டெல்லி மாநகராட்சிகளில் மீண்டும் பா.ஜ.க. வெற்றி


டெல்லி மாநகராட்சிகளில் மீண்டும்  பா.ஜ.க. வெற்றி
x
தினத்தந்தி 27 April 2017 8:30 PM GMT (Updated: 27 April 2017 1:37 PM GMT)

சமீபத்தில் நடந்த உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மாநிலங்களிலும், அடுத்து நடந்த சில சட்டசபை இடைத்தேர்தல்களிலும் வெற்றிவாகை சூடியது பா.ஜ.க.

மீபத்தில் நடந்த உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மாநிலங்களிலும், அடுத்து நடந்த சில சட்டசபை இடைத்தேர்தல்களிலும் வெற்றிவாகை சூடிய பா.ஜ.க. டெல்லியில் வடக்கு டெல்லி, தெற்கு டெல்லி, கிழக்கு டெல்லி மாநகராட்சி தேர்தல்களில் வெற்றி மீது வெற்றி வந்து என்னைசேரும் என்று வெற்றிவாகைச் சூடப்போகிறதா? அல்லது தோல்வியை தழுவப்போகிறதா? என்று ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. கடந்த 2 தேர்தல்களில் பா.ஜ.க. தான் இந்த மாநகராட்சிகளில் வெற்றி பெற்றிருந்தது. எனவே ஆளும்கட்சி மீதுள்ள அதிருப்தி இந்ததேர்தலில் எதிரொலிக்குமா? என்று எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். 2015–ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில், 67 இடங்களைப்பெற்று ஊழல் ஒழிப்புக்கே நான் தான் இந்த நாட்டின் பிதாமகன் என்பதுபோல மார்தட்டிக்கொண்டிருக்கும் ஆம்ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்ததேர்தலில் எந்தளவுக்கு ஆளும் கட்சி என்ற தாக்கத்தை மாநகராட்சியில் ஏற்படுத்தியுள்ளார் என்பதும் ஒரு பார்வையாக இருந்தது. காங்கிரஸ் கட்சிக்கு, டெல்லி மாநகராட்சி தேர்தல்களாவது மறுவாழ்வு அளிக்குமா என்ற ஆவல் அந்தக்கட்சி தொண்டர்களுக்கும் இருந்தது.

டெல்லி மாநகராட்சி என்பது ஏழை–எளிய நடுத்தரமக்களை பெரும்பான்மையாக கொண்டது. ஆக, இந்த மாநகராட்சியில் பெறும் வெற்றி, அடுத்தடுத்து வரப்போகும் தேர்தல்களுக்கு ஒரு ‘டிரெய்லர்’ போல இருக்கும் என்றவகையில், இந்த தேர்தல்முடிவு மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தங்களுக்கு இணையாக யாரும் இல்லை என்ற வகையில் பா.ஜ.க. 3 மாநகராட்சிகளிலும் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. வடக்கு டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 103 இடங்களில், பா.ஜ.க. 64 இடங்களிலும், ஆம்ஆத்மி 21 இடங்களிலும், காங்கிரஸ் 15 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. தெற்குடெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 104 இடங்களில், பா.ஜ.க. 70 இடங்களிலும், ஆம்ஆத்மி 16 இடங்களிலும், காங்கிரஸ் 12 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. கிழக்கு டெல்லி மாநகராட்சியில், மொத்தமுள்ள 63 இடங்களில், பா.ஜ.க. 47 இடங்களிலும், ஆம்ஆத்மி 11 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. ஆக, ஆளும்கட்சியாக இருப்பதானால், தொடர்ந்து மக்களுக்கு ஒருவிதசலிப்பு ஏற்பட்டு எதிர்க்கட்சிக்கு வாய்ப்பு கொடுப்பார்கள் என்ற தத்துவம் டெல்லியில் தோல்வியடைந்து விட்டது. இவ்வளவுக்கும் ஊழலை ஒழிப்பேன் என்று முழங்கிக்கொண்டிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் இந்ததேர்தலில் ஆம்ஆத்மி வெற்றிப்பெற்றால் மாநகராட்சிகளில் சொத்துவரி ரத்துசெய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.

சொத்துவரி தான் மாநகராட்சியின் முக்கிய வரிவருவாய். அதை ரத்து செய்து விட்டால் என்ன அடிப்படை வசதிகளை டெல்லி மாநகருக்கு, இந்த 3 மாநகராட்சிகளும் செய்துவிடமுடியும் என்று புரிந்துகொண்ட மக்கள், இதற்கு முக்கியத்துவமே கொடுக்கவில்லை. இதுமட்டுமல்லாமல், நரேந்திரமோடி–அமித்ஷாவின், தேர்தல் தந்திரங்கள் மிக சரியாக வேலை பார்த்திருக்கிறது. டெல்லி பா.ஜ.க.வுக்கு யாரை தலைமைப்பொறுப்பில் நியமிக்கலாம் என்றகணிப்பில் பீகார் நடிகர் மனோஜ் திவாரி தலைமையில் பா.ஜ.க.வை வழிநடத்திச்செல்ல வகைசெய்தது மட்டுமல்லாமல், மாநகராட்சி தேர்தல்களில் பழையமுகங்களுக்கு விடைகொடுத்துவிட்டு புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளித்தது பெரிய பலனை கொடுத்துள்ளது. அடுத்தடுத்து நடக்கும் தேர்தல் முடிவுகளைப் பார்த்தால் நாட்டில் மோடி அலை வீசுகிறது, அவர் மீதும் அவர் அறிவிக்கும் திட்டங்கள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று தான் எண்ணத்தோன்றுகிறது. இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ள குஜராத், ராஜஸ்தான் சட்டசபை தேர்தலையும், 2019–ல் பாராளுமன்ற தேர்தலையும், அடுத்து பல மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களையும் சந்திக்கஇருக்கும் பா.ஜ.க.வுக்கு டெல்லி தேர்தல் வெற்றி நிச்சயமாக உற்சாக டானிக்தான்.

Next Story