உயிர்த்தியாகம் செய்தவர்கள் குடும்பங்களுக்கு உதவி


உயிர்த்தியாகம்  செய்தவர்கள் குடும்பங்களுக்கு  உதவி
x
தினத்தந்தி 7 May 2017 9:30 PM GMT (Updated: 2017-05-07T17:38:27+05:30)

இந்தியாவில் பல இடங்களில் குறிப்பாக, சத்தீஷ்கார், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் இப்போது அதிகமாக ஊடுருவிவிட்டது.

ந்தியாவில் பல இடங்களில் குறிப்பாக, சத்தீஷ்கார், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் இப்போது அதிகமாக ஊடுருவிவிட்டது. எல்லைப்புறங்களில் ராணுவவீரர்கள், எதிரிகள் ஊடுருவலில் இருந்து நாட்டைக்காப்பாற்ற காவல் காத்துவருகிறார்கள் என்றால், நாட்டுக்குள்ளையே போட்டி அரசாங்கம் நடத்த முயன்று கொண்டிருக்கும் தீவிரவாத சக்திகளின் பிடியிலிருந்து நாட்டை காப்பாற்ற, மத்திய ரிசர்வ் போலீஸ்படை, எல்லைபாதுகாப்பு படை, இந்திய திபெத்திய எல்லைபாதுகாப்பு படை, ‘எஸ்.எஸ்.பி.’ என்று அழைக்கப்படும் நேபாளம், பூடான் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் நாள்தோறும் தங்கள்உயிரை பணயம் வைத்து மாவோயிஸ்டுகளின் தாக்குதலை முறியடிக்க பாடுபட்டுவருகிறார்கள். தற்போது இத்தகைய பாதுகாப்பு படையை சேர்ந்த 1 லட்சத்து 24 ஆயிரத்து 308 வீரர்கள், இரவு–பகல் பாராமல் இந்த மாவோயிஸ்டுகள் குவிந்துள்ள இடங்களில் ரோந்துப்பணியாற்றி வருகிறார்கள்.

கடந்த மாதம் 24–ந்தேதி சுக்மா மாவட்டத்திலுள்ள, புர்காபல் என்ற கிராமத்தின் அருகே சாலை அமைத்துக்கொண்டிருக்கும் பணிகள் பாதுகாப்புக்காக சென்றிருந்த மத்திய ரிசர்வ் பாதுகாப்புபடையின் வீரர்கள் மீது திடீரென ஏராளமான மாவோயிஸ்டுகள் குண்டு மழை பொழிந்தனர். இதில் 25 வீரர்கள் உயிரிழந்தனர். அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த, மதுரை மாவட்டம் அழகுபாண்டி, சேலம் மாவட்டம் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த திருமுருகன், திருவாரூர் நீடாமங்கலம், காமராஜர் காலனியைச் சேர்ந்த செந்தில்குமார், வலங்கைமான் அருகேயுள்ள அவிச்சாடி கிராமத்தைச் சேர்ந்த பத்மநாபன் ஆகியோர் வீரமரணம் அடைந்துள்ளனர். கடந்த ஒருஆண்டில் மட்டும் மாவோயிஸ்டுகளின் தாக்குதலால் 298 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வீரர்களின் தியாகம் எல்லாம் என்றும் போற்றுதலுக்குரியது. அன்று ஒருநாள்மட்டும் அஞ்சலி செலுத்திவிட்டு மறந்துவிடுவதல்ல. அவர்கள் விட்டுச்சென்ற அவர்களுடைய குடும்பத்தினரை பாதுகாக்கும் பொறுப்பு இந்த சமுதாயத்திற்கு இருக்கிறது. இதை உணர்ந்த காரணத்தால்தான், தற்போது ‘ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம்’ ஒரு சிறந்தமுடிவை எடுத்துள்ளது.

முதல்கட்டமாக கடந்த 4 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்து சப்–கலெக்டர், கூடுதல் கலெக்டர், கலெக்டர் போன்ற பணியில் உள்ளவர்கள், அவர்கள் பணியாற்றும் மாவட்டங்களிலுள்ள இத்தகைய உயிர்த்தியாகம் செய்த குடும்பங்கள் ஒவ்வொன்றையும் தத்தெடுத்துக்கொள்ளவேண்டும். அவர்களுக்கு தங்கள் கையிலிருந்து பணஉதவி செய்யமுடியாவிட்டாலும், அரசாங்கத்திலிருந்து அவர்களுக்கு கிடைக்கவேண்டிய நிதிஉதவிகள், பென்சன், பணிக்கொடை, வேலைவாய்ப்பு, பெட்ரோல் பங்க் ஒதுக்கீடு, போன்றவற்றையும், அவர்கள் குழந்தைகள் கல்விகற்பதற்கான ஏற்பாடுகளையும், அரசாங்கத்தின் ‘திறன் இந்தியா’, ‘டிஜிட்டல் இந்தியா’ போன்ற திட்டங்களின் அடிப்படையில், அவர்கள் வீட்டுப்பிள்ளைகள் பல்வேறு திறன்களை பெறுவதற்கும், புதிய தொழில்களை தொடங்குவதற்கும் அரசாங்கத்தின் சார்பில் கிடைக்கவேண்டிய உதவிகளை பெறுவதற்கும் முன்னின்று உதவிசெய்யவேண்டும். நமது குடும்பத்திலுள்ள உறுப்பினர்கள் உயிர்த்தியாகம் செய்துவிட்டாலும், நம்மை காப்பாற்ற ஒரு நல்ல உள்ளம் இருக்கிறது என்ற தெம்பு இதன்மூலம் ஏற்படும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம் முடிவெடுத்துள்ளது. நிச்சயமாக நாடே ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கத்திற்கு நன்றிக்கடனாக வணக்கம் செலுத்துகிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மட்டுமல்லாமல், ஐ.பி.எஸ். அதிகாரிகள், மத்திய–மாநில அரசில் உள்ள அனைத்து உயர்அதிகாரிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், இதுபோன்று நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த குடும்பங்களை தத்தெடுத்து, அவர்கள் வாழ வழிகாட்டினால், உயிரை துச்சமாகமதித்து போராடிக்கொண்டிருக்கும் அந்த வீரர்களும் வாழ்வா?, சாவா? என்ற நிலையில், பணியாற்றும் இடத்தில் இந்த சமூகவிரோதிகளை நாம் நசுக்கியே தீரவேண்டும். நமக்கு ஒன்று என்றாலும், நம் குடும்பத்தைக்காப்பாற்ற இந்த நாடு இருக்கிறது என்ற மனநிறைவோடும், துணிச்சலோடும் பணியாற்றுவார்கள்.

Next Story