அடுத்தவர் எல்லைக்குள் செல்வதா?


அடுத்தவர்  எல்லைக்குள்  செல்வதா?
x
தினத்தந்தி 5 April 2017 9:30 PM GMT (Updated: 2017-04-05T18:53:17+05:30)

உலகிலேயே ஜனநாயகம் தழைத்தோங்கும் ஒரு ஒப்பற்ற நாடாக விளங்குவது இந்தியா. இந்தியாவில் ஜனநாயகம் என்ற எழில்மிகு மாளிகையை தாங்கிநிற்பது நிர்வாகம், நீதிமன்றம், சட்டமன்றம், பத்திரிகை ஆகிய நான்கு தூண்கள்தான்.

லகிலேயே ஜனநாயகம் தழைத்தோங்கும் ஒரு ஒப்பற்ற நாடாக விளங்குவது இந்தியா. இந்தியாவில் ஜனநாயகம் என்ற எழில்மிகு மாளிகையை தாங்கிநிற்பது நிர்வாகம், நீதிமன்றம், சட்டமன்றம், பத்திரிகை ஆகிய நான்கு தூண்கள்தான். இந்த நான்கு தூண்களும் ஒன்றுபோல நிமிர்ந்து நின்றால்தான், மாளிகையும் சாயாமல் நிற்கும். ஏதாவது ஒரு தூண் சாய்ந்தாலும் மாளிகை பலவீனமாகிவிடும். நிர்வாகத்துக்கு என்ன அதிகாரங்கள் உள்ளன?. நீதிமன்றத்துக்கு என்ன அதிகாரங்கள் உள்ளன?. சட்டமன்றத்துக்கு என்ன அதிகாரங்கள் உள்ளன? என்று அரசியல் சட்டம் தெளிவாக வகுத்துக்கொடுத்துள்ளது. அவரவர் எல்லைக்குள் இருந்து பணியாற்றினால் ஜனநாயகம் செழிக்கும். இதைத்தவிர்த்து ஒருவர் எல்லைக்குள் அடுத்தவர் செல்வதுதான், அல்லது ஒருவரது அதிகாரங்களை அடுத்தவர் கையில் எடுப்பதுதான் பலநேரங்களில் முரண்பாடான கருத்துகள் வருவதற்கு வழிவகுக்கிறது. சமீபகாலங்களாக நீதிமன்றம் நிர்வாக எல்லைக்குள் நுழைகிறது என்று விமர்சனங்கள் வருகின்றன. இதுபோல, நீதிமன்ற வி‌ஷயங்களில் நிர்வாகம் தலையிடுகிறது. நிர்வாகம், நீதிமன்றம் ஆகிய இருஅமைப்புகளின் அதிகாரங்களில் தலையிடுவது, விமர்சனம் செய்வது போன்றவற்றில் சட்டமன்றம் ஈடுபடுகிறது, பத்திரிகைகள், ஊடகங்களும் தங்களுக்குள்ள எல்லையை தாண்டிச்செல்லும் போக்கு இருக்கிறது என்றும் குறைகள் கூறப்படுகின்றன. முற்போக்கு சிந்தனையாளர்கள் இதில் அதிருப்தியை காட்டிவருகிறார்கள்.

சீமைக் கருவேலமர ஒழிப்பு பணிகள் தற்போது தமிழ்நாட்டில் மிகத்தீவிரமாக நடந்துவருகிறது. சமீபத்தில் அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு பெண்ணிடம் தகராறு செய்தவழக்கில், முன்ஜாமீன் கேட்டு விண்ணப்பித்த ஒருவருக்கு, அவர் வசித்துவரும் கிராமத்தில் 20 நாட்களுக்குள் 100 சீமைக்கருவேல மரத்தை வெட்டவேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. இதுபோல, மேட்டுப்பாளையம் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் காட்டுக்குள் மான்வேட்டையாடி இறைச்சியை விற்பவர்களிடமிருந்து அதை வாங்கிவந்த ஒருவரை வனத்துறை அதிகாரிகள் கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர் செய்தபோது, அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி, காட்டில் வனவிலங்குகளுக்காக அமைக்கப்பட்டுள்ள குட்டையில்போய் தண்ணீர் நிரப்பும்பணிகளில் வனத்துறையினரோடு சேர்ந்து ஈடுபடவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

நிபந்தனை ஜாமீன் வழங்குவதற்காக கருவேல மரத்தை வெட்டச்சொல்வது சட்டத்துக்கு எதிரானது என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி தேவதாஸ் ஒரு உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். ஒருவர் ஏதாவது ஒருவழக்கில் ஈடுபட்டு நீதிமன்ற விசாரணையில் இருக்கும்போதே, அவரை ஒரு குற்றவாளிபோல இத்தகைய உத்தரவுகளை பிறப்பிப்பது சரியல்ல. முறையான விசாரணைக்கு பின்னர்தான் குற்றவாளிக்கு தண்டனை வழங்கவேண்டும். அந்த விசாரணை நடப்பதற்கு முன்பாக தண்டனை வழங்குவது போன்ற நிபந்தனைகளை விதிக்கக்கூடாது. இதுபோன்ற பணிகளில் அவர்கள் ஈடுபடும்போது யாராவது பார்த்தால், நிச்சயமாக அவரை குற்றவாளி என்று கருதிவிட வாய்ப்பிருக்கிறது. எனவே, கோர்ட்டு விதிக்கும் நிபந்தனைகள் தனிநபரின் சுதந்திரத்தை பறிக்கும்விதமாக இருக்கக்கூடாது என்று கூறியிருக்கிறார். நீதிபதி எஸ்.நாகமுத்து பல உரையாடல்களில், ‘நீதிமன்றத்தில் வழங்கும் தீர்ப்புகள் சட்டம் வகுத்து கொடுத்த வரையறைக்குள் இருந்துதான் வழங்கப்பட வேண்டுமேதவிர, அதைத்தாண்டி நிச்சயம் இருக்கக்கூடாது’ என்று கூறுவார். அரசியல் சட்டவிதிமீறல்கள் இருக்கிறதா?, இந்திய தண்டனை சட்டவிதிமீறல்கள் இருக்கிறதா?, குற்றவியல் சட்டவிதிமீறல்கள் இருக்கிறதா?, சிவில் சட்டவிதிமீறல்கள் இருக்கிறதா?, இதுபோல பல்வேறு வகையான சட்டங்களின் விதிமுறை என்ற எல்லைக்குள் இருக்கிறதா? என்று பார்த்துதான் தீர்ப்பு அளிக்கவேண்டும். மிகவும் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டால் தவிர சட்டத்துக்கு மீறிய கருத்துகளை கூறக்கூடாது என்பது நீதிபதி எஸ்.நாகமுத்துவின் கருத்தாகும். இதை நீதிமன்றங்களுக்கு மட்டுமல்லாமல், நிர்வாகம், சட்டமன்றம், பத்திரிகைகள் எல்லோருக்கும் கொடுத்த அறிவுரைகளாக ஏற்றுக்கொண்டு செயல்பட்டால் நிச்சயமாக ஜனநாயகம் தழைக்கும்.

Next Story