பாடத்திட்டங்களில் ‘புகையிலை அபாயம்’


பாடத்திட்டங்களில் ‘புகையிலை  அபாயம்’
x
தினத்தந்தி 12 April 2017 8:30 PM GMT (Updated: 2017-04-12T19:48:49+05:30)

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போதெல்லாம் மிகவும் அபாயகரமானதாக இருக்கிறது. இதற்கு புகையிலை பயன்பாடும் ஒரு முக்கிய காரணமாகும்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போதெல்லாம் மிகவும் அபாயகரமானதாக இருக்கிறது. இதற்கு புகையிலை பயன்பாடும் ஒரு முக்கிய காரணமாகும். அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் கட்டுப்பாட்டில் இயங்கும் புகையிலை கட்டுப்பாடு வள ஆதாரமைய இணை பேராசிரியர் டாக்டர் விதுபாலா தலைமையில், 6 பேர் கொண்ட குழு தமிழ்நாடு முழுவதும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் துணையோடு, 6 மாதகாலம் புகையிலை தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டது. இந்த ஆய்வில், புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்றாலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள மொத்த மக்கள்தொகையில், 5.2 சதவீதம் பேர் புகையிலையை பீடி, சிகரெட், சுருட்டாகவோ, மெல்லும் புகையிலையாகவோ பயன்படுத்துகிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. 15 வயது முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ளவர்கள் 28 லட்சத்து 64 ஆயிரத்து 400 பேர் புகையிலையை ஏதாவது ஒருவடிவத்தில் பயன்படுத்துகிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் மிகவும் அதிர்ச்சிகரமான வி‌ஷயம் என்னவென்றால், புகையிலை பயன்படுத்துபவர்களில் 47 சதவீதம் பேர் தூங்கிவிழித்த அரைமணி நேரத்திற்குள், ஒன்று புகைப்பிடிக்கிறார்கள், அல்லது புகையிலையை மென்றுவிடுகிறார்கள். இந்த 5.2 சதவீதம்பேர்களில், 3.3 சதவீதம் பேர் புகைப்பிடிக்கிறார்கள். அதில், 1.7 சதவீதம்பேர் சிகரெட்டையும், 1.4 சதவீதம்பேர் பீடியையும் 0.2 சதவீதம்பேர் சுருட்டும் புகைக்கிறார்கள்.

புகைப்பிடிக்கும் பழக்கத்தின் தீமையறிந்த, பெரும்பான்மையான வீடுகளில் புகைப்பிடிப்பவர்களை வீட்டில் புகைப்பிடிக்க அனுமதிப்பதில்லை. அவர்கள் வெளியிடங்களில்தான் புகைப்பிடிக்கிறார்கள். இவ்வளவுக்கும் பொதுஇடங்களில் புகைப்பிடிக்க தடையிருக்கிறது. அதையும்மீறி இவர்களெல்லாம் புகைப்பிடிக்கிறார்கள். புகையிலைபோல மற்றவகையான மெல்லும் புகையிலை, பான்மசாலா, குட்கா போன்ற புகையிலையை பயன்படுத்துபவர்களும் சராசரியாக 5 சதவீதத்திற்கும்மேல் இருக்கிறார்கள். தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், பொதுஇடங்களில் புகைப்பிடிப்பதை தடுக்கும் நடவடிக்கைகள் இன்னும் தீவிரமாக எடுக்கப்படவேண்டும். தமிழ்நாட்டில் மெல்லும்புகையிலை, பான்மசாலா, குட்கா போன்றவை விற்பனை செய்ய தடைச்செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்தப்பொருட்கள் எல்லாம் மிகத்தாராளமாக கடைகளில் கிடைக்கிறது. இதை பயன்படுத்துகிறவர்களும் 2 மடங்கு விலையை கொடுத்து வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதை அதிகாரவர்க்கமும் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் வேதனைதருகிறது. வடமாநிலங்களில் தயாரிக்கப்பட்டு, தமிழ்நாட்டுக்குள் 26 விதமான குட்கா, பான்மசாலா போன்றவை விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இத்தகையபொருட்கள் தமிழ்நாட்டுக்குள் நுழையாமல் தடுக்க இன்னும் தீவிரமான நடவடிக்கை எடுக்கவேண்டும். புகைப்பிடிக்கும் பழக்கம் 15 வயதிலே, அதில் என்னதான் இருக்கிறது என பார்ப்போம் என்று தொடங்குகிறார்கள். எனவே, புகையிலை பயன்பாட்டின் தீமையை மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் சரியான விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளை சுற்றிலும் 100 மீட்டர் சுற்றளவுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்ற தடையை தீவிரமாக அமல்படுத்தவேண்டும். மாணவர்களுக்கு புகையிலை பொருட்கள் எட்டாக்கனியாக இருக்கவேண்டும். 12 வயது முதல் 15 வயதுவரை உள்ள மாணவர்கள் படிக்கும் வகுப்புகளில் பாடத்திட்டங்களில் புகையிலைப் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகளை விளக்கும் வகையில் படத்துடன் கூடிய பாடங்கள் சேர்க்கப்படவேண்டும் என்று ஏற்கனவே மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு பரிந்துரையை அளித்துள்ளது. இந்த பரிந்துரையை மத்திய–மாநில அரசுகள் உடனடியாக ஏற்று பள்ளிக்கூடங்களில் மட்டுமல்லாமல், கல்லூரிகளிலும் புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகளை, குறிப்பாக புற்றுநோய் ஏற்படுகிறது என்பதை மாணவர்களுக்கு தெரியும் வகையில் பாடத்திட்டங்களில் சேர்க்கவேண்டும். புற்றுநோய் மட்டுமல்லாமல், இதயநோய்க்கும் புகையிலைப்பயன்பாடுதான் முக்கிய காரணம் என்பதை மாணவர்கள் மற்றும் இளையசமுதாயத்தினர் எல்லோரும் அறிந்துகொள்ளும் வகையில் விழிப்புணர்வை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். அவர்கள் யாரும் புகையிலை பயன்படுத்தும் பழக்கத்துக்கு ஆட்பட்டுவிடக் கூடாது.

Next Story