உத்தரபிரதேசம் வழிகாட்டுகிறது


உத்தரபிரதேசம் வழிகாட்டுகிறது
x
தினத்தந்தி 10 April 2017 8:30 PM GMT (Updated: 2017-04-10T19:35:58+05:30)

உத்தரபிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ.க. ஆட்சி அமைத்தது.

த்தரபிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. இதுவரையில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாமல் 5 முறை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் யோகி ஆதித்யநாத் முதல்–மந்திரியானது யாரும் எதிர்பாராததாகும். முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறியபடி, விவசாயிகளின் கடன் ரத்துசெய்வது தொடர்பான முடிவை அறிவித்தார். 86 லட்சம் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆளுக்கு ரூ.1 லட்சம் வரையுள்ள கடன்களை ரத்துசெய்கிறோம் என்று அறிவித்தார். இதனால் அரசாங்கத்துக்கு ரூ.36 ஆயிரம் கோடி செலவாகும் என்றும் அறிவித்தார்.

ராமநவமியையொட்டி 9 முடிவுகளை அறிவிக்கிறேன் என்றுகூறி, மேலும் சில அறிவிப்புகளையும் வெளியிட்டார். அடுத்து அவரது பார்வை கல்வி வளர்ச்சி பக்கம் சென்றது. அனைத்து அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கும், தனியார் பள்ளிக்கூட மாணவர்கள் அணியும் உடைகளைப்போல 2 செட் சீருடை வழங்கப்படும். அவர்களுக்கு காலணிகள், புத்தகங்கள், புத்தகப்பைகள் வழங்கப்படும். அனைத்து அரசு பள்ளிக்கூடங்களிலும், நர்சரி வகுப்புகளிலிருந்து ஆங்கிலம் கற்றுக்கொடுக்கப்படும். இதுபோல, 3–வது வகுப்பிலிருந்து சமஸ்கிருதமும், 10–வது வகுப்பிலிருந்து மாணவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் ஒரு வெளிநாட்டு மொழியும் கற்றுக் கொடுக்கப்படும். இதுமட்டுமல்லாமல், அனைத்து வகுப்புகளிலும் மத்திய கல்வி திட்டத்தின்கீழ் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் என்று அழைக்கப்படும் என்.சி.இ.ஆர்.டி. வெளியிடும் பாடப்புத்தகங்களின் அடிப்படையிலேயே கல்வித்திட்டமும் வகுக்கப்பட்டு, மாணவர்களுக்கு புத்தகங்களும் வழங்கப்படும் என்று அறிவித்தார். ஆக, கல்வி வளர்ச்சிக்கு யோகி ஆதித்யநாத் கொடுக்கும் முக்கியத்துவம் எல்லோரையும் அவரை பாராட்ட வைக்கிறது. இதே நடவடிக்கைகளை தமிழ்நாட்டிலும் கல்வித்துறை மேற்கொள்ளவேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமாக இருக்கிறது.

2007–ம் ஆண்டு பேராசிரியர் அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழு அளித்த அறிக்கையின்படி, நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால், அப்போது அவர் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டத்தை மாற்றவேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தார். அந்த பரிந்துரை இன்னும் அரசால் அமல்படுத்தப்படாமல் இருக்கிறது. தற்போது மருத்துவக்கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை ‘நீட்’ நுழைவுத்தேர்வு மூலம்தான் நடக்கும் என்று உறுதியாக அறிவிக்கப்பட்டுவிட்டது. தமிழக அரசு இந்த ஆண்டு மட்டும் ‘நீட்’ தேர்வு வேண்டாம் என்று எவ்வளவோ முயற்சிசெய்தும், இன்னும் உறுதியான பதில் மத்திய அரசாங்கத்திடமிருந்து கிடைக்கவில்லை. ஒருவேளை மத்திய அரசாங்கம் உறுதியான பதிலை கொடுத்தாலும், உச்சநீதிமன்றம் அதை நிச்சயமாக அனுமதிக்காது என்பதுதான் நிதர்சனமான உண்மை. தமிழ்நாட்டில் இந்த ஆண்டு முதல் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையிலும், அடுத்த ஆண்டு முதல் என்ஜினீயரிங் படிப்பு மாணவர் சேர்க்கையிலும் கண்டிப்பாக ‘நீட்’ நுழைவுத்தேர்வு எழுதித்தான் ஆகவேண்டும். ‘நீட்’ நுழைவுத்தேர்வு கேள்விகள் அகில இந்திய அடிப்படையில் சி.பி.எஸ்.இ. கல்வித்திட்டத்தின் 11–வது மற்றும் 12–வது வகுப்பு பாடத்திட்டங்களில் உள்ள கேள்விகளைக் கொண்டு கேட்கப்படுகிறது. எனவே, உடனடியாக இந்த ஆண்டு 11–வது வகுப்பிலும், அடுத்த ஆண்டு 12–வது வகுப்பிலும் மத்திய கல்வித்திட்டத்துக்கு இணையான கல்வித்தரம் கொண்ட பாடத்திட்டங்களின் அடிப்படையிலான புத்தகங்கள் வழங்கப்படவேண்டும். தமிழ்நாட்டில் இந்த ஆண்டுக்கான 11–வது வகுப்பு பாடப்புத்தகங்களை விரைவில் அச்சடிக்கும் பணிகள் தொடங்கப்பட இருக்கிறது. பழைய பாடத்திட்டத்தை அடிப்படையாக வைத்து புத்தகங்களை மாணவர்களுக்கு வினியோகிக்காமல், ‘நீட்’ தேர்வை எதிர்கொள்ளும் வகையில் உயர்தர கல்வித்திட்டத்தை கொண்ட பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்படவேண்டும். கல்வித்துறையில் உத்தரபிரதேசம் எழுச்சியைக் காண முயற்சிகளை தொடங்கிவிட்டதுபோல, தமிழ்நாட்டிலும் கல்வித் துறையில் ஒரு மறுமலர்ச்சி காண உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Next Story