பவானி ஆற்றின் குறுக்கே கேரளாவில் தடுப்பணை


பவானி ஆற்றின் குறுக்கே கேரளாவில்  தடுப்பணை
x
தினத்தந்தி 20 March 2017 8:30 PM GMT (Updated: 20 March 2017 6:57 PM GMT)

தமிழ்நாட்டில் எப்போதுமே எந்த பிரச்சினைகள் தலையெடுத்தாலும், உடனடியாக அரசியல்கட்சிகள் ஆர்ப்பாட்டமாக அதுபற்றி அறிக்கை வெளியிடும்.

மிழ்நாட்டில் எப்போதுமே எந்த பிரச்சினைகள் தலையெடுத்தாலும், உடனடியாக அரசியல்கட்சிகள் ஆர்ப்பாட்டமாக அதுபற்றி அறிக்கை வெளியிடும். அரசு நடவடிக்கை எடுக்கிறேன் என்றுகூறும். ஆனால், இந்த வேகம் தொடர்ந்து இல்லாமல் போய் விடுவதால், முயற்சிகள் பட்டுப்போய் விடுகின்றன. அதேநேரத்தில் முதலில் முளைவிட்ட அந்தபிரச்சினை வேகமாக வளர்ந்து, ஒருகட்டத்தில் யாராலும் தடுக்க முடியாத வகையில் ஆழமாக வேரூன்றி விடுகிறது. அதுபோன்ற ஒரு பிரச்சினைதான் பவானிஆற்றின் குறுக்கே இப்போது கேரள அரசு தடுப்பணை கட்டிய விவகாரம். ஆரம்பத்தில் இருந்த வேகம் அரசிலும், அரசியல் கட்சிகளிடமும் இப்போது இல்லை. தமிழ்நாட்டில் ஆற்றுவளம் மிகமிகக் குறைவு. இருக்கும் கொஞ்சநஞ்ச ஆற்றுத் தண்ணீரை வைத்து தான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் குடிநீர் பற்றாக்குறையையும், விவசாயத்தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ‘தாமிரபரணி’ ஆறு ஒன்றுதான் தமிழ்நாட்டிலேயே உற்பத்தியாகி, தமிழ்நாட்டிலேயே கடலில் கலக்கிறது. இதுபோல, உருவாகும் மற்றொரு ஆறு பவானி ஆறாகும். காவிரியின் கிளை ஆறுகளில் ஒன்றான பவானி ஆறு, நீலகிரி மாவட்டம், குந்தா மலைப்பகுதியில் அப்பர் பவானியில் உற்பத்தியாகி சிறிதுதூரம் தமிழ்நாட்டில் ஓடி, முக்காலி வழியாக கேரள வனப்பகுதிக்குள் நுழைந்து விடுகிறது. தமிழ்நாட்டில் உருவாகும் இந்த பவானி ஆறு, அட்டப்பாடி பள்ளத்தாக்கை வளப்படுத்தி மீண்டும் கிழக்குநோக்கித் திரும்பி அத்திக்கடவு வழியாக தமிழ்நாட்டுக்குள் நுழைந்துவிடுகிறது.

கேரளாவில் ஒட்டுமொத்தமாக 22 கிலோமீட்டர் தூரம்தான் பவானி ஆறு ஓடுகிறது. கேரள அரசாங்கம் தங்கள் எல்லைக்குள் ஓடும் பவானிஆற்றில் தேக்குவட்டை, மஞ்சிக்கண்டி, சாலையூர், சீரக்கடவு, பாடவயல், சாவடியூர் ஆகிய 6 இடங்களில் தடுப்பணைகளை கட்டி தண்ணீரை தேக்கிவைக்க திட்டமிட்டது. இந்த 6 தடுப்பணைகளும் கட்டப்பட்டால், பவானி ஆற்றில் ஓடும் பெரும்பாலான தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, தமிழ்நாட்டுக்கு தண்ணீரே வராதநிலை ஏற்பட்டு விடும். ஏனெனில், கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர் போன்ற நகரங்களுக்கு பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பில்லூர் அணையிலிருந்துதான் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 2½ லட்சம் ஏக்கருக்கு மேலான நிலங்களுக்கு நீர்ஆதாரம் பவானிஆற்றின் மூலமாகத்தான் நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில், தற்போது கேரள நீர்ப்பாசனத்துறை முதல் தடுப்பணையான தேக்குவட்டை தடுப்பணையை கட்டிமுடித்துவிட்டது. அட்டப்பாடி பகுதியில் குடிநீர் பற்றாக்குறை மற்றும் விவசாய தேவைகளுக்காக இந்த தடுப்பணையை கட்டுகிறோம் என்று காரணம் கூறுகிறது. 77 மீட்டர் நீளமும், 1½ மீட்டர் உயரமும் கொண்ட இந்த தடுப்பணை, கேரள அரசு திட்டமிட்ட 6 தடுப்பணைகளில் முதல் தடுப்பணையாகும்.

கோவையில் இருந்து தமிழ்நாட்டுக்குள் பவானி ஆறு நுழைவதற்கு முன்னால் இந்த தடுப்பணை கட்டப்பட்டுவிட்டது. அடுத்த தடுப்பணையான மஞ்சிக்கண்டி தடுப்பணையிலும் வேகமாக வேலை முடிந்துவருகிறது. அந்தபணி இன்னும் ஒரு மாதத்தில் முடிந்துவிடும் என்று கருதப்படுகிறது. அதுவும் முடிந்து, அடுத்த 4 தடுப்பணைகளும் கட்டிமுடிக்கப்பட்டுவிட்டால், பவானி ஆற்றில் தண்ணீரை பார்க்கமுடியாது. வளமான பவானி ஆறு வறண்டுபோய் கிடக்கும் பவானி ஆறாகி விடும். பவானிஆறு காவிரி ஆற்றின் கிளை ஆறு என்றவகையில், தமிழக அரசு இனியும் மெத்தனமாக இருக்காமல், போர்க்கால நடவடிக்கை எடுத்து, இந்த தடுப்பணைகள் கட்டும் முயற்சியை தடுத்துநிறுத்தாவிட்டால், கொங்குமண்டலம் பஞ்சமண்டலாக ஆகப்போவதை தடுக்கவே முடியாது. இதற்கு சரியான தீர்வு வேண்டுமென்றால், இருமாநிலங்களுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லாத ஒரு சுமுகநிலையை உருவாக்க இரு மாநில முதல்–அமைச்சர்கள் மட்டத்திலும், அதிகாரிகள் மட்டத்திலும் ஒன்றாக உட்கார்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மத்திய அரசாங்கமும் இதில் உரிய பங்காற்ற வேண்டும்.

Next Story