செல்போன்களில் பிளஸ்–2 மார்க்குகள்


செல்போன்களில் பிளஸ்–2 மார்க்குகள்
x
தினத்தந்தி 12 May 2017 9:30 PM GMT (Updated: 12 May 2017 6:45 PM GMT)

பழைய கால சீன வழக்குமொழி ஒன்று கல்வியின் சிறப்பை மேன்மையாக எடுத்துக்காட்டியுள்ளது. ‘ஒரு ஆண்டைப்பற்றி மட்டும் சிந்தித்தால் நெல் பயிரிடு, 10 ஆண்டுகளைப்பற்றி சிந்தித்தால், மரக்கன்றுகளை நடு, நூறு ஆண்டுகளைப்பற்றி சிந்தித்தால் மக்களுக்கு கல்வி புகட்டு என்பதுதான்’ அந்த வழக்குமொழி.

ழைய கால சீன வழக்குமொழி ஒன்று கல்வியின் சிறப்பை மேன்மையாக எடுத்துக்காட்டியுள்ளது. ‘ஒரு ஆண்டைப்பற்றி மட்டும் சிந்தித்தால் நெல் பயிரிடு, 10 ஆண்டுகளைப்பற்றி சிந்தித்தால், மரக்கன்றுகளை நடு, நூறு ஆண்டுகளைப்பற்றி சிந்தித்தால் மக்களுக்கு கல்வி புகட்டு என்பதுதான்’ அந்த வழக்குமொழி. அந்த வகையில்தான் மத்திய அரசாங்கம் என்றாலும்சரி, தமிழக அரசும் சரி ஆண்டு தோறும் கல்விக்காக ஒதுக்கும் தொகையை அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. பிளஸ்–2 தேர்வைத்தான் எதிர்கால வாழ்வின் வாசல் என்பார்கள். இந்த தேர்வுமுடிவுதான் அடுத்து படிக்கப்போகும் கல்வியையும், வேலையையும் நிர்ணயிக்கும். இந்த ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள 6 ஆயிரத்து 732 மேல்நிலைப் பள்ளிக்கூடங்களைச் சேர்ந்த 8 லட்சத்து 93 ஆயிரத்து 262 மாணவர்கள் பிளஸ்–2 தேர்வு எழுதினர். கடந்த ஆண்டை விட அதிகம் பேர் இந்த ஆண்டு பிளஸ்–2 தேர்வு எழுதினார்கள் என்பது நிச்சயமாக வரவேற்புக்குரியதாகும். ஏனெனில், கடந்த ஆண்டு 8 லட்சத்து 33 ஆயிரத்து 682 மாணவர்கள்தான் தேர்வு எழுதினார்கள். இந்த ஆண்டு 6.7 சதவீத மாணவர்கள் கூடுதலாக எழுதியிருக்கிறார்கள்.

பெண் கல்வியில் தமிழ்நாடு முன்னேறி கொண்டிருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு மாணவர்களைவிட மாணவிகள் அதிக எண்ணிக்கையில் இந்த தேர்வை எழுதியுள்ளனர். 4 லட்சத்து 15 ஆயிரத்து 331 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளநிலையில், மாணவிகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 77 ஆயிரத்து 930 ஆகும். 3–ம் பாலினத்தினர் ஒருவரும் தேர்வு எழுதி தேர்வாகியிருக்கிறார். தேர்ச்சி விகிதத்தை பார்த்தாலும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கிறது. மொத்தம் சராசரியாக 92.1 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளநிலையில் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 94.5 சதவீதமாகும். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 89.3 சதவீதமாகும். ஆக, மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை இன்னும் அதிகரிப்பதிலும் மாணவிகளுக்கு இன்னும் ஊக்கமளிப்பதிலும் கல்வித்துறையும், பள்ளிக்கூடங்களும் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டும். இந்த ஆண்டு பிளஸ்–2 தேர்வு முடிவுகளில் பல நல்ல சீர்திருத்தங்களை புதிதாக கல்வி அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர் செங்கோட்டையன் கொண்டு வந்துள்ளார்.

தற்போதுவரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பிளஸ்–2 தேர்வு மாணவர்களுக்கும் சரி, கல்லூரி படிப்புகளிலும் சரி, பல்கலைக்கழக ரேங்க் பட்டியல் அதாவது மாணவர்களின் தர வரிசை பட்டியல் கிடையாது. ஏனெனில், ரேங்க் பட்டியல் வெளிவரும்போது ஒரு மார்க் வித்தியாசத்தில் கூட உயர்ந்த ரேங்க்குகளை பெற முடியாத மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் அவர்களுக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்களும் மன அழுத்தத்தால் சோர்ந்து விடுகிறார்கள். அந்த குறையை போக்கும்வகையில் தமிழக கல்வித்திட்டத்தின் கீழ் பிளஸ்–2 தேர்விலும் இந்த ஆண்டு முதல் ரேங்க் பட்டியல் வெளியிடப்படாது என்று கல்வி அமைச்சர் அறிவித்து அதுவும் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால், அதிக மதிப்பெண்கள் எடுக்கும் பல மாணவர்கள் ரேங்க் பட்டியல் வெளியிடாததால், தங்களுக்கு உற்சாகம், ஊக்கம் அளிப்பது தடைபட்டுவிட்டது என்று வருத்தப்படுகிறார்கள். அடுத்து மிக முக்கியமாக கொண்டு வரப்பட்டுள்ள சீர்திருத்தம் தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு ஒரு சில நிமிடங்களிலேயே மாணவர்களுடைய அல்லது அவர்கள் பெற்றோர்களுடைய செல்போன்களில் அவர்கள் எடுத்த மதிப்பெண்கள் அனைத்தும் பாடவாரியாக தெரிவிக்கப்பட்டு விட்டது. இதன்மூலம் மாணவர்களின் அலைச்சலும், பரபரப்பும் பெரிதும் குறைந்துவிட்டது. பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவிப்பு இன்னமும் வெளியிடப்படவில்லை என்பது பெரிய குறையாக இருக்கிறது. தமிழ்வழி கல்விபயிலும் மாணவர்களுக்கு அரசு கல்வி உதவித்தொகை வழங்கும் என்பதும், கல்விச்சான்றிதழ்களில் ஆங்கிலத்தோடு இந்த ஆண்டு முதல் மாணவர்களின் பெயர்கள் தமிழிலும் இருக்கும் என்பதும் நிச்சயமாக வரவேற்புக்குரியதும், பாராட்டுதலுக்குரியதுமாகும்.

Next Story