குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்!


குலசேகரன்பட்டினத்தில்  ராக்கெட்  ஏவுதளம்!
x
தினத்தந்தி 3 May 2017 9:30 PM GMT (Updated: 2017-05-03T20:02:00+05:30)

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதக்கடைசியிலும், அகில இந்திய வானொலியில் ‘‘மன் கி பாத்’’, அதாவது ‘மனதின் குரல்’ என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிவருகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதக்கடைசியிலும், அகில இந்திய வானொலியில் ‘‘மன் கி பாத்’’, அதாவது ‘மனதின் குரல்’ என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிவருகிறார். அந்தவகையில், கடந்த மாதம் 30–ந்தேதி அவர் ஆற்றிய ‘மனதின் குரல்’ உரையில், 5–ந்தேதி (நாளை) ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்திலிருந்து தெற்காசிய நாடுகளுக்கான செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது என்ற மகிழ்ச்சிகரமான தகவலை தெரிவித்தார். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவு ஆகிய 8 தெற்காசிய நாடுகள் தங்களுக்குள் ‘சார்க்’ என்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த தெற்காசிய நாடுகளுக்குள் ஒரு கூட்டுறவை வளர்க்கவேண்டும் என்பதே இந்த அமைப்பின் நோக்கமாகும்.

இப்போது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டதைத்தொடர்ந்து, 235 கோடி ரூபாய் செலவில் ஸ்ரீஹரிகோட்டாவில் தயாரிக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட இருக்கும் ஜி–சாட்–9 என்று அழைக்கப்படும் இந்த செயற்கைகோள் எல்லாவித வசதிகளையும் கொண்டதாகும். இந்த வசதியில் சேர்ந்துகொள்ளாத பாகிஸ்தான் தவிர, மற்ற நாடுகள் ஒவ்வொன்றுக்கும் இந்த செயற்கைகோளில் ஒரு டிரான்ஸ்பாண்டர் ஒதுக்கப்படும். இதன்மூலம் இந்த நாடுகளுக்கிடையே தொலைதொடர்பு, பேரிடர் நிவாரணம், தொலைத்தொடர்பு மூலம் மருத்துவ ஆலோசனை வசதி, கல்வி வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு சேவைகள் மட்டுமல்லாமல், ‘சார்க்’ நாடுகளுக்கு இடையே ‘ஹாட்லைன்’ தொலைபேசி வசதி ஏற்படுத்த முடியும். நிலநடுக்கம், புயல், வெள்ளம், சுனாமி போன்ற பல்வேறு வகையான இயற்கை பேரிடர்களின்போது இத்தகைய ‘ஹாட்லைன்’ மூலம் இந்த நாடுகள் தங்களுக்குள் தகவல்களை பரிமாற்றம் செய்து தேவையான உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும். நிச்சயமாக பிரதமர் கூறியபடி, இது ‘சார்க்’ நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் ஒப்பற்ற பரிசாகும்.

கடந்த 1971–ம் ஆண்டு முதலில் ரோகினி ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது முதல் பல்வேறு செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி ஸ்ரீஹரிகோட்டா உலகப்புகழ் பெற்றுவருகிறது. 4.1.2014 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் அப்போதைய இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் பேசும்போது, மற்றொரு ராக்கெட் ஏவுதளத்தை தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் அமைப்பது குறித்து பரிசீலனை நடந்துவருகிறது என்றார். டெல்லி மேல்–சபையில் கனிமொழி எம்.பி., குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வலியுறுத்தி பேசினார். ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும். முதலில் அது கிழக்கு கடற்கரையோரமாக இருக்கவேண்டும். அடுத்து பூமியின் நடுக்கோட்டுக்கு அருகே அமைந்திருக்கவேண்டும். அடுத்து ராட்சத கருவிகள், சாதனங்கள் செயற்கைகோள் ஏவுதளத்திற்கு கொண்டுவரவேண்டிய நிலை உள்ளதால், அதற்கு துறைமுகம், விமானதளம், ரெயில்வே வசதிகள் கண்டிப்பாக இருக்கவேண்டும். குலசேகரன்பட்டினத்தை பொறுத்தமட்டில், இந்த வசதிகள் அனைத்தும் இருக்கின்றன. கடலோரமாக அமைந்திருக்கும் குலசேகரன்பட்டினம் பூமியின் நடுக்கோட்டுக்கு அருகே அதாவது 8 டிகிரி வடஅட்சரேகையில் அமைந்துள்ளது. எல்லா வசதிகளையும் கொண்ட குலசேகரன்பட்டினத்தில் ஸ்ரீஹரிகோட்டாவைப்போல, மேலும் ராக்கெட் ஏவுதளம் ஒன்றை அமைத்தால், எல்லாவித செயற்கைகோள்களையும் விண்ணில் செலுத்தமுடியும். உலகிலுள்ள பல நாடுகள் தங்கள் தகவல்தொடர்பு செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த குலசேகரன்பட்டினத்துக்கு வருவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. எனவே, மத்திய அரசாங்கமும், இஸ்ரோ நிறுவனமும் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான முயற்சியை மேற்கொள்ளவேண்டும். இதற்கு தமிழக அரசும் முழுமையான அளவில் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்பதே தமிழக மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது. ஸ்ரீஹரிகோட்டாபோல, குலசேகரன்பட்டினமும் நாட்டுக்கு பெருமை சேர்க்கும்.

Next Story