தாகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர்தானா?


தாகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர்தானா?
x
தினத்தந்தி 24 March 2017 9:30 PM GMT (Updated: 24 March 2017 2:43 PM GMT)

‘விவசாயிகள்தான் நாட்டின் முதுகெலும்பு’ என்று எல்லோரும் கூறுகிறார்கள். ‘உழவன் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கைவைக்க முடியும்’ என்று எல்லோருக்கும் தெரியும்.

‘விவசாயிகள்தான் நாட்டின் முதுகெலும்பு’ என்று எல்லோரும் கூறுகிறார்கள். ‘உழவன் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கைவைக்க முடியும்’ என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், விவசாயிகள் தங்களுக்கு கிடைக்கும் வருமானம் நிரந்தரம் என்று இப்போது வாழ்வதில்லை. மழை தாராளமாகபெய்து, தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் கிடைத்தால்தான், போட்ட முதலீட்டையாவது எடுக்கமுடியும் என்ற நிலையில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். 1970–ல் 3 மூட்டை நெல் விற்றால் ஒரு பவுன் தங்கம் வாங்கிவிடலாம் என்றநிலையில்தான் விலைவாசியும் இருந்தது. அப்போது 60 கிலோ கொண்ட ஒரு மூட்டை நெல் விலை ரூ.40. தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.120. 3 மூட்டை நெல் விற்றால் ஒரு பவுன் வாங்கிவிடலாம். ஆனால், தற்போது அரசாங்கம் நெல் கொள்முதல் விலையாக 100 கிலோ கொண்ட ஒரு குவிண்டாலுக்கு ரூ.1,420 தருகிறது. ஆனால், தற்போது ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 176 ஆக இருக்கிறது. விளைபொருள்களுக்கு குறைந்தவிலை கிடைப்பதால்தான் விவசாயிகள் கடும்வேதனையுடன் வாடிக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், நீர்பற்றாக்குறை மாநிலமாகும். மழைபெய்தால்தான் இங்கு விவசாயம் நடக்கும். இந்தநிலையில், தென்மேற்கு பருவமழையும் பொய்த்து, வடகிழக்கு பருவமழையும் பொய்த்து, சாகுபடிசெய்த பயிர்களெல்லாம் கருகி கடன்தொல்லையால் வாடிக்கொண்டிருகிறார்கள். இந்தசூழ்நிலையில், கடந்த ஆண்டு முதலில் ‘வார்தா புயல்’ பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. மத்திய அரசாங்கத்திடம் இருந்து நிவாரணத்தொகையாக ரூ.22 ஆயிரத்து 573 கோடி மாநிலஅரசு நிதிஉதவி கேட்டது. இதுபோல, வறட்சி நிதியாக ரூ.39 ஆயிரத்து 565 கோடி நிதி உதவிகேட்டது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, டெல்லியிலிருந்து வார்தா புயலுக்கும் சரி, வறட்சி நிவாரணத்துக்கும் சரி, மத்திய அரசாங்கம் நிபுணர்குழுவை அனுப்பியது. நிபுணர்குழுவும் தமிழ்நாடு முழுவதும் சுற்றிப்பார்த்தது. வறட்சியால் பயிர்களெல்லாம் கருகி இருந்ததையும், விவசாய நிலம் எல்லாம் பாளம் பாளமாக வெடித்திருப்பதையும், கடன்தொல்லையால் கண்ணீர்வடிக்கும் விவசாயிகளையும் நேரில் பார்த்தது.

நிச்சயமாக வறட்சி நிவாரணக்குழு உறுப்பினர்களும் நமது துயரத்தில் பங்குகொள்வார்கள், தகுந்த நிவாரணம் வழங்க மத்திய அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்வார்கள் என்று ஒட்டுமொத்த தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. இதுபோல, நதிகள் இணைப்பு சங்க தலைவரான அய்யாக்கண்ணு, கடந்த 11 நாட்களுக்கும் மேலாக 84 விவசாயிகளோடு மண்டை ஓடுகளை வைத்துக்கொண்டு தமிழக அரசு கோரும் நிவாரண உதவியை வழங்கவேண்டும் என்று டெல்லியில் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார். ஆனால், எல்லோருடைய நம்பிக்கையையும் பொய்த்துப்போகும் வகையில், எல்லோருக்கும் அதிர்ச்சியளிக்கும் நிலையில், மத்திய அரசாங்கம் வார்தா புயலுக்கும், வறட்சி நிவாரணத்துக்கும் சேர்த்து ரூ.2 ஆயிரத்து 14 கோடியே 45 லட்சத்தை மட்டும் மத்திய நிவாரண நிதியாக ஒதுக்கியுள்ளது. கடும் தாகத்தால் உயிர்போகும் நிலையில், ஒருவன் தண்ணீர் தண்ணீர் என்று கதறுகிறபோது, அவன் தாகத்தை தீர்க்கவேண்டிய பொறுப்பிலுள்ள ஒருவர், ஒரு ஸ்பூனில் ஒரு சொட்டு தண்ணீரை எடுத்து அவன்வாயில் ஊற்றி ‘‘உன் தாகத்தை தணித்துக்கொள்’’ என்று சொல்வதைப்போல இந்த நடவடிக்கை இருக்கிறது. இப்போது தமிழக அரசும், ஒட்டுமொத்த பாராளுமன்ற உறுப்பினர்களும், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றாகநின்று, நாங்கள் கேட்டதொகை முழுவதையும் தராவிட்டாலும் கணிசமாக தரவேண்டும். இப்படி ஏதோ நாங்களும் தந்தோம் என்பதுபோல தந்தால், எதிர்காலத்தில் இதுபோன்ற வறட்சி நிவாரண குழுக்கள் வந்தால் மக்களுக்கு ஒரு நம்பிக்கையில்லாத நிலை ஏற்பட்டுவிடும்.

Next Story