நடத்தமுடியாத 2 தேர்தல்கள்


நடத்தமுடியாத  2  தேர்தல்கள்
x
தினத்தந்தி 16 April 2017 9:30 PM GMT (Updated: 16 April 2017 5:11 PM GMT)

பாராளுமன்ற தேர்தலையும், சட்டமன்ற தேர்தலையும் நடத்தவேண்டிய பொறுப்பு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது.

பாராளுமன்ற தேர்தலையும், சட்டமன்ற தேர்தலையும் நடத்தவேண்டிய பொறுப்பு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது. கடந்த 12–ந் தேதி ஜம்மு–காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் பாராளுமன்ற தொகுதியிலும், சென்னையில் ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியிலும் தேர்தல் நடத்த முன்கூட்டியே அறிவிப்பு வெளியிட்டு, வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு, பரிசீலனை முடிந்து இறுதிவேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் பிரசாரமெல்லாம் முடிந்து, தேர்தல் நடத்தப்போகும் சூழ்நிலையில், அனந்த்நாக் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் மே 25–ந் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம், மாநில அரசும், அங்குள்ள தலைமை தேர்தல் அதிகாரியும், தற்போது நிலவும் சட்டம்–ஒழுங்கு பிரச்சினையால் அங்கு நேர்மையான பாரபட்சமில்லாத தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை இல்லையென்று தெரிவித்துள்ளதுதான். ஏற்கனவே கடந்த 9–ந் தேதி ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதியில் நடந்த தேர்தலில் பெரிய அளவில் வன்முறை வெடித்தது. யாருமே ஓட்டுப்போட வரமுடியாத நிலையில், ஆங்காங்கு கல்வீச்சுக்கள், வன்முறைகள் தலைவிரித்தாடின. இந்த தேர்தலில் 7.14 சதவீதம்தான் வாக்குப்பதிவு நடந்திருக்கிறது. 38 வாக்குச்சாவடிகளுக்கு நடந்த மறுவாக்குப்பதிவில், 2 சதவீத ஓட்டுகளே பதிவாகியுள்ளன.

வடக்கே இந்த தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதென்றால், தெற்கே சென்னையில் உள்ள ஆர்.கே.நகரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்கள் தமிழ்நாட்டை மிகவும் தலைகுனியவைத்துள்ளது. தேர்தலை ரத்து செய்வதற்கான காரணங்களை 29 பக்கங்கள் கொண்ட ஒரு உத்தரவில் தேர்தல் கமி‌ஷன் வெளியிட்டுள்ளது. அதில், இதுவரையில் இல்லாத அளவு ஆர்.கே.நகர் தொகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இப்படி எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொண்ட பிறகும், இந்த தொகுதியில் பணப்பரிமாற்றம், பரிசுப்பொருட்கள் வழங்குதல் போன்ற முறைகேடுகள் தாராளமாக நடந்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கீதாலட்சுமி ஆகியோர் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனைகள் நடத்தினர். இதில், ரொக்கப்பணம் உள்பட ரூ.89 கோடி அளவில் வாக்காளர்களுக்கு பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்திருந்தது. நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடத்தும் சூழல் இல்லை என்ற காரணத்தை கூறி, இதுபோல வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் வினியோகிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி இந்த தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இந்த இரு தொகுதிகளின் தேர்தல்களை நடத்த முடியவில்லையென்றால், வடக்கே ராணுவமும், போலீஸ்படையும், ஜம்மு–காஷ்மீர் மாநிலத்தில் இன்னும் அதிரடியாக பணியாற்றவேண்டிய பாடத்தை புகட்டியுள்ளது. ஸ்ரீநகரில் இளைஞர்கள் பாகிஸ்தான் தேசியகொடிகளுடன், பாகிஸ்தானுக்கு ஆதரவான கோ‌ஷங்களை எழுப்பிக்கொண்டு ஊர்வலமாக போவதை இனியும் அனுமதிக்க முடியாது. எனவே, அங்கு இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், இவ்வளவு பாதுகாப்பையும் மீறி பணமும், பரிசுப்பொருட்களும் மழைபோல பொழிந்தது என்றால், தேர்தல் கமி‌ஷன் குடை, ஓட்டை குடை. அதனால்தான், இவ்வாறு பணமழையை தடுக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிகிறது. ஆக, பணம் வாங்குவது சுயகவுரவத்திற்கு இழுக்கு, ஒவ்வொருவரும் விலைபோவது போன்ற உணர்வுதான் அது என்ற விழிப்புணர்வை ஒருபக்கம் மக்களிடையே ஏற்படுத்தவேண்டும். மற்றொருபக்கம் இதுபோல பணப்பரிமாற்றம், பொருட்கள் வினியோகிப்பதை முற்றிலுமாக தடுக்க தற்போது நடைமுறையில் இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளால் பலன் இல்லை. எனவே இதில் உள்ள நிறைகுறைகளை ஆராய்ந்து, பணமழை தூறலாகக்கூட பெய்யாத வகையில் கடும் நடவடிக்கைகளை ஆர்.கே.நகர் உள்பட அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் கமி‌ஷன் எடுக்கவேண்டும்.

Next Story