பின்னடைவில் தொழிலும், விவசாயமும்


பின்னடைவில் தொழிலும்,  விவசாயமும்
x
தினத்தந்தி 2 May 2017 9:30 PM GMT (Updated: 2017-05-02T19:05:01+05:30)

எந்தவொரு நாடும், முன்னேற்றப்பாதையில் செல்லவேண்டுமென்றால், அங்கு பொருளாதார வளர்ச்சியும், தொழில் வளர்ச்சியும், விவசாய வளர்ச்சியும் மேம்பட்டு இருக்கவேண்டும்.

ந்தவொரு நாடும், முன்னேற்றப்பாதையில் செல்லவேண்டுமென்றால், அங்கு பொருளாதார வளர்ச்சியும், தொழில் வளர்ச்சியும், விவசாய வளர்ச்சியும் மேம்பட்டு இருக்கவேண்டும். பொருளாதார வசதி மேம்பட்டு இருக்கவேண்டுமென்றால், நிச்சயம் அங்கு வேலைவாய்ப்பு திண்டாட்டம் ஒழிக்கப்படவேண்டும். தொழிலும், விவசாயமும் இரண்டு தண்டவாளங்கள்போல் இருந்தால்தான் அங்கு வேலைவாய்ப்பு என்ற ரெயில் வேகமாக ஓடமுடியும்.

கடந்த மார்ச் மாதம் 31–ந் தேதியோடு தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலைக்காக பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 81 லட்சத்து 30 ஆயிரத்து 25 பேர் வேலைவாய்ப்புக்காக பதிவுசெய்து காத்திருக்கிறார்கள். பதிவு செய்யாதவர்களின் எண்ணிக்கையை சேர்த்தால் நிச்சயம் ஒரு கோடியை தாண்டும். இது நிச்சயம் தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல. வேலைவாய்ப்புகளை உருவாக்க ஏராளமான தொழிற்சாலைகள் தொடங்கப்படவேண்டும், விவசாயம் மேம்படவேண்டும், வேலைவாய்ப்பை எடுத்துக்கொண்டால், அரசாங்கம் ஆண்டுதோறும் ஒருசில ஆயிரம் பேருக்குத்தான் வேலைவாய்ப்பு தரமுடியும். தனியார் தொழில்கள், தனியார் முதலீடுகள் ஏராளமாக பெருகினால்தான், வேலைவாய்ப்புகள் பெரிய அளவில் வளர்வதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்படும்.

தமிழ்நாட்டின் நிலைமை அப்படியில்லை. இந்தியாவில் உள்ள பெரிய தொழில் நிறுவனங்களும் சரி, வெளிநாட்டு நிறுவனங்களும் சரி, முன்பெல்லாம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க போட்டிப்போட்டுக்கொண்டு வந்துகொண்டிருந்தார்கள். ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ‘ஹூண்டாய்’ கார் கம்பெனியின் துணை நிறுவனமான ‘கியா’ என்ற தென்கொரிய நாட்டு நிறுவனம் சென்னைக்கு மிக அருகில் ஆந்திராவில் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள பெனுகொண்டா என்ற ஊரில் ஒரு புதிய கார் தொழிற்சாலையை நிறுவப்போகிறது. ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டுடன் தொடங்கப்பட இருக்கும் இந்த நிறுவனம், இந்தியாவிலேயே மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டு திட்டமாக கருதப்படுகிறது. ஆண்டுக்கு 3 லட்சம் கார்கள் முதலில் உற்பத்தி செய்ய திட்டமிட்டிருக்கிறது. இந்த புதிய நிறுவனத்தின் மூலம் ஆயிரக்கணக்கான பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கருதப்படுகிறது. இந்த தொழிற்சாலையை அங்கு தொடங்குவதன்மூலம், மேலும் பல துணை நிறுவனங்களும், வர்த்தக நிறுவனங்களும் அதன் அருகே தொடங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே ‘இசுசூ’ மோட்டார் நிறுவனம் சென்னையை விட்டுவிட்டு, சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசிட்டி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தொழிற்சாலையை தொடங்கியுள்ளது. ‘ஹீரோ’ மோட்டார் நிறுவனம் தனது இருசக்கர வாகன தொழிற்சாலையை அங்கு தொடங்க இருக்கிறது. இப்படி பல தொழிற்சாலைகள் தமிழ்நாட்டை தவிர்த்துவிட்டு, ஆந்திராவுக்கு செல்கிறது என்றால் அதன்காரணம் என்ன? என்பதை தமிழக அரசு ஆராய்ந்து, நம்மிடமுள்ள குறைகளை உடனடியாக நிவர்த்திசெய்து, தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தொழில் வளர்ச்சியில்தான் பின்தங்கி இருக்கிறோம் என்றால், ‘இந்துதாஸ்தான் டைம்ஸ்’ பத்திரிகை குழுமத்தை சேர்ந்த ‘மிண்ட்’ பத்திரிகை நடத்திய ‘கிராமப்புற இடர்பாடு’ என்ற ஆய்வில், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் விவசாயம் மிகப்பெரிய இடர்பாடுகளை சந்தித்துக்கொண்டிருக்கிறது என்ற முடிவுக்கு வந்திருக்கிறது. விவசாய வளர்ச்சியில் பின்தங்கியிருக்கிறோம். கடுமையான வறட்சியும் மற்றவர்களைவிட அதிகம் தமிழ்நாட்டில் இருக்கிறது. இதுபோன்ற காரணங்களால் விவசாயம் பெரிய இடர்பாடுகளை சந்திக்க இருக்கிறது என்று அந்த ஆய்வில் கூறப்படுகிறது. ஆக, தமிழக அரசு உடனடியாக விவசாயத்தையும், தொழிலையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்வதையே தனது முதல் லட்சியமாகக்கொண்டு, அந்தபாதையில் வேகமாக செல்வதற்கு தடையாக இருக்கும் அத்தனை முட்டுக்கட்டைகளையும் தூக்கி எறிந்துவிட்டு, தன் லட்சிய பயணத்தை தொடங்கவேண்டும்.

Next Story