நடு வழி


நடு வழி
x
தினத்தந்தி 11 April 2017 9:30 PM GMT (Updated: 2017-04-11T22:44:39+05:30)

சில தினங்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டு ‘தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் தூரத்திற்குள் உள்ள அனைத்து மதுக்கடைகள், கிளப்புகள், நட்சத்திர ஓட்டல்களில் உள்ள பார்கள் அனைத்தையும் ஏப்ரல் 1–ந் தேதி முதல் மூடிவிடவேண்டும்.

சில தினங்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டு ‘தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் தூரத்திற்குள் உள்ள அனைத்து மதுக்கடைகள், கிளப்புகள், நட்சத்திர ஓட்டல்களில் உள்ள பார்கள் அனைத்தையும் ஏப்ரல் 1–ந் தேதி முதல் மூடிவிடவேண்டும். 20 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள்தொகை உள்ள நகரங்களில் இந்த தூர எல்லை 220 மீட்டராக குறைக்கப்படுகிறது’ என்றும் உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள இந்த உத்தரவால், டாஸ்மாக் கடைகள் மட்டுமல்லாமல், நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் கிளப்கள் மற்றும் ஏராளமான நட்சத்திர ஓட்டல்களில் உள்ள பார்களும் மூடப்பட்டுவிட்டன. இந்த அதிரடி உத்தரவால், மாநில அரசுகளின் வருமானம் மட்டுமல்ல, சுற்றுலாவும் பெரிதும் பாதிக்கப்பட்டுவிட்டது. நட்சத்திர ஓட்டல்களுக்கு தங்க வருபவர்கள் வசதிபடைத்தவர்களாகத்தான் இருப்பார்கள். இதுதவிர பல்வேறு கருத்தரங்குகள் குறிப்பாக சர்வதேச கருத்தரங்குகள், விருந்துகள், விழாக்களில் கலந்து கொள்ளத்தான் வருவார்கள்.

இவர்களெல்லாம் பார் இல்லை, மது பரிமாறப்படாது என்றால், நிச்சயம் நட்சத்திர ஓட்டல்கள் பக்கம் வரமாட்டார்கள். சர்வதேச கருத்தரங்குகள் இந்தியாவில் நடத்தப்படாமல், வேறு நாடுகளுக்கு போய்விடும். இதனால் பெரிய பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்று சுற்றுலா மற்றும் ஓட்டல் தொழில் சங்கங்களின் சம்மேளனம் தெரிவிக்கிறது. ஆண்டுக்கு 90 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வருகிறார்கள். இவர்கள் வருகையெல்லாம் இந்த உத்தரவால் பாதிக்கப்பட்டுவிடும். இதுமட்டுமல்லாமல், லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை இழப்பு நேரிடும் என்ற வருத்தத்தை திட்டக்குழுவுக்கு பதிலாக அமைக்கப்பட்டுள்ள நிதி அயோக் தலைமை செயல் அலுவலர் அமிதாப் காந்த் பதிவு செய்துள்ளார்.

குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுபவர்களால்தான் பெருமளவு விபத்துகள் ஏற்படுகிறது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. நிச்சயமாக இது தடுத்து நிறுத்தப்படவேண்டும். எனவே மது குடித்துவிட்டு மோட்டார் வாகனம் ஓட்டக்கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், ஆங்காங்கு சாலைகளில் இதுபோல மதுகுடித்துவிட்டு யாராவது வாகனம் ஓட்டுகிறார்களா என்பதை கண்டுபிடிக்க அதிரடி சோதனைகள் நடத்துவதன் மூலமாகவும் மட்டும்தான் இத்தகைய குறைபாடுகளை சரிசெய்ய முடியும். மேலும், இத்தகைய உத்தரவினால் மாநில அரசுகளின் வரிவருவாய், வருவாய் பெரிதும் பாதிக்கப்படும் என்பதை கருத்தில்கொண்டு, இந்த நோக்கத்தை நிறைவேற்ற வேறுவழிகளையும் மத்திய அரசாங்கம் கண்டு உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனுவை தாக்கல் செய்யவேண்டும். மத்திய சுற்றுலாத்துறை மந்திரி மகேஷ் சர்மா, ‘இந்த உத்தரவால் சுற்றுலா தொழில் பெரிதும் பாதிக்கப்படும் என்பதால், இதில் ஒரு நடுவழி காணப்படும்’ என உறுதி அளித்தார். இதுமட்டுமல்லாமல், மாநில அரசுகளின் வருவாயில் பெரும்பகுதி மதுக்கடைகள் மூலமாகத்தான் கிடைக்கிறது. தமிழக அரசை எடுத்துக்கொண்டால், மாநில வருவாயில் கணிசமான அளவு டாஸ்மாக் மூலம்தான் கிடைக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் அரசின் வருமானத்தில் 16.3 சதவீதம் டாஸ்மாக் மூலம்தான் கிடைத்துள்ளது. இந்த வருமான இழப்பை மாநில அரசுகளால் தாங்கிக்கொள்ள முடியாது. பல மாநிலங்களில் சட்டத்தின் சந்துபொந்துகளில் நுழைந்து வேறுவழிகளில் செல்ல முயற்சிசெய்கிறார்கள். மாநில நெடுஞ்சாலை என்பதை மாற்றி அமைத்து பிரதான மாவட்ட நெடுஞ்சாலை, ஊரக நெடுஞ்சாலை என்ற பெயரில் கடைகளை தொடர்ந்து நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதுபோல ஒரு நிலைமை ஏற்படாமல், மதுவிலக்கு கொள்கையும் வேண்டும், அரசின் வருமானமும் பாதிக்கப்படக்கூடாது என்றவகையில், ஒரு நல்ல ஏற்பாட்டை காண மத்திய அரசாங்கமும், சுப்ரீம் கோர்ட்டும் சேர்ந்து முயற்சிக்கவேண்டும்.

Next Story