'நீட்' தேர்வில் மொழிக்கு ஒரு வினாத்தாளா?


நீட் தேர்வில் மொழிக்கு ஒரு  வினாத்தாளா?
x
தினத்தந்தி 11 May 2017 11:30 PM GMT (Updated: 2017-05-11T18:25:24+05:30)

மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கும், பல் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கும் 'தேசிய தகுதி காண் நுழைவுத்தேர்வு' என்று கூறப்படும்

'நீட்' தேர்வு மூலம்தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்ற அறிவிப்பு தமிழ்நாட்டில் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த ஆண்டுபோல, இந்த ஆண்டும் 'நீட்' தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு பெற்றுவிடலாம் என்று தமிழக அரசு எவ்வளவோ முயற்சிகள் செய்தும் பலன் அளிக்கவில்லை. கடந்த 7&ந்தேதி 'நீட்' தேர்வும் நடந்து முடிந்துவிட்டது.

'நீட்' தேர்வின் முக்கியநோக்கமே, அகில இந்திய அளவில் ஒரேதேர்வை நடத்தி, ஒரே சீரானவகையில் மாணவர்சேர்க்கை நடைபெறவேண்டும் என்பதுதான். அதாவது, இதன் முக்கியநோக்கம், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரேவிதமான தேர்வை நடத்தி, மாணவர்களின் தேர்வு பட்டியலை அகில இந்திய அளவில் வெளியிட்டு, அதன் அடிப்படையில் அந்தந்த மாநிலங்களிலும், அகில இந்திய கோட்டா அடிப்படையில் மற்ற மாநிலங்களிலும் மாணவர்கள் இத்தகைய படிப்புகளுக்கான இடம்பெறவேண்டும் என்பதுதான். ஆனால், இந்த ஆண்டு நடந்த 'நீட்' தேர்வு மாணவர்களுக்கு இடையே பெரிய குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது.

தமிழ்நாட்டில் தேர்வு எழுதும் முன்பு தேவையற்ற கெடுபிடிகள் நடந்தன. கம்மலை கழட்டு, மூக்குத்தியை கழட்டு, தலையை விரித்துபோடு, மாணவிகளின் குர்தா என்றாலும் சரி, மாணவர்களின் சட்டை என்றாலும் சரி, முழங்கைக்கு மேல் இருக்கவேண்டும் என்று கூறி, கத்தரிக்கோலால் வெட்டியதும், கருப்புநிற ஆடைகளை அணியக்கூடாது என்று கெடுபிடி செய்ததும், எல்லாவற்றுக்கும் மேலாக கேரளாவில் நடந்த கொடுமையான செயல் ஒரு மாணவியிடம் மேல்உள்ளாடையை கழற்றிவிட்டு வரச்சொன்னதும் 'நீட்' தேர்வின்போது அரங்கேறியது. தேர்வு எழுத உள்ளே நுழைந்தால் பெரிய பாகுபாடுகள் நடந்திருக்கிறது. இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மராத்தி, வங்காளம், அசாம், குஜராத்தி, கன்னடம், ஒரியா ஆகிய 10 மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டது. எல்லா மையங்களிலுமே அது எந்த வினாத்தாள் என்றாலும் சரி, ஒரேவகையான வினாக்கள் இருக்கும் என்று எதிர்பார்த்து சென்ற மாணவர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

குஜராத்தி மொழியில் கேட்கப்பட்ட வினாத்தாள்களில் கேள்விகள் எளிமையாக இருந்ததாகவும், வங்காள மொழியில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமானதாக இருந்ததாகவும் குறை கூறப்பட்டது. தமிழ்நாட்டில் தமிழில் இந்த தேர்வை எழுதிய மாணவர்களின் வினாத்தாள்களில் கேட்கப்பட்ட கேள்விகள் பரவாயில்லை என்றாலும், ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட வினாத்தாள்களைவிட கடினமாகத்தான் இருந்தது என்றும் கூறுகிறார்கள். இந்த வினாத்தாள்களில் கேட்கப்பட்ட 180 கேள்விகளும், எல்லா மொழிகளிலும் ஒரேவிதமான கேள்விகளாகத்தான் இருக்கவேண்டும் என்பதுதான் பொதுவான கோரிக்கையாகும். இவ்வாறு ஒவ்வொரு மொழி வினாத்தாளும் வெவ்வேறுவிதமாக கேட்கப்பட்டால், மாணவர்களின் தகுதியை எப்படி ஒரேசீராக மதிப்பிடமுடியும்?.

இதுமட்டுமல்லாமல், 5 கேள்விகள் தவறாக இருந்தன. சில இடங்களில் கேள்வித்தாள்கள் 'லீக்' ஆகிவிட்டன என்றும் கூறப்படுகின்றன. இந்த ஆண்டு நடந்த தேர்வில் இனி எதுவும் செய்யமுடியாது என்றாலும், இந்த குறைகளெல்லாம் இல்லாத அளவில் அடுத்த ஆண்டு வினாத்தாள்கள் அமையவேண்டும். இந்த ஆண்டு வெவ்வேறு மொழிகளில் கடினமான கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததால், தவறாக கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததால், அதனால் பாதிப்படைந்த மாணவர்களுக்கு என்ன நிவாரணம் அளிக்கலாம்? என்பதை பரிசீலிக்கவேண்டும். ஒரே நாடு, ஒரே படிப்பு, ஒரே தேர்வு என்று கூறிக்கொண்டு, வினாக்கள் மட்டும் மொழிக்கு மொழி வேறுபாடு என்றால், அது எப்படி சரியாகும்?.

Next Story