துணைவேந்தர்கள் இல்லாத பல்கலைக்கழகங்கள்


துணைவேந்தர்கள்  இல்லாத  பல்கலைக்கழகங்கள்
x
தினத்தந்தி 10 May 2017 9:30 PM GMT (Updated: 10 May 2017 5:27 PM GMT)

மக்களுக்கு என்ன செல்வம் இருந்தாலும், அதுவெல்லாம் கல்விச்செல்வத்திற்கு நிச்சயமாக ஈடாகாது. கல்வி என்பது அறிவாற்றலை பெருக்குவது மட்டுமல்லாமல், ஒருவருடைய வாழ்வின் எதிர்காலத்திற்கும் அடித்தளம் அமைக்கிறது.

க்களுக்கு என்ன செல்வம் இருந்தாலும், அதுவெல்லாம் கல்விச்செல்வத்திற்கு நிச்சயமாக ஈடாகாது. கல்வி என்பது அறிவாற்றலை பெருக்குவது மட்டுமல்லாமல், ஒருவருடைய வாழ்வின் எதிர்காலத்திற்கும் அடித்தளம் அமைக்கிறது. அதனால்தான், மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஒரு கூட்டத்தில் பேசும்போது, ‘‘வறுமையின் தீய சுழற்சியைத் தகர்ப்பதில் கல்விக்கு முதன்மையான பங்குஉண்டு. கல்வி, குறிப்பாக உயர்கல்வி, நமது மக்களிடம் ஆளுமைத்திறனை வளர்க்கிறது. மக்களின் வாழ்க்கையை தக்கவைத்துக்கொள்வதற்கு மட்டுமல்லாமல், மேம்பட்ட தரமான வாழ்க்கைக்கும் உயர்கல்வி அடித்தளமாகிறது’’ என்று கூறினார். ஒருகாலத்தில் தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் படித்தவர்களுக்கு பல பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் தானாக தேடிவந்தன. ஹார்வர்டு பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் போன்ற உலகப் புகழ்வாய்ந்த பல்கலைக்கழகங்களில் எல்லாம், மெட்ராஸ் யுனிவர்சிட்டியிலிருந்து படித்த மாணவர்கள் என்றால் மேல்படிப்பு படிக்க கதவுகள் தானாக திறந்தன.

உலகம் முழுவதும் புகழ்பெற்ற பல நிறுவனங்களில் தமிழ்நாட்டிலுள்ள கல்லூரிகளில், தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள் என்றால் விண்ணப்பித்தவுடன் வேலை கிடைத்தது. அதனால்தான், தமிழகத்தைச்சேர்ந்த பலர் இன்று உலகம் முழுவதும் பல நிறுவனங்களில் உயர்பதவியில் இருக்கிறார்கள். ஆனால், காலப்போக்கில் கல்வித்தரம் குறைந்தது. ‘நீட்’ தேர்வைக்கூட எங்கள் மாணவர்களால் எழுதமுடியாது என்று கூறவேண்டிய துர்பாக்கியத்தில் இருக்கிறோம். எந்தவொரு அமைப்பும் ‘தலை சரியாக இருந்தால்தான் கால் சரியாக இருக்கும்’ என்பார்கள். அதுபோல, பல்கலைக்கழகங்களில் சேவைமனப்பான்மை உடைய கல்வியாளர்கள் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டு, அவர்கள் கல்வித்தரத்தை உயர்த்துவது ஒன்றையே தங்கள் நோக்கமாக கொள்ளவேண்டும் என்பதுதான், கல்வியில் ஆர்வம்கொண்ட எல்லோருடைய அக்கறையாக இருக்கிறது. தமிழ்நாட்டில் 20 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இதில், முக்கியமான 4 பல்கலைக்கழகங்களில் அதாவது, அண்ணாபல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் ஆகிய 4 பல்கலைக்கழகங்களிலும் பல மாதங்களாக துணைவேந்தர்கள் இல்லாமல், நிர்வாகமே முடங்கிப்போய் இருப்பது மிகவும் வேதனைக்குரியதாகும். அண்ணா பல்கலைக்கழகம் என்பது தமிழ்நாட்டில் உள்ள 527 பொறியியல் கல்லூரிகளையும் உள்ளடக்கியதாகும். இந்த கல்லூரிகளில் அனைத்திலும் படித்து முடித்தவர்களுக்கு, அண்ணா பல்கலைக்கழகம்தான் பட்டம் வழங்கவேண்டும். அதன் துணைவேந்தர்தான் அந்தபட்டங்களில் கையெழுத்திடவேண்டும். மாணவர்கள் படித்துமுடித்ததின் அடையாளமே அவர்கள் பெறும் பட்டச்சான்றிதழ்தான்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் வருகிற 19–ந்தேதி காலை 11 மணிக்கு பட்டமளிப்பு விழா நடக்கிறது என்று கூறுகிறார்கள். மரபுப்படி மாணவர்களின் பட்டச்சான்றிதழில் துணைவேந்தர்தான் கையெழுத்திடவேண்டும். ஆனால், துணைவேந்தர் இல்லாமல், உயர்கல்வித்துறை செயலாளரோ?, அல்லது மூத்த பேராசிரியர் ஒருவரோ கையெழுத்திட்டால், அது மாற்றுக்குறைந்த தங்கம் போலத்தான் மதிக்கப்படும். இந்தியாவில் ஒருவேளை அதை அங்கீகரித்தாலும், வெளிநாடுகளில் உயர்படிப்புக்கு நிச்சயமாக அதை அங்கீகரிக்கமாட்டார்கள். பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளுக்கும் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ‘இப்போது இந்த பட்டச்சான்றிதழை வைத்துக்கொள்ளுங்கள், துணைவேந்தர் நியமித்தபிறகு அவருடைய கையெழுத்துடன் கூடிய பட்டச்சான்றிதழை பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று சொன்னால், அதுவும் மாணவர்களுக்கு அவர்களுடைய உயர்படிப்பையும், வேலைவாய்ப்புகளையும் தள்ளிவைப்பது போலாகும். எனவே, அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்புக்கு முன்னதாகவும், மற்ற பல்கலைக்கழகங்களில் கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்னதாக இந்த மாதத்திலேயே துணைவேந்தர்களை நியமிப்பதை வேந்தர் என்ற முறையில் கவர்னர் உறுதிசெய்யவேண்டும். தமிழக அரசின் உயர்கல்வித்துறை இதற்கான ஏற்பாடுகளில் உடனடியாக இறங்கவேண்டும். இனிமேல் பல்கலைக்கழகங்களில் நியமிக்கப்படும் துணைவேந்தர்கள் எல்லாம் சிறந்த கல்வியாளர்களாகவும், மாணவர்களின் உயர்வு ஒன்றையே தங்கள் வாழ்வின் நோக்கமாகவும் கொண்டவர்களாக இருக்கவேண்டும்.

Next Story