வேலியே பயிரை மேய்வதா?


வேலியே  பயிரை  மேய்வதா?
x
தினத்தந்தி 17 May 2017 9:30 PM GMT (Updated: 2017-05-17T19:29:02+05:30)

ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு இணையான பெயரையும், புகழையும் பெற்று விளங்கியது தமிழ்நாடு போலீஸ்.

ரு காலத்தில் ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு இணையான பெயரையும், புகழையும் பெற்று விளங்கியது தமிழ்நாடு போலீஸ். அதனால்தான் தலைநகராம் டெல்லி திகார் ஜெயிலுக்கு பாதுகாப்பு அளிப்பது உள்பட பல முக்கியமான பணிகளுக்கு தமிழ்நாடு சிறப்பு காவல்படையை பயன்படுத்துகிறார்கள். தமிழ்நாடு போலீசார் கண்டுபிடிக்க முடியாத குற்றங்களே இல்லையென்று பெரிய பெருமை இருந்தது. அந்த புகழுக்கெல்லாம், பெருமைக்கெல்லாம் களங்கம் கற்பிப்பதுபோல ஒரு சம்பவம் சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. வேலியே பயிரை மேய்ந்த சம்பவம் அது. சமீப காலங்களாகவே தமிழ்நாட்டில் பல இடங்களில், கஞ்சா விற்பனை அமோகமாக இருக்கிறது. போதை ஊசி மருந்துப்போடும் சம்பவங்கள் எல்லா இடங்களிலும் நடக்கிறது. பிரவுன்சுகர், ஹெராயின் போன்ற எல்லா போதை வஸ்துகளும் தாராளமாக கிடைக்கிறது என்ற பெரிய குறை இருக்கிறது.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு சென்னை நகர போலீஸ் கமி‌ஷனராக பதவியேற்ற ஏ.கே.விஸ்வநாதன், சென்னையில் கஞ்சா விற்பனையை முழுமையாக தடைசெய்யவேண்டும், அதில் யார் ஈடுபட்டாலும் தைரியமாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, போலீசாரும் வீறுகொண்டு எழுந்தனர். சென்னை தலைமைச் செயலகத்திற்கு எதிரேயுள்ள அன்னை சத்யா நகரில் கஞ்சா விற்பனை செய்ததாக 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்போட்டு அப்படியே முடித்துவிடுவதைவிட, அவர்களுக்கு எங்கிருந்து கஞ்சா கிடைக்கிறது, கஞ்சா விற்பனை கும்பலின் தலைவன் யார்? என்று போலீசார் துருவித்துருவி விசாரணை செய்தனர். விசாரணையில், அந்தப்பெண்கள் கையை காட்டியது, ஒரு சிறப்பு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் என்று தெரிந்ததும் காவல்துறையினருக்கு ஒருபக்கம் அவமானமும், மற்றொருபக்கம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அதுவும் அந்த சப்–இன்ஸ்பெக்டர் சென்னை கோட்டையில், ரோந்து போலீஸ் படையில் இருக்கிறார். அவரை, போலீசார் கைதுசெய்து அவர் வீட்டை சோதனை போட்டபோது, 2 பைகளில் 2½ கிலோ கஞ்சா பதுக்கிவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அங்கே, இங்கே அலைந்து பிடித்து கைப்பற்றும் போதை வஸ்துகளை, இதுபோன்ற கருப்பு ஆடுகள் நைசாக பதுக்கிவைத்து கஞ்சா விற்பனை செய்துவருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயர்போலீஸ் அதிகாரிகள் உடனடியாக தமிழ்நாடு முழுவதும் கஞ்சா நடமாட்டத்தை ஒழிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும் முயற்சியில், முதலில் இதுபோல கருப்பு ஆடுகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களிடமுள்ள கஞ்சாவை கைப்பற்றவேண்டும்.

சமீபத்தில், இலங்கைக்கு ஹெராயின் கடத்த முயன்ற காரைக்காலை சேர்ந்த 6 பேரை நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் தடுத்துநிறுத்தி சோதனையிட்டனர். அதில், 13½ கிலோ ஹெராயின் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சர்வதேச மதிப்பில் இது ரூ.26 கோடி என்று கருதப்படுகிறது. கடந்த 15 மாதங்களில் இலங்கை கடற்படை, கேரளாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 2,140 கிலோ கஞ்சாவையும், 130 கிலோ ஹெராயினையும் நடுக்கடலில் படகுகளிலிருந்து கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் இருந்து கடத்திக் கொண்டுவரப்படும் ஹெராயினுக்கும், ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்படும் கஞ்சாவுக்கும் சென்னைதான் நுழைவு வாயிலாகவும், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட கடற்கரைகள்தான் சர்வதேச வழியாகவும் இருக்கிறது. உடனடியாக தமிழக எல்லைகளை போதைப்பொருட்கள் கடத்தலுக்கு இடம் கொடுக்காத வகையில், போலீசார் குறிப்பாக ரெயில்வே போலீசார் தடுக்கவேண்டும். போலீஸ் நிலையங்களில் கஞ்சா மாமூல் என்பது அடியோடு ஒழிக்கப்பட வேண்டும். அதுபோல, தமிழக கடற்கரை பகுதிகளில் கடலோர காவல்படை, இந்திய கடற்படை, கடலோரங்களிலுள்ள போலீஸ் நிலைய போலீசார் அனைவரும் தீவிரமாக பணியாற்றி இந்த போதைபொருள் கடத்தலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தால் சமுதாயம் சீராகும்.

Next Story