இயற்கை மரணம் என்றால், எதற்கு இழப்பீடு?


இயற்கை மரணம் என்றால், எதற்கு இழப்பீடு?
x
தினத்தந்தி 1 May 2017 8:30 PM GMT (Updated: 2017-05-01T22:43:57+05:30)

தமிழ்நாடு முழுவதும் கடந்த 140 ஆண்டுகளாக இல்லாதவகையில், தற்போது கடுமையான வறட்சி நிலவிக் கொண்டிருக்கிறது.

மிழ்நாடு முழுவதும் கடந்த 140 ஆண்டுகளாக இல்லாத வகையில், தற்போது கடுமையான வறட்சி நிலவிக் கொண்டிருக்கிறது. எந்த இடத்திலும் பசுமையையே காண முடியவில்லை. விவசாயம் என்பது இந்த ஆண்டு மட்டும் என்பதல்ல, கடந்த ஆண்டே தென்மேற்கு பருவமழை பொய்த்ததின் எதிரொலியாகவும், தொடர்ந்து வடகிழக்கு பருவமழையும் பொய்த்ததாலும் எங்குமே தண்ணீர் இல்லாமல் நீர்நிலைகள் எல்லாம் வற்றிப்போய் பெரும்பாலான விவசாயிகள் சாகுபடியை தொடங்கவில்லை. சம்பா பயிரை சாகுபடி செய்த விவசாயிகளும் தங்கள் கண் எதிரே பயிர்களெல்லாம் கருகியதைப் பார்த்து கண்ணீர் வடித்தனர். அதற்கு முந்தைய ஆண்டான 2015–ம் ஆண்டு பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக பயிர்கள் எல்லாம் அழிந்து வருமானத்தை இழந்து தவித்தனர். ஆகத்தொடர்ந்து 2 ஆண்டுகளாக எந்த வருமானமும் இல்லாமல் எல்லா விவசாயிகளின் வீட்டிலும் கடுமையான வறுமையும், வருமானம் இல்லாத நிலைமையும் நிலவுகிறது. கடந்த 27.2.2017 அன்று டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியிடம் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடுத்த மனுவிலேயே இந்த வறட்சியின் கோரத்தாண்டவம் மிக விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், 80–க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் 41 நாட்களாக மத்திய அரசாங்கத்தின் உதவியைக்கேட்டு, பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் கடந்த மாதம் 13–ந்தேதி சுப்ரீம்கோர்ட்டில் தமிழக விவசாயிகளின் நிலைமை குறித்து தொடரப்பட்ட ஒரு வழக்கில் நீதிமன்றம், தமிழக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? என்று கேட்டு கடுமையான கண்டனக் கணைகளை வீசியது. ‘‘மாநில அரசு என்பது மக்களுக்கு பெற்றோரைப் போன்றது. தமிழ்நாட்டில் விவசாயிகளின் சாவு, இவ்வளவு அதிகமாக இருக்கும்நிலையில் தன் மாநில மக்களை பாதுகாக்க வேண்டிய அக்கறையும், கவனமும் மாநில அரசுக்கு இருக்கிறது. ஏழ்மையால் வாடிக்கொண்டிருக்கும் விவசாயிகளை அவர்கள் தலைவிதி அவ்வளவுதான் என்று விட்டுவிடக் கூடாது. விவசாயிகளின் சாவுக்கு அரசின் அமைதி பதில் அல்ல’’ என்று கூறி, இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யும் படி உத்தரவிட்டது. வறட்சியின் காரணமாக 106–க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளநிலையில் தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல்செய்த அறிக்கையில் மொத்தம் 82 ஏழை விவசாயிகள் மாரடைப்பு, உடல்நலக்குறைவு காரணமாக இறந்திருக்கிறார்கள். 30 விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் வறட்சியின் காரணமாக தற்கொலை செய்யவில்லை. தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக தற்கொலை செய்திருக்கிறார்கள். 82 குடும்பங்களுக்கும் தலா ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது என்று கூறியிருப்பது, ஏற்கனவே வெந்துபோய் இருக்கும் விவசாயிகளின் நெஞ்சங்களில் வேல் செலுத்தியது போல் இருக்கிறது.

எல்லோருமே இயற்கைசாவு என்றால், எதற்காக தமிழக அரசு இழப்பீட்டு தொகை கொடுத்தது? தமிழக அரசே வறட்சியால் யாரும் சாகவில்லை, என்று சொன்னால் மத்திய அரசாங்கம் எப்படி விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை கொடுக்க முன்வரும் என்பதுதான் விவசாயிகள் கேட்கும் கேள்வியாகும். உண்மையிலேயே பல ஊர்களில், விவசாயிகள் கடன் தொல்லையாலும், தாங்கள் வளர்த்தபயிர் தங்கள் கண்முன்பே கருகியதைப் பார்த்து மனம் தாங்கிக் கொள்ள முடியாததாலும், குடும்பத்தில் உள்ள வறுமையினாலும் தான் உயிரை மாய்த்துள்ளனர். தமிழ்நாட்டில் நிலவும் வறட்சியால்தான் விவசாயிகள் தற்கொலை செய்ய வேண்டிய நிலையிருக்கிறது என்பதை வெளிப்படையாகவே சொல்லி, இவ்வளவு பரிதாபகரமான நிலைமை, தமிழ்நாட்டில் நிலவுகிறது. நாங்கள் வறட்சி நிவாரணமாக கேட்கும் ரூ.39 ஆயிரத்து 565 கோடியை முழுமையாக தர வேண்டும் என்று மத்திய அரசாங்கத்தை கேட்க வேண்டுமே தவிர விவசாயிகளின் மரணத்தை கொச்சைப்படுத்தக் கூடாது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரும்போது விவசாயிகளின் பரிதாபகர நிலையை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும். எதையும் மறைக்கக் கூடாது.

Next Story