இந்தியா முழுவதிலும் ஒரேவிதமான கல்வி


இந்தியா முழுவதிலும் ஒரேவிதமான  கல்வி
x
தினத்தந்தி 26 April 2017 8:30 PM GMT (Updated: 2017-04-26T19:44:21+05:30)

மத்திய பட்ஜெட் என்றாலும், மாநில பட்ஜெட் என்றாலும் சரி, கல்வி வளர்ச்சிக்கு தனி முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.

த்திய பட்ஜெட் என்றாலும், மாநில பட்ஜெட் என்றாலும் சரி, கல்வி வளர்ச்சிக்கு தனி முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.  இந்தியா  முழுவதிலும் மத்திய பட்ஜெட்டிலும், மாநில பட்ஜெட்களிலும், கல்விக்காக நிதி ஒதுக்கப்படுகிறது. மத்திய அரசாங்கம் பள்ளிக்கூட கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி கடந்த 4 ஆண்டுகளாகவே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.7 சதவீதமாக அப்படியே நிலையாக இருக்கிறது என்பது பெரும் குறையாக இருக்கிறது. இந்தியாவைவிட 60 மடங்கு சிறிய நாடு, மத்திய அமெரிக்காவில் உள்ள கோஸ்டா ரிகா என்ற குட்டி நாடு. மொத்தம் 50 லட்சம் மக்கள் தொகையை கொண்ட இந்தநாட்டில், அவர்களுடைய பட்ஜெட்டில் 20 சதவீதம் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆக, கல்விதான் ஒரு நாட்டுக்கு பெரிய மாற்றத்தையும் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும் என்பது உலகளாவிய அளவில் நிரூபிக்கப்பட்ட ஒரு உண்மையாகும். எனவே, மத்திய அரசாங்கம் கல்விக்காக இன்னும் கூடுதலாக நிதி ஒதுக்கவேண்டும் என்பதுதான் பொதுவான கோரிக்கையாக இருக்கிறது. தமிழக அரசை பொறுத்தமட்டில், ஆண்டுதோறும் பட்ஜெட்டில் கல்விக்காக ஒதுக்கப்படும் தொகை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த ஆண்டு மட்டும் தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கூட கல்விக்காக ரூ.26,932 கோடியும், உயர் கல்விக்காக ரூ.3,680 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு தூரம் கல்விக்காக நிதி ஒதுக்கப்படும்போது, இந்தியா முழுவதும் ஒரேவிதமான உயர் கல்வித்தரம் இல்லாமல் இருப்பதுதான் பல ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துகிறது.

மத்திய செகண்டரி கல்விவாரியம் என்று அழைக்கப்படும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் வேறாக இருக்கிறது. மாநில கல்வித்திட்டங்களின் பாடத்திட்டங்கள் வேறாக இருக்கிறது. இதுபோல, வேறு சில கல்வித் திட்டங்களும் இருக்கின்றன.  அதற்கும்  வேறுவகையான   பாடத்திட்டங்கள் இருக்கின்றன. இந்த நிலையில், பல நேரங்களில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம்தான் உயர்ந்த கல்வித்தரத்தில் இருக்கிறது என்ற உணர்வு பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. மருத்துவக்கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் ‘நீட்’ தேர்வில்கூட சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் உள்ள 11–வது, 12–வது வகுப்பு பாடங்களில் இருந்துதான் கேள்விகள் கேட்கப்படுவதால், மற்ற கல்வித்திட்டத்தில் படித்தவர்களால் எளிதில் வெற்றிபெற முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. தற்போது சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிக்கூடங்களிலும், கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கூடங்களிலும், 10–ம் வகுப்பு வரை கண்டிப்பாக இந்தி கற்றுக்கொடுக்கப்படவேண்டும் என்று பாராளுமன்ற குழு பரிந்துரை செய்து, ஜனாதிபதியின் ஒப்புதலும் கிடைத்துள்ளது. மேலும், மத்திய அரசாங்க மனிதவள மேம்பாட்டுத்துறை, மாநில அரசுகளோடு கலந்து ஆலோசித்து ஒரு புதிய கல்விக்கொள்கையை உருவாக்கவேண்டும் என்றும் ஜனாதிபதியின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அந்தவகையில், உருவாகப்போகும் புதிய கல்விக்கொள்கை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து கல்வித்திட்டங்களின் கீழ் இயங்கும் எல்லா பள்ளிக்கூடங்களிலும் அந்தந்த மாநில வரலாறுகள், பண்பாடுகள், கலாசாரங்கள், முக்கிய தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் போன்றவற்றையும் அந்தந்த மாநில மாணவர்கள் நன்றாக தெரிந்துகொள்ளும் வகையிலான பாடத்திட்டங்கள் இருக்கவேண்டும். அதே நேரத்தில் ‘நீட்’ தேர்வு போன்ற பல்வேறு வகையான போட்டித்தேர்வுகளில் வெற்றி பெறும்வகையில் ஒரு சாரார் மட்டுமல்லாமல் அனைத்து கல்வித்திட்டங்களின் கீழ் படித்த மாணவர்களும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல என்ற முறையில் உயர்தரத்துடன் கூடிய கல்வி முறையைக் கொண்ட பாடத்திட்டங்களை உருவாக்குவதையே குறிக்கோளாகக் கொள்ளவேண்டும். மொத்தத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாணவர்களும் ஒரேவிதமான உயர் கல்வித்தரம் பெற்றவர்கள் என்ற நிலையை வளர்க்கவேண்டும்.


Next Story