இதற்கு காரணம், உதய் திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த ஒப்புக்கொண்டதால், மின்சார வாரிய கடனான ரூ.22 ஆயிரத்து 815 கோடியை அரசே ஏற்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்று கூறினாலும், இவ்வளவு கடன் தொகை ஒரு அரசுக்கு இருப்பது நிச்சயமாக அதன் பொருளாதார நிலையை பெரிதும் பாதிக்கும். ஆக, மொத்தத்தில் தமிழக அரசின் நிதிநிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. இதை வைத்துக்கொண்டு வளர்ச்சித்திட்டங்கள் எதையும் நிறைவேற்ற முடியாது. நிதிமேலாண்மையில் கவனம் செலுத்தவேண்டும் என்பதுதான் யதார்த்தமான உண்மையாக இருக்கிறது.

Next Story