பாராட்டுக்குரிய பிரதமர், முதல்–அமைச்சர்


பாராட்டுக்குரிய பிரதமர், முதல்–அமைச்சர்
x
தினத்தந்தி 20 April 2017 9:30 PM GMT (Updated: 2017-04-20T19:03:32+05:30)

ஆங்கிலேயர்கள் ஆட்சி முடிந்து ஆண்டுகள் பல உருண்டோடினாலும், இன்னமும் அவர்களது ஆதிக்கத்திலிருந்தபோது பின்பற்றப்பட்ட பல வி.ஐ.பி. கலாசாரங்கள் அமலில் இருக்கிறது.

ங்கிலேயர்கள் ஆட்சி முடிந்து ஆண்டுகள் பல உருண்டோடினாலும், இன்னமும் அவர்களது ஆதிக்கத்திலிருந்தபோது பின்பற்றப்பட்ட பல வி.ஐ.பி. கலாசாரங்கள் அமலில் இருக்கிறது. அதில் ஒன்றுதான் மிக முக்கிய பிரமுகர்கள். அதாவது, வி.ஐ.பி. என்ற அந்தஸ்தில் இருக்கும் தலைவர்கள் தங்கள் கார்களில் சுழலும் சிவப்பு விளக்குகளை சைரன்கள் அலற பொருத்திக்கொண்டு செல்வதாகும். மோட்டார் வாகன விதிப்படி, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், துணைபிரதமர், பாராளுமன்ற, சட்டசபை சபாநாயகர்கள், மத்திய–மாநில அமைச்சர்கள், திட்டக்கமி‌ஷன் துணைத்தலைவர், மாநில கவர்னர்கள், நீதிபதிகள், முதல்–அமைச்சர்கள், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட உயர் அதிகாரிகள் மற்றும் சிலர் மட்டுமே பொருத்திக்கொள்ளலாம். ஆனால், நடைமுறையில் இவர்கள் மட்டுமல்லாமல், சில எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் போன்ற அரசியல்வாதிகள், போலீஸ் டி.எஸ்.பி.க்கள், ஏன் பஞ்சாயத்து தலைவர்கள் வரை எல்லோருமே அந்தஸ்தின் அடையாளமாக சிவப்பு விளக்குகளை தங்கள் வாகனங்களில் பொருத்திக்கொள்கிறார்கள். பலநேரங்களில் இவ்வாறு தவறாக பயன்படுத்தப்படும் வாகனங்களை பார்த்தவுடன், யார் வருகிறார்கள்? என்று தெரியாமல், விரைப்பாக ‘சல்யூட்’ அடித்து மற்ற வாகனங்களை போலீசார் நிறுத்திவிடுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க, பிரதமர் இதுதொடர்பாக தீவிர நடவடிக்கை எடுத்தார். நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவைக்கூட்டத்தில், ஜனாதிபதி முதல் பிரதமரிலிருந்து யாருமே இனி சுழலும் சிவப்பு விளக்குகளை கார்களில் பொருத்தக்கூடாது. இதற்கான அறிவிக்கைகள் விரைவில் வெளியிடப்படும் என முடிவெடுக்கப்பட்டது. இத்தகைய சுழலும் சிவப்பு விளக்குகள் பொருத்துவது என்பது வி.ஐ.பி. கலாசார அடையாளமாக கருதப்படுகிறது. ஜனநாயக பண்பை வளர்க்கும் வகையில், மத்திய அரசாங்கம் இந்த சரித்திரம் வாய்ந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், அவசரகால மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபடும் அனைத்து வாகனங்கள், ஆம்புலன்ஸ், தீயணைக்கும்படை போன்ற வாகனங்கள் தங்கள் கார்களில் நீலநிற விளக்குகளையும், சைரனையும் பொருத்திக்கொள்ளலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆக, இனி வி.ஐ.பி. கலாசாரம் அடியோடு நாட்டிலிருந்து ஒழிக்கப்படுகிறது. மத்திய மந்திரி வெங்கையா நாயுடு எப்போதுமே தன் காரில் சுழலும் சிவப்புவிளக்கை பொருத்துவதில்லை. அதேபோல, டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான மாநில அரசிலும், அம்ரிந்தர் சிங் தலைமையிலான பஞ்சாப் மாநில அரசிலும், யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேசத்திலும் முதல்–மந்திரிகளோ, மற்ற அமைச்சர்களோ தங்கள் கார்களில் சுழலும் சிவப்பு விளக்குகளை பொருத்துவதில்லை. அரசாங்கம் எடுத்த இந்த நடவடிக்கையை குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, அனைவரிடத்திலிருந்தும் வி.ஐ.பி. என்று ஒரு தனிப்பிரிவு சுழலும் சிவப்புவிளக்கு கொண்ட மற்றும் சைரன்களை தங்கள் கார்களில் பொருத்திக்கொண்டு தனித்துவமாக இயங்குவது அமைச்சரவை முடிவின் மூலம் விலக்கப்படுகிறது. ஒவ்வொரு இந்தியரும் ஸ்பெ‌ஷல்தான், ஒவ்வொரு இந்தியரும் வி.ஐ.பி.தான் என்று குறிப்பிட்டிருப்பது, நிச்சயமாக ஒவ்வொரு இந்தியரையும் பெருமைகொள்ள வைக்கிறது.

பிரதமர் எடுத்தமுடிவு உத்தரவாகவோ, சுற்றறிக்கையாகவோ வரும்முன்பே, நேற்று தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் காரிலிருந்து சுழலும் சிவப்புவிளக்கை அகற்றிவிட்டார். அமைச்சர்களும், அதிகாரிகளும் தங்கள் கார்களில் சிவப்புவிளக்கை பொருத்தமாட்டார்கள் என்று அறிவித்துவிட்டார். முதல்–அமைச்சர் தன் காரிலிருந்து அகற்றியவுடன், அடுத்த சிலநிமிடங்களிலேயே அமைச்சர்களும், உயர்அதிகாரிகளும் தங்கள் கார்களிலிருந்து சிவப்பு விளக்கை அகற்றிவிட்டனர். வரலாற்று சிறப்புமிகுந்த இந்த நடவடிக்கையை எடுத்த பிரதமரும், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் நிச்சயமாக பாராட்டுதலுக்குரியவர்கள். இனி தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதிலும் சுழலும் சிவப்புவிளக்கு கொண்ட கார்களை பார்க்கமுடியாது. இதற்கு முன்உதாரணம் தமிழகம்தான்.

Next Story