திட்டமிட்டால், அதை நிறைவேற்றுங்கள்


திட்டமிட்டால், அதை நிறைவேற்றுங்கள்
x
தினத்தந்தி 7 April 2017 9:30 PM GMT (Updated: 7 April 2017 2:11 PM GMT)

குற்றங்களைத் தடுக்கவும், குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கவும், போலீசாருக்கு கண்காணிப்பு கேமராக்கள் பெரும் துணையாற்றுகின்றன.

குற்றங்களைத் தடுக்கவும், குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கவும், போலீசாருக்கு கண்காணிப்பு கேமராக்கள் பெரும் துணையாற்றுகின்றன. அனைத்து குடியிருப்பு களிலும், ஏன் வீடுகளிலும் கூட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவேண்டும் என்பதுதான் போலீசாரின் அறிவுரையாக இருக்கிறது. ஆனால், பொதுமக்கள் அதிகம் கூடும் ரெயில் நிலையங்களில் மட்டும் திட்டமிட்டபடி இந்த பணிகள் நடைபெறாததால், இன்னும் பல சமூகவிரோத செயல்கள் நடப்பதற்கு பேருதவியாக இருக்கின்றன. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 24–ந் தேதி சென்னை நுங்கம் பாக்கம் ரெயில் நிலையத்தில் அதிகாலை 6.30 மணிக்கு சுவாதி என்ற 24 வயது பெண் சாப்ட்வேர் என்ஜினீயர் வேலைக்கு செல்வதற்காக ரெயில் ஏற காத்துக்கொண்டிருந்த நேரத்தில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். வெகுநேரம் அவர் உடல் கேட்பாரற்று கிடந்தது. அங்கு ஒரு கண்காணிப்பு கேமரா மட்டும் இருந்து, போலீஸ் கட்டுப்பாடு அறையோடு இணைக்கப்பட்டிருந்தால், உடனடியாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கும். புலன்விசாரணையின்போதும் இந்த குறையால் உடனடியாக குற்றவாளிகளை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அக்கம்பக்கத்தில் இருந்த வீடுகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகத்தான் ஓரளவு துப்புகிடைத்தது. இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக அனைத்து ரெயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரனே, பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் கேமராக்கள் பொருத்தப்படவேண்டும் என்பதை சமுதாயக்கடமையாக வலியுறுத்தி, மத்திய–மாநில அரசாங்கங்களிடம் 10 கேள்வி களைக் கேட்கவேண்டும் என தலைமை நீதிபதிக்கு ஒருகடிதம் எழுதினார். இதையே ஒரு வழக்காக பதிவுசெய்த தலைமை நீதிபதி, மத்திய–மாநில அரசுகளுக்கு நோட்டீசு அனுப்பினார். மத்திய–மாநில அரசுகளும், ரெயில்வே நிர்வாகமும் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தது. இந்தியா முழுவதும் 20 ஆயிரம் ரெயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த ரூ.700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசாங்கம் அறிவித்தது. இதன் ஒருபகுதியாக தென்னக ரெயில்வேயில் ஒரு ரெயில் நிலையத்துக்கு குறைந்தபட்சம் 8 கேமராக்கள் வீதம் குறிப்பிட்ட 136 ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்காக நிர்பயா நிதியிலிருந்து பணமும் ஒதுக்கப்பட்டது. இதில் சென்னை கோட்டத்திலுள்ள 82 ரெயில் நிலையங்களும் அடங்கும்.

சென்னை கோட்டத்தில் 165 ரெயில் நிலையங்கள் இருக்கின்றன. இதில் 50 ரெயில் நிலையங்கள் மின்சார ரெயில் நிலையங்கள் ஆகும். அதில் ஒன்றுதான் சுவாதி கொலை செய்யப்பட்ட நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம். இந்த கண்காணிப்பு கேமராக்கள் எல்லாம் 2016–ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் பொருத்தப்படவேண்டும் என்று காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், கையில் நிதி இருந்தும் இன்னும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் படவில்லை. சுவாதி கொலை செய்யப்பட்ட நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கூட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாததால், பல சமூகவிரோத செயல்கள் துணிச்சலாக அரங்கேறுகின்றன. திட்டமிட்டபடி எங்கும் ஏன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை யென்று கேட்டால், அதிகாரிகள் தரப்பிலிருந்து முன்பு ரெயில்வே போர்டு இந்த பணியைச் செய்வதாக இருந்தது, இப்போது இந்த பணி ‘ரெயில்டெல்’ என்று சொல்லப்படும் பொதுத்துறை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இந்த தாமதம். எப்படியும் இந்த ஆண்டுக்குள் கண்காணிப்பு கேமராக்களை பொருத்திவிடுவோம் என்கிறார்கள். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது என்பது எளிதானதும், பயணிகளின் பாதுகாப்புக்கும், சமூகவிரோத செயல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும் மிகமிக அத்தியாவசியமானதுமாகும். இதற்கு இவ்வளவு தாமதம் தேவையே இல்லை. உடனடியாக அனைத்து ரெயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவேண்டும்.

Next Story