தமிழ்நாடு கையில் துருப்புச்சீட்டு


தமிழ்நாடு  கையில்  துருப்புச்சீட்டு
x
தினத்தந்தி 19 April 2017 9:30 PM GMT (Updated: 2017-04-19T19:58:56+05:30)

சமீபத்தில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் முடிந்திருக்கிறது. 4 மாநிலங்களில் பா.ஜ.க.வும், ஒரு மாநிலத்தில் காங்கிரசும் ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது.

மீபத்தில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் முடிந்திருக்கிறது. 4 மாநிலங்களில் பா.ஜ.க.வும், ஒரு மாநிலத்தில் காங்கிரசும் ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது. பா.ஜ.க. 4 மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றினாலும், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பெற்ற பெருவாரியான வெற்றிதான், வருகிற ஜூலை மாதத்தில் நடைபெற இருக்கும் 14–வது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தங்கள் சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்த பா.ஜ.க.வுக்கு கைகொடுக்கும். ஆனால், முழுமையான வெற்றிக்கு இது போதாது. அதுபோல, இந்த வெற்றி டெல்லி மேல்–சபையில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உடனடியாக அதிகரித்துவிடாது. தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நிதி மந்திரியாக இருந்தவர். பழுத்த காங்கிரஸ்காரர். கடந்த தேர்தலில் அவரை காங்கிரஸ் கட்சி நிறுத்தி வெற்றிபெற வைத்தது. பிரணாப் முகர்ஜியின் பதவிகாலம் ஜூலை மாதத்தில் முடிகிறது. எனவே, அதற்கு முன்னால் புதிய ஜனாதிபதி தேர்தல் நடந்தாகவேண்டும். ஜூலை மாதம் புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்றாலும், இந்த தேர்தலுக்கான நடைமுறைகள் ஜூன் மாதத்திலேயே தொடங்கிவிடும்.

ஜனாதிபதி, பாராளுமன்றத்தின் இரு அவை உறுப்பினர்களாலும், மாநில சட்டசபை உறுப்பினர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மாநில மேலவை உறுப்பினர்கள் ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளிக்கும் உரிமை இல்லாதவர்கள் ஆவார்கள். இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள 4,120 எம்.எல்.ஏ.க்களும், 776 பாராளுமன்ற மற்றும் டெல்லி மேல்–சபை உறுப்பினர்களும், புதிய ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு அளித்து தேர்ந்தெடுக்கும் ‘எலக்ட்டோரல் காலேஜ்’ என்று கூறப்படும் ‘தேர்வுக்குழு’ என அழைக்கப்படுவார்கள். ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் ஓட்டுமதிப்பு 708 ஆகும். ஒரு எம்.எல்.ஏ.வின் ஓட்டுமதிப்பு அவருடைய மாநிலத்தின் மக்கள்தொகையை வைத்து கணக்கிடப்படும். அதாவது அந்த மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையை, அங்குள்ள மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வகுத்து, அதில் வரும் தொகையை மீண்டும் ஆயிரம் என்ற புள்ளியால் வகுத்தால், எவ்வளவு வருமோ? அதுதான் அந்த மாநில எம்.எல்.ஏ.வின் ஓட்டு மதிப்பாகும். ஒரு ஜனாதிபதி வேட்பாளர் வெற்றிபெற வேண்டுமென்றால், மொத்த மதிப்பில் பாதி மதிப்பு அதாவது 5,49,442 புள்ளிகள் எடுக்கவேண்டும். தற்போது உத்தரபிரதேசத்தில் 325 எம்.எல்.ஏ.க்கள் வெற்றிபெற்றிருந்தாலும், ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளருக்கு 5,31,954 புள்ளிகள்தான் கிடைக்கும். இன்னும் 17,488 புள்ளிகள் கிடைத்தால்தான் பா.ஜ.க. வேட்பாளர் வெற்றிபெற முடியும்.

தமிழ்நாட்டில், அ.தி.மு.க.வில் உள்ள 134 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 23,584 புள்ளிகள் இருக்கின்றன. இதேபோல் 57 எம்.பி.க்களுக்கு 40,356 புள்ளிகள் இருக்கின்றன. ஆக, அ.தி.மு.க.வின் ஆதரவுபோல, ஒடிசாவில் ஆளும் கட்சியாக இருக்கும் பிஜு ஜனதாதளத்திலும் எம்.எல்.ஏ.க்களுக்கு 17,433 புள்ளிகளும், எம்.பி.க்களுக்கு 19,824 புள்ளிகளும் இருக்கின்றன. ஜனாதிபதி தேர்தலிலும், முக்கியமான மசோதாக்கள் டெல்லி மேல்–சபையில் நிறைவேறுவதற்கும், அ.தி.மு.க.வின் ஆதரவு பா.ஜ.க.வுக்கு நிச்சயம் தேவை என்ற நிலையில், தமிழகத்தின் கோரிக்கைகள் எல்லாவற்றுக்கும் குறிப்பாக, நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் காவிரி மேலாண்மை வாரியம், தமிழக மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கான உதவிதொகை ரூ.1,650 கோடி, வறட்சி நிவாரணத் தொகையாக ஏற்கனவே கேட்ட ரூ.39,565 கோடி, ‘வார்தா’ புயல் நிவாரணத்தொகை ரூ.22,573 கோடி உள்பட பல கோரிக்கைகளுக்கு அழுத்தம் கொடுத்து பெறுவதற்கான சரியான நேரம் இதுதான். ஏனெனில், கையில் துருப்புச்சீட்டை வைத்துக்கொண்டு தயங்கிக்கொண்டிருக்க வேண்டிய தேவையே இல்லை.

Next Story