தூர்வாரும் பணிகளை மக்களே செய்வார்கள்


தூர்வாரும்  பணிகளை மக்களே  செய்வார்கள்
x
தினத்தந்தி 28 March 2017 9:15 PM GMT (Updated: 28 March 2017 5:19 PM GMT)

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய பசுமை தீர்ப்பாய உறுப்பினர்களான நீதிபதி பி.ஜோதிமணி, தொழில்நுட்பத்துறை உறுப்பினரான பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்தனர்.

டந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய பசுமை தீர்ப்பாய உறுப்பினர்களான நீதிபதி பி.ஜோதிமணி, தொழில்நுட்பத்துறை உறுப்பினரான பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்தனர். தமிழ்நாட்டில் உள்ள அணைகள், ஏரிகள் மட்டுமல்லாமல், எல்லா நீர்நிலைகளையும் தூர்வாரவேண்டும் என்று உத்தரவிட்டனர். அந்தநேரத்தில் விவசாயிகள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர். ஏற்கனவே பல ஆண்டுகளாக தமிழ்நாட்டிலுள்ள நீர்நிலைகள் எல்லாம் தூர்வாரப்படாத நிலையில், தூர்வாரினால் நீரின்கொள்ளளவும் அதிகரிக்குமே என்று எல்லா விவசாயிகளும் இந்த தீர்ப்பை வரவேற்றனர். ஆனால், அந்தநேரத்தில் நிதிப்பற்றாக்குறை காரணமாக அரசு தூர்வாரும் பணிகளை தொடங்கவில்லை. இந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில் பருவமழை பொய்த்துவிட்டதால், கடந்த 146 ஆண்டுகளாக இல்லாத ஒரு கடும்வறட்சி நிலவுகிறது. பொதுவாக இதுபோன்ற தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நேரத்தில் சில பல திட்டங்களை கண்டிப்பாக மேற்கொள்ளவேண்டும்.

1880–ம் ஆண்டு இந்தியாவில் கடுமையான பஞ்சம் நிலவியபோது, அப்போது நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள், வேளாண்மையை வளர்க்கவேண்டும் என்ற எண்ணத்தில், 1882–ம் ஆண்டு வேளாண்மைக்கு என தனியாக ஒரு துறையை உருவாக்கினார்கள். அதுபோல, இன்றைய சூழ்நிலையில், அனைத்து நீர்நிலைகளையும் தூர்வாரும் பணிகளில் அரசாங்கமும் ஈடுபடவேண்டும், பொதுமக்களையும் ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும். நீர்நிலைகளில் மண்டிக்கிடக்கும் மணலுக்கு பொதுமக்களிடம் நல்ல கிராக்கி இருக்கிறது. பெருந்தலைவர் காமராஜர் காலத்தில், கக்கன் மராமத்து மந்திரியாக இருந்தார். அப்போது அனைத்து ஏரிகள், குளங்களில் தூர்வாரும் பணிகளை மக்களைக்கொண்டே செய்யும் ஒருதிட்டம் வகுக்கப்பட்டது. நீர்நிலைகளில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை பயிர்சாகுபடி செய்யும் நிலங்களில் போட்டால் பயிர்கள் செழித்துவளரும். களிமண், செம்மண் போன்றவை செங்கல், ஓடுசெய்ய பயன்படும். அதற்கு கீழே போனால் சவுடு மண் இருக்கும். அதை எடுத்தால் வீடு கட்டுவதற்கும், சிலநேரங்களில் பள்ளங்களை நிரப்புவதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். காமராஜர் காலத்தில் நீர்நிலைகளில் பொதுமக்களே மாட்டுவண்டிகளில் மணல் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. நீர்நிலைகளில் 10 அடி நீளம், 20 அடி அகலம், 3 அடி ஆழத்தில் குழிதோண்டி மணல் எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு மணல் எடுக்க விவசாயிகள் உள்பட பொதுமக்கள் அனைவரும் பல்வேறு தேவைகளுக்காக, தாங்களே மணல் எடுத்தனர். நீர்நிலைகளும் தூர்வாரப்பட்டன.

அதுபோல, இப்போது நீர்நிலைகளில் மண்டிகிடக்கும் மணலை எடுக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கும் அறிவிப்பை அரசாங்கம் வெளியிடவேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், திருவள்ளூர் மாவட்டம் அதற்கு வழிவகுத்துவிட்டது. இந்த மாவட்டத்திலுள்ள நீர்நிலைகளில் இருக்கும் வண்டல் மணலை எடுத்து விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்யும் இடத்தில் பயன்படுத்திக்கொள்ள அவர்களை அனுமதிப்பதற்கான உத்தரவை வழங்க திருவள்ளூர் மாவட்ட கலெக்டரும், நீர்வளத்துறையும் முடிவுசெய்துள்ளது. இந்த மாவட்டத்திலுள்ள 65 நீர்நிலைகளில் விவசாயிகள் இலவசமாக வண்டல் மணல் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், 2 அடி ஆழம்வரை தேங்கியிருக்கும் மணலை மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும் என்று அறிவிக்கப்படுகிறது. நிச்சயமாக இது மிகவும் பயன்தரத்தக்க ஒன்றாகும். இதுபோன்ற அறிவிப்பை தமிழ்நாட்டில் இருக்கும் 39,202 ஏரிகளிலும் செயல்படுத்த தமிழக அரசு அறிவிக்கவேண்டும். இனி பெய்யப்போகும் மழைநீரை ஒரு சொட்டுக்கூட வீணாக்காமல், நீர்நிலைகளில் சேமிக்கவேண்டுமென்றால், உடனடியாக அனைத்து நீர்நிலைகளும் அடுத்த மழைக்கு முன்பு தூர்வாரப்படவேண்டும், அதற்கு பொதுமக்களின் பங்களிப்பையும் அனுமதிக்கவேண்டும். மழைவளமும், ஆற்றுவளமும் குறைவாகவுள்ள தமிழ்நாட்டில், ஒவ்வொரு மழைத்துளியும் வீணாகாமல் சேமித்து வைக்கவேண்டியது காலத்தின் கட்டாயம்.

Next Story