விவசாயம் தழைத்தால் கடன் தள்ளுபடி வேண்டாம்


விவசாயம் தழைத்தால் கடன் தள்ளுபடி வேண்டாம்
x
தினத்தந்தி 9 April 2017 9:30 PM GMT (Updated: 2017-04-09T17:33:51+05:30)

ரிசர்வ் வங்கி ஒவ்வொரு ஆண்டிலும் 2 மாதங்களுக்கு ஒருமுறை நிதிக்கொள்கையை முடிவெடுத்து அறிவிப்பது வழக்கம். அந்தவகையில், 2017–18–ம் ஆண்டுக்கான முதல் நிதிக்கொள்கையை ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித்பட்டேல் அறிவித்தார்.

ரிசர்வ் வங்கி ஒவ்வொரு ஆண்டிலும் 2 மாதங்களுக்கு ஒருமுறை நிதிக்கொள்கையை முடிவெடுத்து அறிவிப்பது வழக்கம். அந்தவகையில், 2017–18–ம் ஆண்டுக்கான முதல் நிதிக்கொள்கையை ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித்பட்டேல் அறிவித்தார். அப்போது விவசாய கடன்கள் ரத்து செய்வதற்காக வெளியிடப்படும் வாக்குறுதிகளை தவிர்ப்பது குறித்து நாட்டில் ஒருமித்த கருத்து உருவாக்கப்பட வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதால் நியாயமாக வரி செலுத்துபவர்கள் பணத்தை கடன் தள்ளுபடிக்காக செலவிடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய கடன் தள்ளுபடி மூலம் மாநிலஅரசுகள் மேலும் மேலும் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். இவ்வாறு விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதால் கடன் வழங்கும் முறையில் நடைமுறை சிக்கல்கள் ஏற்படும். கடன் கொடுக்கும் கலாசாரத்தை மேலும் பாதிக்கும். இதுமட்டுமல்லாமல், வாங்கிய கடனை திரும்பிச் செலுத்துவதிலும், கடன் வாங்குவதிலும் ஒரு ஒழுங்கற்ற தன்மைக்கு வழிவகுக்கும்.

கடனை நேர்மையாக திருப்பிச் செலுத்துவோரையும் ஒழுங்கற்ற தன்மையை நோக்கி அழைத்துச்செல்லும் என்று அவர் தெரிவித்தது விவசாயிகளுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் கடன் ரத்து என்பது அவர்கள் கையில் பணம் வைத்துக்கொண்டு கட்டாமல் இருப்பதல்ல. அவர்களால் முடியாமல் கடும் பொருளாதார நெருக்கடி இருக்கும்நிலையில், இத்தகைய சூழ்நிலை ஏற்படுகிறது. விவசாயிகளை பொறுத்தமட்டில் அவர்கள் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை, வாங்கிய கடனை திரும்ப கட்டமுடியாத சூழ்நிலை 3 காரணங்களால் ஏற்படுகின்றன. முதல் காரணம் பருவமழை பொய்ப்பதால் சாகுபடி செய்ய முடியாதநிலையில் அல்லது சாகுபடி செய்த பயிர்களை காப்பாற்ற முடியாமல் அவை கருகி போய்விடுவதால் போட்ட பணமெல்லாம் பாழ் என்பதால் ஏற்படும் நிலை. 2–வது காரணம் விவசாயத்துக்கான இடு பொருட்களின் விலையெல்லாம் இப்போது மிக அதிகமாகிவிட்டதாலும், விவசாய தொழிலாளர்களுக்கான கூலி கூடுதலாக கொடுக்க வேண்டியிருப்பதாலும், உற்பத்தி செலவு அதிகமாகியுள்ள நிலை. 3–வது காரணம் விவசாய விளைபொருட்களுக்கு உரியவிலை கிடைப்பதில்லை. செய்த செலவைவிட குறைவான தொகைக்கே பொருட்களை விற்க வேண்டிய கட்டாயநிலை மற்றும் சேமித்து வைப்பதற்கான வசதிகளோ அத்தகைய பொருளாதார நிலையோ விவசாயிக்கு இல்லாததாகும்.

விவசாயம் ஒரு லாபகரமான தொழிலாக இருந்தால் நிச்சயமாக விவசாயி கடன் வாங்கமாட்டார். வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் இருக்கமாட்டார். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் ஒரு லாபகரமான தொழிலாக இருக்கவில்லை. ஒன்று வரவுக்கும்–செலவுக்கும் சரியாக இருக்கிறது. அல்லது வரவுக்கு மிஞ்சிய செலவாக இருக்கிறது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட தேசிய விவசாயிகள் ஆணையம் அளித்த அறிக்கையில், விளைபொருட்களுக்கான ஆதார விலையை நிச்சயமாக அதன் உற்பத்திச் செலவைவிட 50 சதவீத தொகை அதிகமாக நிர்ணயிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அந்தவகையில், வளமான நீர்ப்பாசன திட்டங்களிலும், விவசாய உற்பத்திச்செலவை குறைக்கும் நடவடிக்கைகளிலும், விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையிலான நடவடிக்கைகளிலும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக ஈடுபட்டால் நிச்சயமாக விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படாது. ஏற்கனவே பிரதமர் நரேந்திரமோடி 2022–ல், ‘விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்’ என்று உறுதி கூறியிருக்கிறார். அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டுமானால் எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான தேசிய விவசாயிகள் ஆணையத்தின் பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். விவசாயத்தில் நஷ்டம் ஏற்படாத நிலையை அரசுகள் உருவாக்க வேண்டும்.

Next Story