உடனடி தேவை லோக்பால், லோக் ஆயுக்தா அமைப்புகள்


உடனடி தேவை லோக்பால், லோக் ஆயுக்தா அமைப்புகள்
x
தினத்தந்தி 30 April 2017 9:30 PM GMT (Updated: 2017-05-01T00:32:24+05:30)

எல்லா அரசியல் கட்சிகளும் மக்களின் நாடித்துடிப்பை நன்கு அறிந்து இருக்கும் காரணத்தினால்தான் ஒவ்வொரு தேர்தலின்போதும் ஊழலற்ற சமுதாயத்தை படைப்போம் என்று முழங்குவது வழக்கம்.

ல்லா அரசியல் கட்சிகளும் மக்களின் நாடித்துடிப்பை நன்கு அறிந்து இருக்கும் காரணத்தினால்தான் ஒவ்வொரு தேர்தலின்போதும் ஊழலற்ற சமுதாயத்தை படைப்போம் என்று முழங்குவது வழக்கம். ஊழல் ஒரு புற்றுநோய்போல நாடுமுழுவதும், இப்போது அனைத்து மட்டங்களிலும் பரவிவிட்டது. கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை பரவலாக ஊழல் புகார்கள் கூறப்படுகின்றன. ஊழலை ஒழிக்கவேண்டும் என்பதற்காகத்தான் மத்தியில் லோக்பால் என்ற அமைப்பும், மாநிலங்களில் லோக் ஆயுக்தா என்ற அமைப்பும் தொடங்கப்படவேண்டும் என்பது கடந்த பல ஆண்டுகளாகவே எடுக்கப்பட்டுவரும் முயற்சியாகும். 1968–ம் ஆண்டு காங்கிரஸ் அரசாங்கம் தாக்கல் செய்த லோக்பால் மசோதாவிலிருந்து பல ஆண்டுகளாக எத்தனையோ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் இந்த சட்டம் நிறைவேற்றப்படாமல் இருந்தது. 2012–ம் ஆண்டில் காந்தியவாதி அன்னாஹசாரே டெல்லியில் மேற்கொண்ட காலவரையற்ற உண்ணாவிரதத்தின் விளைவாக 2013–ம் ஆண்டு டிசம்பர் 17–ந்தேதி லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 2014–ம் ஆண்டில் ஜனவரி 1–ந்தேதி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதல் பெற்றபிறகு ஜனவரி 16–ந்தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டது. ஆரம்பத்தில் காட்டிய வேகம் பிறகு அப்படியே முடங்கிப்போய்விட்டது.

ஊழல் ஒழிப்பை பிரதானமாக கூறும் பா.ஜ.க. அரசில் இந்த சட்டம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்த்தநிலையில், பா.ஜ.க. ஆட்சியிலும், இந்த சட்டம் நிறைவேற்றப்படவில்லை. லோக்பால் அமைப்பு என்பது ஒரு தலைவரை கொண்டும், அதிகபட்சம் 8 உறுப்பினர்களைக் கொண்டும் இயங்கவேண்டும். பிரதமர் முதல் அனைத்து பொதுஊழியர்கள் மீது எந்த ஊழல் புகார்கள் கூறப்பட்டாலும், அதை விசாரிக்கும் சர்வஅதிகாரம் படைத்தது லோக்பால் அமைப்பாகும். அதேபோல்தான் மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பு. லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களை பிரதமர், பாராளுமன்ற சபாநாயகர், எதிர்க்கட்சித்தலைவர், தலைமை நீதிபதி மற்றும் ஒரு பிரபல சட்டநிபுணர் ஆகியோர் கொண்ட குழு தேர்ந்தெடுக்கவேண்டும் என்று சட்டத்தில் விதி இருக்கிறது. ஆனால், இப்போதைய 16–வது பாராளுமன்றத்தில் அங்கீகாரம் பெற்ற எதிர்க்கட்சி தலைவர் இல்லை. ஏனெனில், மொத்தம் 543 உறுப்பினர்களில், 10 சதவீத உறுப்பினர்கள் ஒரு கட்சிக்கு இருந்தால்தான் அங்கீகாரம் உள்ள எதிர்க்கட்சியாக கருதப்படும். ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு தற்போது 45 உறுப்பினர்கள் மட்டுமே இருப்பதால், பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியை அங்கீகாரம் பெற்ற எதிர்க்கட்சியாக கருதவில்லை. இந்த காரணத்தைக்காட்டி லோக்பால் தேர்வுகுழுவில் இடம்பெறுவதற்கு அங்கீகாரம்பெற்ற எதிர்க்கட்சி தலைவர் இல்லை. அதனால்தான் நியமிக்கவில்லை என்று பா.ஜ.க. ஆட்சியின் தொடக்கம்முதலே கூறப்பட்டு வந்தது.

தற்போது உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு வந்தநேரத்தில் ஒரு உறுப்பினர் இல்லையென்றாலும், அதை காரணம்காட்டி, லோக்பால் தலைவர், மற்ற உறுப்பினர்களின் நியமனங்களும் செல்லாதது ஆகிவிடாது என்று விதி இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. லோக்பால் அமைப்பை உடனடியாக நியமிக்காமல் இருப்பதில் எந்தவித நியாயமும் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தெள்ளத்தெளிவாக கூறியுள்ளது. எனவே மத்திய அரசாங்கம் உடனடியாக லோக்பால் அமைப்பை உருவாக்கி பணிகளை தொடங்க வேண்டும். எதிர்க்கட்சி தலைவரையும் சேர்க்கவேண்டும் என்றால் பாராளுமன்றத்தில் நிலுவையில் இருக்கும் இதற்கான திருத்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாட்டை பொறுத்தமட்டிலும், அ.தி.மு.க. தேர்தல்அறிக்கையில் லோக்பால் சட்டத்தில் மத்தியஅரசு கொண்டுவர உள்ள திருத்தங்கள் நிறைவேற்றப்பட்ட உடன் தமிழகத்திற்கான லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மொத்தத்தில், எந்தவிதமான காரணங்களையும் சொல்லாமல் உடனடியாக மத்தியில் லோக்பால் சட்டமும், தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா சட்டமும் கொண்டுவந்து பெருகிவரும் லஞ்ச ஊழலை ஒழிப்பதற்கு முனைப்புடன் செயல்பட வேண்டும்.

Next Story