மக்கள் சேவைகளுக்கு காலநிர்ணயம்


மக்கள் சேவைகளுக்கு காலநிர்ணயம்
x
தினத்தந்தி 17 April 2017 8:30 PM GMT (Updated: 17 April 2017 6:42 PM GMT)

பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு ஏதாவது கோரிக்கைகள், குறைகள், புகார்கள் இருந்தால் அதை அரசு ஊழியர்களிடம்தான் தெரிவிக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது.

பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு ஏதாவது கோரிக்கைகள், குறைகள், புகார்கள் இருந்தால் அதை அரசு ஊழியர்களிடம்தான் தெரிவிக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால், பலநேரங்களில் பொதுமக்களின் முறையீடுகளுக்கு உரியதீர்வு ஒரு குறிப்பிட்ட காலகெடுவுக்குள் வராமல் அப்படியே முடங்கிப்போய் இருப்பது பெரிய குறையாக இருக்கிறது. இந்தநிலையில், போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு குழுமம், காவல்துறையினர் பொதுமக்கள் சேவையில் பதில் சொல்லவேண்டிய கட்டாயத்திற்கு ஆட்படுத்தவேண்டும் என்ற நிலையில், 45 சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கும் சேவைகள் என்று வகைப்படுத்தி, ஒவ்வொரு சேவையும் செயல்படுத்தவேண்டிய காலக்கெடுவும் அதில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, ஒரு புகார்கொடுத்தால் அன்றே ‘முதல் தகவல் அறிக்கை’ என்று கூறப்படும் ‘எப்.ஐ.ஆர்.’ வழங்கப்படவேண்டும். பாஸ்போர்ட் விண்ணப்பம் தொடர்பான விசாரணைகளை 20 நாட்களுக்குள் முடிக்கவேண்டும். ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்கள், ஊர்வலம் தொடர்பான வேண்டுகோளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவேண்டும். துப்பாக்கி, வெடிபொருள் லைசன்சுக்காக விண்ணப்பித்தால் தடையில்லா சான்றிதழுக்கு காலக்கெடு 20 நாட்கள். ஏதாவது வழக்குகளுக்காக வாகனங்களை போலீசார் எடுத்துச்சென்றிருந்தால், அதை 3 நாட்களுக்குள் திருப்பிக்கொடுக்கவேண்டும் என்பதுபோல 45 சேவைகளை குறிப்பிட்டு, இதை செய்யத்தவறினால் சம்பந்தப்பட்ட போலீசாருக்கு ஒரு நாளைக்கு ரூ.250 அபராதம், அல்லது மொத்தமாக ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளது. தற்போது இது பரிந்துரை அளவில்தான் இருக்கிறது. இன்னமும் அமலுக்கு வரவில்லை. 729 பேருக்கு ஒரு போலீஸ்காரர் என்ற வகையில்தான் போலீசாரின் எண்ணிக்கை இருப்பதால், இந்த காலக்கெடு கடினமானது என்பது போலீஸ் தரப்பின் கருத்தாக இருக்கிறது.

இவ்வளவு அபராதம் விதிப்பது ஒருவேளை தேவையில்லாத கடுமையான தண்டனை என்று கருதினால், வேறுவகையில் அவர்களை பொதுமக்கள் சேவையில் பதில் சொல்லவேண்டிய பொறுப்பு கடமைக்கு ஆளாக்கவேண்டும். காவல்துறைக்கு மட்டுமல்லாமல், தமிழக அரசிலும் பொதுமக்கள் சேவையில் உள்ள எல்லாத்துறைகளிலும், பொதுமக்களுக்கான சேவைகளை இதுபோல வகைப்படுத்தி, அதற்கு காலக்கெடு நிர்ணயிக்கும் மக்கள் பிரகடனத்தை உடனடியாக தமிழக அரசு வெளியிடவேண்டும். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை நிறைவேற்ற வேண்டிய காலக்கெடு குறித்து 2006, 2013–ம் ஆண்டுகளில் அரசு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. ஆனால், 1.8.2014–ல் பிறப்பிக்கப்பட்ட ஐகோர்ட்டு உத்தரவின் பேரில், இந்த சட்டங்களில் கூறப்பட்ட நடைமுறைகள் திருத்தியமைக்கப்பட்டு, புதிய சட்டம் 21.09.2015–ல் பிறப்பிக்கப்பட்டது.

இந்த சட்டத்தின்படி, ஆன்லைனிலோ, தபாலிலோ, நேரிலோ, பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவித்து, அதற்கான தீர்வுகேட்கும் கோரிக்கை மனுக்கள் கொடுத்தால், 3 நாட்களுக்குள் அந்த மனு கிடைத்தது என்ற ஒப்புதல் சீட்டை அனுப்பவேண்டும். ஒரு மாதத்திற்குள் அந்தகுறைகள் தீர்க்கப்பட்டுவிட வேண்டும். இதுதொடர்பாக அந்த மனுவை கொடுத்த பொதுமக்களுக்கும் அந்த தகவலை தெரிவிக்கவேண்டும். ஒருவேளை கூடுதல் காலம் தேவைப்பட்டாலும், அந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறு இல்லையென்றாலும், அதையும் மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு பிறப்பித்த உத்தரவிலேயே கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவெல்லாம் ஏட்டளவில்தான் இருக்கிறதே தவிர, தற்போது எங்கும் நடைமுறையில் இருந்ததாக தெரியவில்லை. இதுமட்டுமல்லாமல், காவல்துறைக்கு தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது போல, தமிழக அரசிலும் அனைத்து துறைகளிலும் உள்ள மக்கள் சேவைகளை வகைப்படுத்தி, ஒவ்வொரு சேவையையும் மக்கள் விண்ணப்பித்த நாளிலிருந்து இத்தனை நாட்களுக்குள் அவர்களுக்கு கிடைக்கும் என்ற ஒரு காலஅட்டவணையை அறிவிக்கவேண்டும். அதற்குரிய பொறுப்பு கடமையையும் அதாவது பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தையும் சம்பந்தப்பட்ட அலுவலர் மீது சுமத்த வேண்டும்.


Next Story