மாணவர்களிடம் வீண் நம்பிக்கையை வளர்க்க வேண்டாம்


மாணவர்களிடம் வீண் நம்பிக்கையை வளர்க்க  வேண்டாம்
x
தினத்தந்தி 18 April 2017 9:30 PM GMT (Updated: 18 April 2017 2:40 PM GMT)

தமிழ்நாட்டில் ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு கிடைக்குமா?, கிடைக்காதா? என்று எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், கிடைக்காது, கிடைக்காது, கிடைக்கவே கிடைக்காது என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா நெற்றியடியாக பதில் சொல்லிவிட்டார்.

மிழ்நாட்டில் ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு கிடைக்குமா?, கிடைக்காதா? என்று எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், கிடைக்காது, கிடைக்காது, கிடைக்கவே கிடைக்காது என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா நெற்றியடியாக பதில் சொல்லிவிட்டார். இந்தியா முழுவதும் எம்.பி.பி.எஸ். படிப்புக்கும், எம்.டி., எம்.எஸ். போன்ற பட்டமேற்படிப்புகளுக்கும், இதேபோல பல் மருத்துவக்கல்லூரி படிப்புகளுக்கும் தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வு என்று கூறப்படும் ‘நீட்’ தேர்வு மூலம்தான் மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ‘நீட்’ தேர்வு வினாக்கள் சி.பி.எஸ்.இ. 11–வது, 12–வது வகுப்பு பாடத்திட்டங்களில் இருந்து கேட்கப்படுகின்றன. தமிழக மாணவர்கள் மாநில கல்வித்திட்டத்தின் கீழ் படித்துவருகிறார்கள். அவர்களால் இந்த தரத்தில் எழுதி வெற்றிபெற முடியாது. மேலும், கிராமப்புற மாணவர்களும் எளிதில் வெற்றிபெற முடியாது.

எனவே, ‘நீட்’ தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு நிரந்தர விலக்கு கோரி, சட்டசபையில் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தன. ஜனாதிபதியின் ஒப்புதல் பெறவேண்டுமென்றால், மத்திய அரசாங்க சுகாதாரத்துறை, சட்டத்துறை, மனிதவள மேம்பாட்டுதுறைகள் பரிந்துரையளிக்கவேண்டும். ஆனால், இந்தத்துறைகள் பரிந்துரை அளிக்கவில்லை. தமிழ்நாட்டின் சார்பில் எவ்வளவோ முயற்சிகள் நடந்தன. மே 7–ந் தேதி தேர்வுகள் நடக்கப்போகும் நிலையில், மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா சென்னைக்கு வந்தபோது, தமிழ்நாடு உள்பட எந்த மாநிலமும் ‘நீட்’ தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு பெறமுடியாது. மருத்துவப்படிப்பு, பல் மருத்துவப் படிப்புக்கு ‘நீட்’ தேர்வு எழுதித்தான் சேரமுடியும் என்பதை உறுதிபட தெரிவித்துவிட்டார். ‘வேண்டுமானால் தமிழக அரசு, கிராமப்புற மாணவர்களுக்கும், தமிழக கல்வித்திட்டத்தின்கீழ் படித்த மாணவர்களுக்கும் தனியாக ஒதுக்கீடு நிர்ணயித்துக்கொள்ளலாம்’ என்று கூறியிருக்கிறார். ஆனால், 1996–ம் ஆண்டில் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் கிராமப்புற மாணவர்களுக்கு தி.மு.க. அரசு 15 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்தது. பின்பு அ.தி.மு.க. அரசில் இந்த இடஒதுக்கீடு 25 சதவீதமாக உயர்த்தப்பட்டது. ஆனால், கிராமப்புற மாணவர்களுக்கான இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து சில மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது, உயர்நீதிமன்றம் இந்த கிராமப்புற மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்தது. சுப்ரீம் கோர்ட்டும், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்துவிட்டது. எனவே, மத்திய மந்திரி கூறியதுபோல, ‘நீட்’ தேர்வு எழுதும் கிராமப்புற மாணவர்களுக்கு தமிழக அரசு நிச்சயமாக தனியாக இடஒதுக்கீடு அளிக்கமுடியாது. மாநில கல்வித்திட்டத்தின் கீழ் படித்தவர்களுக்கு தனியாக கோட்டா வழங்கும் ஒரு நடவடிக்கையை குஜராத் அரசாங்கம் எடுத்துள்ளது. அதுவும் இப்போது கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. தமிழக அரசு அந்தமுடிவை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. ஆனால், அதுவும் நிச்சயமில்லை.

மருத்துவப் படிப்புக்கு எப்படி ‘நீட்’ தேர்விலிருந்து விலக்குப்பெற முடியவில்லையோ?, அதேநிலைதான் அடுத்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புக்கும் ஏற்படும். எனவே, எப்படி மருத்துவப்படிப்புக்கு மாணவர்கள் ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு கிடைக்கும் என்று ஏமாந்துபோனார்களோ, அதே நிலைமையை பொறியியல் படிப்புக்கும் ஏற்படுத்தாமல், இந்த கல்வி ஆண்டு முதலே அவர்களை ‘நீட்’ தேர்வுக்கு தயார்படுத்துவதற்கான முயற்சிகளை தமிழக கல்வித்துறை தொடங்கவேண்டும். இப்போது மருத்துவப்படிப்புக்கு ‘நீட்’ தேர்வு நிச்சயமாகிவிட்டது. கிராமப்புற மாணவர்களுக்கு ஒதுக்கீடு, தமிழக கல்வித்திட்டத்தில் படித்தவர்களுக்கு ஒதுக்கீடு என மாணவர்களுக்கு வீண் நம்பிக்கையை வளர்க்கவேண்டாம் என்பதே பொதுவான கோரிக்கையாக இருக்கிறது.

Next Story