விவசாயிகளின் துயர்துடைக்க, நதிகள் இணைப்பு


விவசாயிகளின் துயர்துடைக்க, நதிகள்  இணைப்பு
x
தினத்தந்தி 28 April 2017 8:30 PM GMT (Updated: 2017-04-28T18:24:00+05:30)

கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் ‘நிதி ஆயோக்’ என்ற திட்டக்குழுவுக்கு மாற்று அமைப்பு கூட்டம் நடந்தது.

டந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் ‘நிதி ஆயோக்’ என்ற திட்டக்குழுவுக்கு மாற்று அமைப்பு கூட்டம் நடந்தது. பிரதமர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அடுத்த 3 ஆண்டுகளில், எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்பட்டது. இந்த 3 ஆண்டுகள் நடவடிக்கை என்பது, ஏற்கனவே இந்தியாவில் நடைமுறையில் இருந்த 5 ஆண்டு திட்டங்களுக்கு ஒருமுடிவு கட்டிவிட்டது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில், 5 ஆண்டு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வந்தன. கடந்த மார்ச் 31–ந்தேதியோடு, 12–வது, ஐந்து ஆண்டு திட்டம் முடிந்திருக்கிறது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபிறகு, 2014–ம் ஆண்டு டிசம்பர் மாதம் திட்டக்குழு கலைக்கப்பட்டு, ‘நிதி ஆயோக்’ என்ற அமைப்பு நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. நடந்துமுடிந்த ‘நிதி ஆயோக்’ கூட்டம் 3 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை வகுத்தாலும், 15 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டங்களையும் தீட்டியுள்ளது. திட்டக்குழுவின் செயல்பாடு 5 ஆண்டு திட்டங்களை வகுப்பதும், மாநிலங்களுக்கு நிதிஆதாரங்களை ஒதுக்கீடு செய்வதுமாகும். ஆனால், நிதி ஆயோக் அமைப்புக்கு 3 பணிகள் வகுக்கப்பட்டுள்ளன. முதல்பணியாக கூட்டுறவு கூட்டாட்சியை வளர்ப்பது, 2–வது பணி திட்டங்களை வகுப்பதில் மத்திய அரசாங்கத்திற்கு உதவுவது, 3–வது பணி அரசின் சிந்தனை தளமாக செயல்படுவதாகும். ‘நிதி ஆயோக்’ அமைப்பில் அனைத்து மாநில முதல்–அமைச்சர்களும் முக்கியபங்கு வகிக்கிறார்கள்.

கடந்த ஆண்டு நடந்த கூட்டத்தில் முதல்–அமைச்சர்களை கொண்ட 3 துணை குழுக்கள் அமைக்கப்பட்டன. ஒருகுழு மாநிலங்களில் நிறைவேற்றப்படும் மத்திய அரசின் உதவியோடு நடக்கும் திட்டங்கள் பற்றியதாகும். அடுத்தகுழு திறன்மேம்பாடு, அடுத்தது தூய்மை இந்தியா திட்டத்தை உள்ளடக்கியதாகும். இதுதவிர 2 பணிக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. அந்த பணிக்குழுக்கள் வேளாண்மேம்பாடு மற்றும் ஏழ்மை ஒழிப்பு பற்றியதாகும். இந்த ஆண்டு கூட்டத்தில், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது தொடர்பாகத்தான் பெரிதும் விவாதிக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75–வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும்போது, அதாவது 2022–ல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கவேண்டும் என்பதில், பிரதமர் நரேந்திரமோடி மிகமுனைப்போடு இருக்கிறார். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், விவசாயிகளுக்கு 2 மடங்கு வருமானம் வேண்டுமென்றால் முதலில் விவசாயத்திற்கு முக்கியத்தேவையான தண்ணீர்வசதி எப்போதும் இருக்கவேண்டும்.

நாட்டில் உள்ள நீர்வளங்களை சரியான மற்றும் சமமான முறையில் பகிர்ந்து கொள்வதை உறுதி செய்வதற்கான நீண்டகால தீர்வு என்பது, ஆறுகளை ஒன்றிணைப்பதாகும். முதலில் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்த வேண்டுகோள்படி, தென்னக மாநில ஆறுகளை ஒன்றிணைக்கும் வகையில் மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, பாலாறு, காவிரி, வைகை மற்றும் குண்டாறு, ஆகியவற்றை இணைப்பதற்கும், கேரளாவில் மேற்கு நோக்கிப்பாய்ந்து வீணாக கடலில் கலக்கும் ஆறுகளை, தமிழ்நாடு நோக்கி திருப்பிவிடுவதற்கும் உரிய திட்டங்களை வகுக்கவேண்டும். நதிகள் இணைப்புத்திட்டம் செயல்படுத்த வேண்டும் என்றால் மாநிலங்களுக்கிடையே ஓடும் அனைத்து ஆறுகளையும் முதலில் தேசியமயமாக்கவேண்டும். இதுமட்டுமல்லாமல் விவசாயிகளின் கடன்களை ரத்துசெய்வது மட்டுமே அவர்கள் இடர்பாட்டை போக்கும் என்றில்லாமல், அவர்களுடைய பொருட்களுக்கு உரியவிலை கிடைக்கவும், இடுபொருட்களின் விலையை குறைக்கவும், விவசாயம் சாராத வகையிலான ஆடு, மாடு, கோழி, மீன்வளர்ப்பு போன்ற துணை தொழில்களையும் விவசாயத்தோடு சேர்ந்து செய்வதை ஊக்குவிக்கும் வகையில் திட்டங்கள் தீட்டப்படுவது மூலமாக மட்டுமே அவர்களின் வருமானத்தை பெருக்கமுடியும். மேலும் இடைத்தரகர்கள் இல்லாமல், நேரடியாக அவர்களிடம் வியாபாரிகளும், நுகர்வோரும் ஏன் அரசாங்கமும்கூட கொள்முதல் செய்யும் வகையில் ஏற்பாடுகளை செய்வதன் மூலமாக மட்டுமே விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக உயர்த்தமுடியும்.

Next Story