வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி


வெளிநாடுகளில்  இருந்து  மணல்  இறக்குமதி
x
தினத்தந்தி 6 April 2017 9:30 PM GMT (Updated: 2017-04-06T19:03:41+05:30)

தமிழ்நாட்டில் தற்போது 140 ஆண்டுகளுக்கும் மேல் இல்லாத அளவு கடும்வறட்சி ஏற்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 39 ஆயிரத்து 202 நீர்நிலைகள் எல்லாம் தண்ணீர் இல்லாமல் வறண்டுபோய் இருக்கின்றன.

மிழ்நாட்டில் தற்போது 140 ஆண்டுகளுக்கும் மேல் இல்லாத அளவு கடும்வறட்சி ஏற்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 39 ஆயிரத்து 202 நீர்நிலைகள் எல்லாம் தண்ணீர் இல்லாமல் வறண்டுபோய் இருக்கின்றன. வறண்டுபோன ஆறுகளையெல்லாம் பார்க்கும்போது, ஏற்கனவே மணல் கொள்ளையை பார்த்து கோபத்தோடு பொங்கிக்கொண்டிருந்த மக்கள், இப்போது கொதித்துப்போய் இருக்கிறார்கள். இதுபோலத்தான் வறண்டுகிடக்கும் ஏரிகள், வாய்க்கால்களை பார்க்கும்போது அவர்களின் கண்களில் ரத்தக்கண்ணீர் வடிகிறது. பழையகால திரைப்படத்தில், ‘ஆற்றோரம் மணல் எடுத்து அழகழகாய் வீடு கட்டி, தோட்டமிட்டு, செடி வளர்த்து ஜோராக குடியிருப்போம்’ என்ற பாடல் உண்டு. அப்படிப்பட்ட மணல் பாங்கான ஆறுகளெல்லாம் இப்போது மணலை தேடிப்பிடிக்கும் அளவுக்கு கட்டாந்தரையாக காட்சியளித்து கொண்டிருக்கின்றன.

தமிழ்நாட்டில் உள்ள 34 ஆறுகளில் எல்லாம் மணல் கொள்ளை ஜரூராக நடந்ததால், இப்போது நீர்ப்பிடிப்பு இல்லாமல் வெறுந்தரையாக இருக்கிறது. மணல்கொள்ளையால் ஆற்றுமணல் அடிமட்டம்வரை அள்ளப்பட்டதால் நிலத்தடிநீர் மட்டம் பாதிக்கப்பட்டது. ஆற்றின் கரைக்கும் சேதம் ஏற்பட்டுவிட்டது. இவ்வாறு மணல் கொள்ளையடிப்பவர்களின் முறையற்ற செயலால் இயற்கைவளமே பாதிக்கப்பட்டு, மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகிவிட்டார்கள். என்னதான் மழை பொய்த்தாலும், ஆற்றில் உள்ள மணலின் நீர்ப்பிடிப்பு காரணமாக கொஞ்சமாவது தண்ணீர் இருக்கும். இனியெல்லாம் எளிதில் ஆற்றுமணலில் கைவைக்கமுடியாது. ஆனால், ஆற்றுமணல் இல்லையென்றால், கட்டிடப்பணிகள் அப்படியே முடங்கிப்போய்விடும். மணல் இல்லாமல் எந்த வேலையையும் கட்டிடப்பணிகளில் செய்யமுடியாது. அதனால்தான் அரசு ஆற்றுமணலுக்கு பதிலாக, மாற்று மணல் அதாவது கருங்கல் ஜல்லி, குவாரி துகள்கள் போன்றவற்றை பயன்படுத்த பரிந்துரைகளை செய்தாலும், கட்டிடப்பணிகளில் இன்னும் அதை முழுமையாக பயன்படுத்த யாரும் முன்வரவில்லை. தற்போது மணலுக்கு தமிழ்நாட்டிலும் கடும்கிராக்கி ஏற்பட்டுள்ளது. அரசு 38 மண் குவாரிகளுக்கு அனுமதி கொடுத்திருந்தது. அதில், ஏறத்தாழ 28 குவாரிகளின் ஒப்பந்தகாலம் முடிவடைந்துவிட்டதால், தற்போது 10 குவாரிகளே இயங்குகின்றன. இந்த 28 குவாரிகளின் லைசென்சுக்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் ஒப்புதல் கொடுக்கவேண்டும். ஆனால், அந்த ஆணையத்துக்கு இப்போது தலைவர் பதவி காலியாக இருப்பதால், அந்த பணிகள் முடங்கியிருக்கின்றன. மணலும் வேண்டும், பொதுமக்களின் எதிர்ப்பையும் சமாளிக்கவேண்டும் என்றநிலையில் அரசு இருக்கிறது.

இதற்கு மாற்றாக மராட்டியம் போன்ற மாநிலங்கள், பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்வதுபோல, தமிழக அரசும் வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்தால் சமாளிக்கமுடியும். உலகளவில் அமெரிக்கா, நெதர்லாந்து, ஜெர்மனி, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, வியட்நாம், கம்போடியா, பிரான்ஸ், சீனா, எகிப்து, தைவான், சவுதி அரேபியா, கனடா, இங்கிலாந்து, ஸ்பெயின், ஐக்கிய அரபுநாடுகள், நார்வே, மலேசியா, டென்மார்க், பல்கேரியா போன்ற பல நாடுகள் மணலை ஏற்றுமதி செய்கின்றன. சிங்கப்பூர் போன்ற பல நாடுகளில் வெளிநாட்டில் இருந்துதான் மணல் இறக்குமதி செய்யப்படுகிறது. தமிழக அரசும் இவ்வாறு வெளிநாட்டு மணலை இறக்குமதி செய்தால், பொருளாதார ரீதியாக அது சாத்தியமாகுமா?, எந்த நாட்டு தரம் நமது மாநில மணலுக்கு சமமான தரத்தோடு இருக்கும்? என்பதையெல்லாம் பரிசீலனை செய்து, இறக்குமதி செய்வதற்கான வழிவகைகளை ஆராயவேண்டும். சற்று விலை அதிகமாக இருந்தாலும்கூட, நமது இயற்கைவளத்தை பாதுகாத்துவிடலாம் என்றவகையில் இதை அரசு பரிசீலிக்கலாம். மொத்தத்தில், தமிழக ஆறுகளில் உள்ள கொஞ்சநஞ்சம் மீதி இருக்கும் மணல்வளமும் காப்பாற்றப்படவேண்டும். கட்டிடத்தொழிலும் பாதிக்கப்படாமல் இருக்கவேண்டும் என்பதையே குறிக்கோளாகக்கொண்டு தமிழக அரசு செயல்படவேண்டும்.

Next Story