‘நீட்’ தேர்வுக்கான பயிற்சியை தொடங்குங்கள்


‘நீட்’  தேர்வுக்கான  பயிற்சியை  தொடங்குங்கள்
x
தினத்தந்தி 26 March 2017 9:30 PM GMT (Updated: 2017-03-26T17:47:47+05:30)

தமிழ்நாட்டில் தற்போது நடந்துவரும் பிளஸ்–2 தேர்வு 31–ந் தேதி முடிகிறது. 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவர்கள் தேர்வை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இதில், 3 லட்சத்து 90 ஆயிரம் மாணவர்கள் ‘பயாலஜி’ என்ற உயிரியல் பாடத்தின் அடிப்படையில் படித்தவர்கள்.

மிழ்நாட்டில் தற்போது நடந்துவரும் பிளஸ்–2 தேர்வு 31–ந் தேதி முடிகிறது. 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவர்கள் தேர்வை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இதில், 3 லட்சத்து 90 ஆயிரம் மாணவர்கள் ‘பயாலஜி’ என்ற உயிரியல் பாடத்தின் அடிப்படையில் படித்தவர்கள். உயிரியல் பாடத்தை விருப்பப்பாடமாக எடுத்து படித்து தேர்வு எழுதியவர்களின் கனவுப்படிப்பு எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பும், பல் மருத்துவ படிப்பும் ஆகும். இந்த ஆண்டு ‘நீட்’ மூலம்தான் மாணவர் சேர்க்கை நடத்தப்படுமா?, அல்லது வழக்கம்போல பிளஸ்–2 மார்க்குகளின் அடிப்படையில்தான் நடக்குமா? என்று தெளிவான முடிவு தெரியாமல் இன்றளவும் மாணவர்கள் குழம்பிப்போய் இருக்கிறார்கள். ‘நீட்’ தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்புக்கும், எம்.டி., எம்.எஸ். போன்ற பட்டமேற்படிப்புக்கும் விலக்குபெற தமிழக சட்டசபையில் இரு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதலும் பெறப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக மத்திய அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்டு, அப்படியே நிலுவையில் இருக்கிறது.

கடந்தவாரம் வெள்ளிக்கிழமைகூட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனும், மத்திய சுகாதார மந்திரி நட்டா, சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் ஆகியோரை டெல்லியில் சந்தித்து விரைவில் இந்த ஒப்புதல்களையெல்லாம் அளித்து, ஜனாதிபதி ஒப்புதலையும் பெற்றுத்தர வழக்கம்போல கோரினார்கள். அதே நேரத்தில் மத்திய அரசாங்கம் தமிழ்நாட்டில் இப்போது ‘நீட்’ தேர்வுக்காக சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி ஆகிய இடங்களில் நிர்ணயிக்கப்பட்ட மையங்களுடன் கூடுதலாக நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் ஆகிய இடங்களிலும் மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்துவிட்டது. ஆக, ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு கிடைப்பது முழுக்க முழுக்க சந்தேகத்திற்குரியதுதான் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. எம்.டி., எம்.எஸ். போன்ற பட்டமேற்படிப்புகளுக்கு ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு அளிக்கமுடியாது என்று பட்டவர்த்தனமாக மத்திய அரசாங்கம் தெரிவித்துவிட்டது. கிராமப்புறங்களில் பணியாற்றிய டாக்டர்களுக்கு அளிக்கப்படும் ஊக்கமதிப்பெண், இந்த தேர்வில் குறைக்கப்படமாட்டாது என்று மத்திய மந்திரிகள் தெரிவித்துவிட்டனர். ஆக, எந்த நேரத்திலும் எம்.டி., எம்.எஸ். பட்ட மேற்படிப்புக்கான ‘நீட்’ தேர்வு தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட இருக்கிறது.

இதற்கிடையில், டெல்லியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துவருகிறது. மத்திய அரசும் பரிசீலித்து வருகிறது. இருந்தாலும், மாணவர்கள் அதையே நம்பி தேர்வுக்கு தயாராவதை கைவிடக்கூடாது’ என்று வெளிப்படையாக சொல்லிவிட்டார். ‘நீட்’ தேர்வு மே 7–ந் தேதி நடக்க இருக்கிறது. இந்த ஆண்டு தமிழிலும் ‘நீட்’ தேர்வை எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ. கல்வி திட்டத்தில் 11–வது, 12–வது வகுப்பு பாடங்களின் அடிப்படையில் தேர்வு இருக்கும் என்பதால் மாணவர்களுக்கு தேர்வு கஷ்டமாகத்தான் இருக்கும். வழக்கமாக தமிழக அரசு நடத்தும் மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்குக்கு ஏறத்தாழ 40 ஆயிரம் மாணவர்கள்தான் விண்ணப்பிப்பார்கள். இப்போது ‘நீட்’ தேர்வுக்கு 80 ஆயிரத்துக்கும் மேல் விண்ணப்பித்துவிட்டார்கள் என்றால் மாணவர்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள். பல தனியார் பயிற்சி நிலையங்கள் ‘நீட்’ தேர்வு பயிற்சி வகுப்புகளை தொடங்கிவிட்டன. கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள், நடுத்தர வகுப்பு மாணவர்களால் இத்தகைய பயிற்சி மையங்களில் பணம்கட்டி படிக்கமுடியாது என்றநிலையில், தமிழக அரசு இனிமேலும் இலைமறைவு காய்மறைவாக கருத்துகளை சொல்லாமல் வெளிப்படையாக தெரிவித்து, ஏப்ரல் 1–ந் தேதி முதல் மாணவர்களுக்கான ‘நீட்’ பயிற்சி வகுப்புகளை தொடங்கிவிடுவது சாலச்சிறந்ததாகும். ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்றால் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதிலும் உள்ள கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு கிடைக்கும்.

Next Story