தமிழ்மொழிக்கு பெருமை சேர்த்த பிரதமர்


தமிழ்மொழிக்கு பெருமை சேர்த்த பிரதமர்
x
தினத்தந்தி 4 May 2017 9:30 PM GMT (Updated: 2017-05-04T19:23:01+05:30)

பா.ஜ.க. ஆட்சியில் இந்தி திணிப்பு எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கிறது என்று பரவலாக ஒரு குறை இருக்கிறது.

பா.ஜ.க. ஆட்சியில் இந்தி திணிப்பு எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கிறது என்று பரவலாக ஒரு குறை இருக்கிறது. வேலூர் அருகே மைல்கற்களில் ஊர்களின் பெயர் இந்தியில் எழுதப்பட்டிருந்ததும், ஜனாதிபதி, பிரதமர், மத்திய–மந்திரி போன்றோர் இந்தி தெரிந்தவர்களாக இருந்தால், இந்தி மொழியில்தான் பேசவேண்டும், இந்தியில்தான் அறிக்கைதரவேண்டும் என்ற நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தநிலையிலும், மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகரும், பிரதமர் நரேந்திர மோடியும் பேசிய சில பேச்சுகள் பெரும் ஆறுதலை தரும் வகையில் அமைந்துள்ளது. சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களில் மும்மொழி திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறதா? என்று கேட்டதற்கு, ‘‘இந்திய அரசியல் சட்டஅட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளோடு, ஆங்கிலத்தையும் சேர்த்து 23 மொழிகளில், எந்த 3 மொழிகளையும் மாணவர் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். நாங்கள் எந்த மொழியையும் திணிக்கவோ, கட்டாயப்படுத்தவோ மாட்டோம். அதை மாணவர்களின் விருப்பத்திற்கு விட்டுவிட்டோம்’’ என்று கூறியிருக்கிறார்கள்.

‘இந்திய குடிமைப்பணிகள் தினம்’ என்று அழைக்கப்படும் சிவில் சர்வீசஸ் தினத்தில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடையே பிரதமர் மோடி பேசும்போது, ‘‘சர்தார் வல்லபாய்படேல் பிறந்தநாளை முன்னிட்டு நாம் ஒரு முக்கியமான வி‌ஷயத்தை கையில் எடுக்கவேண்டும். அதுதான் ‘ஒன்றுபட்ட பாரதம், ஒப்பற்ற பாரதம்’ என்ற அவரது தாரகமந்திரம். பன்முகத்தன்மை கொண்ட நாடாக நமது இந்தியா திகழ்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை உணர்வை பலப்படுத்தும் வி‌ஷயங்களில், நாம் நிரந்தரமான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். ஒரேதேசத்தில் நாம் வசித்தாலும், நாம் அந்நியனாக உணர்கிறோம். நமது பாரம்பரியம், கலாசாரம் பற்றி அறிந்துகொள்ளாமல் இருக்கிறோம். எனவே, ஒரு மாநிலம் மற்ற மாநிலத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டு ஜோடி சேரவேண்டும். ‘தமிழ் வளமையான மொழி. தொன்மை வாய்ந்தமொழி’. நான் மனதார சொல்கிறேன். இந்தியாவின் வளமையை பறைசாற்றுவதற்கு தமிழ் மொழியை குறிப்பிடலாம். ஆனால், தமிழ்மொழியைப்பற்றி அறிந்துகொள்ள வாய்ப்பே இல்லாமல் இருக்கிறது. ஏன் நமது மாநிலங்களில் ஏதாவது ஒன்று, தமிழக அரசுடன் ஓராண்டிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடக்கூடாது?, இங்குள்ள மாணவர்கள் தமிழ்பாடல்களை கற்றுக்கொள்ளலாமே?, தமிழ் எழுத்துக்களை அறிந்துகொள்ளும் வகையில் கற்றுக்கொள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வழிசெய்யலாமே?, அவ்வப்போது திரைப்பட விழாக்களை நடத்தலாம். தமிழக மாணவர்களுடன் விளையாட்டுப்போட்டிகளை நடத்தலாம். தமிழ்நாட்டிற்கு சுற்றுலா செல்லலாம். இந்தியாவில் ஏராளமான மாநிலங்கள் உள்ளன. ஒன்றுக்கொன்று வித்தியாசமான மாநிலங்களாக அவை திகழ்கின்றன. எந்த மாநிலம் வேண்டுமானாலும் இன்னொரு மாநிலத்துடன் கூட்டுசேரலாம். ஒருமுறை நாமும் இந்த மொழியை பேசும்போதும், நாம் பேசக்கேட்கும்போதும், அதனை உணரும்போதும், நமக்கே வியப்பாக இருக்கும். அவர்கள் சொல்லும் கருத்தைத்தான் நாமும் சொல்கிறோம். ஆனால், அவர்கள் நமது மொழியைப் பேசுகிறார்கள் என்று வியப்படைவோம். வேற்றுமைகள் நிறைந்த நமது தேசத்திற்கு இது மிகவும் அவசியமாகும்’’ என்று பேசியிருக்கிறார்.

பிரதமரின் இந்த கருத்து நிச்சயமாக வரவேற்புக்குரியது. அவர் கூறிய கருத்துப்படி, வடக்கே இந்தி பேசும் மாநிலங்களில், ஒருசில மாநிலங்கள் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டால் அங்குள்ள மாணவர்கள் தமிழ் படிக்கவும், தமிழ்நாட்டைப்பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் நல்ல வாய்ப்பு ஏற்படும். இதற்கு பிரதமர் உடனடியாக ஏற்பாடு செய்யவேண்டும். கவிஞர் வைரமுத்து கூறியதுபோல, தாய்மொழியை கட்டாயப்படுத்திவிட்டு, எந்த பிறமொழியையும் கற்றுக்கொள்ளும் சுதந்திரத்தையும் கொடுத்துவிடலாம். இந்தியை கட்டாயமாக படிக்கவேண்டும் என்று சொல்வதைவிட, எல்லா மொழிகளையும் இந்தியா முழுவதும் எல்லா மாணவர்களும் படிக்கமுடியும் என்ற நிலையை ஏற்படுத்தினால் நரேந்திரமோடியை வரலாறு என்றும் போற்றும்.

Next Story