உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்


உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்
x
தினத்தந்தி 4 April 2017 9:30 PM GMT (Updated: 4 April 2017 1:37 PM GMT)

தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள் 31 மாவட்ட ஊராட்சிகள், 12,524 கிராம ஊராட்சிகள் இருக்கின்றன.

மிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள் 31 மாவட்ட ஊராட்சிகள், 12,524 கிராம ஊராட்சிகள் இருக்கின்றன. இந்த உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகாலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24–ந் தேதியுடன் முடிவடைந்தது. அதற்கு முன்பாகவே புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க அக்டோபர் 17, 19 தேதிகளில் இருகட்டங்களாக தேர்தல் நடக்கும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்தநிலையில், தி.மு.க. சார்பில் பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீடு இல்லாமல் இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது செல்லாது என்று தொடரப்பட்ட வழக்கின் எதிரொலியாக, நீதிபதி என்.கிருபாகரன் இந்த தேர்தலை ரத்து செய்து, அனைத்து சட்டவிதிகளுக்கும் உட்பட்டு டிசம்பர் 31–ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்கவேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை. மாநில தேர்தல் ஆணையம் ஒவ்வொரு காரணமாக சொல்லி, தேர்தலை டிசம்பர் 31–ந் தேதிக்குள் நடத்தாமல், அதன்பிறகும் நடத்தாமல் இழுத்தடித்துக் கொண்டே போகிறது.

நீதிபதி என்.கிருபாகரன் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கு, நூட்டி ராமமோகனராவ், எஸ்.எம்.சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மே 14–ந் தேதிக்குள் தேர்தலை முடித்தாகவேண்டும் என்று உத்தரவிட்டனர். இதே வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் தலைமையில் நடந்தது. இந்த பெஞ்சு மிகக்கடுமையான ஒரு உத்தரவை பிறப்பித்துவிட்டது. மே 14–ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்கவில்லை என்றால், ‘கோர்ட்டு அவமதிப்பு வழக்கை’ மாநில தேர்தல் ஆணையம் சந்திக்கநேரிடும் என்று கூறியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் சார்பில், இந்திய தேர்தல் ஆணையத்திடம் வாக்காளர் பட்டியலை பெற்று அதை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. மொத்தம் உள்ள 5 கோடியே 92 லட்சம் வாக்காளர்களுடைய முகவரிகளின் அடிப்படையில் வார்டுகளை பிரித்து, வாக்காளர் பட்டியலை தயாரிக்கவேண்டும். எனவே, மே 14–ந் தேதிக்குள் தேர்தலை நடத்த முடியாது என்று வாதிட்டாலும், ஆள், அம்பு, சேனை, என்று அத்தனை அதிகாரங்களையும் வைத்திருக்கும் தமிழக அரசால் தேர்தலை நடத்தி முடிக்கவேண்டும் என்ற முடிவு எடுத்தால், எப்படியும் சிலநாட்களுக்குள் இந்த பணியை முடித்துவிடமுடியும்.

பஞ்சாயத்துராஜ் சட்டப்படி, அதிகபட்சம் 6 மாதம்தான் நீட்டிப்பு செய்யமுடியும் என்று இருக்கிறது. எனவே, மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்திற்கு அப்பீலுக்கு சென்றாலும், நிச்சயமாக இனியும் நீண்டநாட்கள் நீட்டிப்புக்கு உச்சநீதிமன்றம் அனுமதிக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. தமிழக அரசு இந்த ஆண்டு பட்ஜெட்டில், உள்ளாட்சி தேர்தலுக்காக ரூ.174 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மாநிலம் முழுவதும் கடுமையான வறட்சி நிலவிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மக்கள் தங்கள் அடிப்படை பிரச்சினைகளுக்காக உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல் ஸ்தம்பித்துப்போன நிர்வாகத்தில் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், மக்களின் அடிப்படை தேவைகளை கவனிக்க உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபடவேண்டும். இதில் பெரிய குறைபாடு என்னவென்றால், மாநில தேர்தல் ஆணையர் பதவியே இப்போது காலியாக இருக்கிறது. எனவே, தமிழக அரசு உடனடியாக புதிய ஆணையரை நியமனம் செய்து, தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, மே மாதத்திற்குள் எப்படியும் உள்ளாட்சி தேர்தலை நடத்தி ஜனநாயகம் என்ற தோட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் என்ற மலர்கள் பூத்துக்குலுங்க வகைசெய்யவேண்டும்.

Next Story