இனி ‘நீட்’ தேர்வு கட்டாயம்


இனி ‘நீட்’ தேர்வு கட்டாயம்
x
தினத்தந்தி 2 April 2017 9:30 PM GMT (Updated: 2 April 2017 6:43 PM GMT)

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு கடந்த 31-ந் தேதி முடிவடைந்துவிட்டது. பிளஸ்-2 தேர்வு எழுதிமுடித்த பெரும்பாலான மாணவர்கள் அடுத்து நாம் என்னசெய்வோம் என்ற ஒரு திட்டவட்டமான முடிவுக்குவந்து அதற்கான முயற்சிகளை தொடங்கிவிட்டநிலையில்

மிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு கடந்த 31-ந் தேதி முடிவடைந்துவிட்டது. பிளஸ்-2 தேர்வு எழுதிமுடித்த பெரும்பாலான மாணவர்கள் அடுத்து நாம் என்னசெய்வோம் என்ற ஒரு திட்டவட்டமான முடிவுக்குவந்து அதற்கான முயற்சிகளை தொடங்கிவிட்டநிலையில், ‘பயாலஜி’ பாடம் எடுத்து படித்த மாணவர்கள் மட்டும் தங்கள் கனவுபடிப்பான “எம்.பி.பி.எஸ்.” என்ற மருத்துவப்படிப்பு, பி.டி.எஸ். என்ற பல் மருத்துவப்படிப்புகளில் சேர்வதற்கு ‘நீட்’ என்று கூறப்படும் நுழைவுத்தேர்வு அடிப்படையில்தான் சேரவேண்டுமா?, அல்லது இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வு இருக்காது என்று அரசியல் தலைவர்கள் கொடுத்த உறுதிமொழிப்படி, பிளஸ்-2 மார்க்குகளின் அடிப்படையில்தான் சேரவேண்டுமா? என்பதில் ஒரு தெளிவான முடிவில்லாமல் குழம்பிபோய்க் இருக்கிறார்கள். கடந்த மார்ச் 1-ந் தேதியே ‘நீட்’ தேர்வுக்காக விண்ணப்பம் அனுப்ப கடைசிநாள் முடிந்துவிட்டது. இன்றுவரை ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்குகிடைக்கும் என்ற நம்பிக்கை நிச்சயமாக இல்லை. இனி மாணவர்களை ‘நீட்’ தேர்வுக்கு தயார்படுத்தவேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது.

தமிழக மாணவர்கள் மிக புத்திசாலிகள். இதுவரை மருத்துவப்படிப்பு கவுன்சிலிங்குக்கு ஏறத்தாழ 38 ஆயிரம் மாணவர்கள்தான் விண்ணப்பம் அனுப்புவது வழக்கம். ஆனால், ‘நீட்’ தேர்வுக்கு 88 ஆயிரத்து 431 பேர் விண்ணப்பித்துள்ளார்கள். எம்.டி., எம்.எஸ். போன்ற பட்டமேற்படிப்பு வகுப்புகளுக்காக தமிழக அரசு விண்ணப்பங்களை ‘நீட்’ தேர்வின் அடிப்படையில் பெறத்தொடங்கிவிட்டது. இதேபோலத்தான், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கும் ‘நீட்’ தேர்வின் அடிப்படையில் விண்ணப்பப்பாரங்களை விரைவில் கோரப்போகிறது. உடனடியாக இனியும் தாமதம்செய்யாமல் கல்வித்துறை ‘நீட்’ பயிற்சிவகுப்புகளை ஆங்காங்கே பரவலாகத்தொடங்கி, இன்னும் ஒருமாதத்தில் ‘நீட்’ தேர்வு எழுதவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் தமிழக மாணவர்களுக்கு உதவவேண்டும். இந்த ஆண்டு மருத்துவப்படிப்புகளுக்கு ‘நீட்’ தேர்வு இருப்பதுபோல, அடுத்த ஆண்டு முதல் என்ஜினீயரிங் படிப்புகளுக்கும் ‘நீட்’ தேர்வு வர இருக்கிறது. ‘நீட்’ தேர்வை தமிழிலும் எழுதலாம். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதிலும் உள்ள கல்லூரிகளிலும் சேரலாம். மாணவர்களிடம் பிளஸ்-1 வகுப்பில் சேரும்போதே பொறியியல் படிப்புக்கும், மருத்துவப்படிப்புக்கும் ‘நீட்’ தேர்வு உண்டு என்பதை வெளிப்படையாக சொல்லிவிடவேண்டும். பிளஸ்-1, பிளஸ்-2 பாடங்களை அந்தந்த ஆண்டு முழுமையாக கற்றுக்கொடுத்துவிடவேண்டும்.

‘நீட்’ தேர்வு என்பது சி.பி.எஸ்.இ. என்று கூறப்படும் மத்திய கல்வித்திட்டத்தின்கீழ் 11-வது, 12-வது வகுப்பு பாடங்களிலிருந்து கேட்கப்படும் கேள்விகளைக் கொண்டதாகும். தமிழக கல்வித்திட்டத்தில் படிக்கும் மாணவர்களால் நிச்சயமாக இந்தத்தேர்வை எழுதி எளிதில் வெற்றிபெற முடியாது. எனவே, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டங்களுக்காக என்.சி.இ.ஆர்.டி. என்று கூறப்படும் ‘தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்’ வெளியிடும் பாடப்புத்தகங்களை தமிழ்நாட்டிலும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு பயன்படுத்தும் வகையில் உடனடியாக பாடத்திட்டங்களை மாற்றவேண்டும். என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்கும் வேலையை ஏராளமான மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு தொடங்கி, அதன் அடிப்படையில் பிளஸ்-1, பிளஸ்-2 பாடப்புத்தகங்களை அச்சிடத்தொடங்கவேண்டும். இந்த விஷயத்தில் இந்த ஆண்டும் சரி, வரப்போகும் ஆண்டுகளிலும் சரி, மாணவர்களை ‘நீட்’ தேர்வுக்கு தயாராக்கும் வகையில், கல்வித்தரத்தை உயர்த்தும் முழுப்பொறுப்பு கல்வித்துறைக்குத்தான் இருக்கிறது. 17-ம் நூற்றாண்டில் அமெரிக்காவின் சுதந்திர பிரகடனத்தையும், அரசியல் சட்டத்தை எழுதுவதிலும் பெரும்பணியாற்றிய அறிஞர் பெஞ்சமின் பிராங்க்ளின், “தயார்படுத்திக்கொள்ள தவறினால், தவறுவதற்கு தயார்படுத்திக்கொள்கிறாய்” என்று சொன்னதுபோல, “நீட் தேர்வை எழுத மாணவர்களை கல்வித்துறை தயார்படுத்திக்கொள்ள தவறினால், அவர்கள் இந்த தேர்வில் தவறுவதற்கு தயார்படுத்தினார்கள்” என்றுதான் தமிழகம் சொல்லும்.

Next Story