11–வது வகுப்பில் பொதுத்தேர்வு


11–வது வகுப்பில் பொதுத்தேர்வு
x
தினத்தந்தி 18 May 2017 10:00 PM GMT (Updated: 2017-05-18T20:53:04+05:30)

‘நீட்’ தேர்வு வினாக்களில் 51 சதவீதம் 11–வது வகுப்பு பாடங்களில் இருந்துதான் கேட்கப்படுகிறது.

மிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 10–ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 12 ஆயிரத்து 187 பள்ளிக்கூடங்களில் படித்த மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் உள்பட 10 லட்சத்து 38 ஆயிரத்து 22 மாணவ–மாணவிகளின் தேர்வுமுடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. இதில், குறிப்பிட்ட ஒருசிலரைத்தவிர, அனைவருமே 11–வது வகுப்பில் போய்ச்சேர்வார்கள். இதுவரையில் 10–வது வகுப்பு பொதுத்தேர்வு எழுதியபிறகு, 12–வது வகுப்பில்தான் பொதுத்தேர்வு எழுதும் நிலை இருந்தது. இதனால் நிறைய பள்ளிக்கூடங்களில் 11–வது வகுப்பு பாடங்களையே கற்றுக்கொடுக்காமல், 12–வது வகுப்பு பாடங்களை மட்டும் கற்றுக்கொடுத்து மாணவர்களை மார்க் எடுக்கும் எந்திரங்களாக மாற்றிவிடுகிறார்கள் என்ற புகார் கூறப்படுகிறது.

மருத்துவ படிப்புகளுக்குபோல, அடுத்த ஆண்டுமுதல் பொறியியல் கல்லூரிகளுக்கும் ‘நீட்’ தேர்வு வந்துவிடும். ‘நீட்’ தேர்வு வினாக்களில் 51 சதவீதம் 11–வது வகுப்பு பாடங்களில் இருந்துதான் கேட்கப்படுகிறது. எனவே, தமிழக கல்வித்திட்டத்தின்கீழ் படித்தவர்களால் ‘நீட்’ தேர்வை எதிர்கொள்ள முடியவில்லை. கடந்த 2016–ம் ஆண்டு ‘நீட்’ தேர்வில், தமிழக கல்வித்திட்டத்தின்கீழ் படித்து தேர்வு எழுதிய மாணவர்களில் 16.6 சதவீதம்பேர்தான் தேர்வு பெற்றிருக்கிறார்கள். சி.பி.எஸ்.இ. படித்து தேர்வு எழுதியவர்கள் 69 சதவீதம்பேர் தேர்வு பெற்றிருக்கிறார்கள். எனவே, 11–வது வகுப்பில் பொதுத்தேர்வு நடத்தவேண்டும் என்ற கோரிக்கையும், 11–வது, 12–வது வகுப்பு பாடத்திட்டங்களை சி.பி.எஸ்.இ.க்கு இணையாக தரம்வாய்ந்த பாடத்திட்டங்களாக மாற்றவேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட நெடுநாட்களாக இருக்கிறது. அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா மாநிலங்களில் 11–வது வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தும் முறை அமலில் இருக்கிறது.

இந்தநிலையில், தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நேற்று முன்தினம், வருகிற கல்வி ஆண்டிலிருந்து 11–வது வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும். இதற்காக மாணவர்கள் ‘நீட்’ தேர்வுக்கு தங்களை தயார்படுத்தும் வகையில், 12 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருக்கும் பாடங்களை மாற்ற இருக்கிறோம். இதுகுறித்த அறிவிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், மாணவர்கள் 10–வது வகுப்பு, 12–வது வகுப்பு பொதுத்தேர்வு எழுதி கொண்டிருக்கும் நிலையில், 11–வது வகுப்புக்கும் பொதுத்தேர்வு என்றால், அது மாணவர்களுக்கு மிகவும் மனச்சோர்வையும், மனஅழுத்தத்தையும் ஏற்படுத்தும் என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால், 11–வது வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர் கவலைப்படாமல் 12–வது வகுப்புக்கு போய் ஜூன் மாதத்தில் அந்த தேர்வை மீண்டும் எழுதலாம் என்பது வரவேற்புக்குரியது. தமிழக கல்வித்துறை இப்போது ஒரு ‘வெயிட்டேஜ்’ முறையை அதாவது, 11–வது வகுப்பு மார்க்கையும், 12–வது வகுப்பு தேர்வு மார்க்கையும் எடுத்து மொத்தமாக இறுதித்தேர்வு சான்றிதழில் கொடுக்க தீர்மானித்துள்ளது. அதாவது, 11–வது வகுப்பு பாடத்தில் 100–க்கு ஒரு மாணவன் எத்தனை மார்க்குகள் எடுக்கிறான் என்பதையும், 12–வது வகுப்பில் 100–க்கு எத்தனை மார்க்குகள் எடுக்கிறான் என்ற இரண்டையும் சேர்த்து, மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு அந்த மாணவனுக்கு எவ்வளவு மதிப்பெண் என்று குறிப்பிடப்படும். இதன்மூலம் 11–வது வகுப்பு தேர்வில் குறைவான மதிப்பெண் எடுக்கும் மாணவர், 12–வது வகுப்பில் நன்றாக படித்து அதிக மதிப்பெண்கள் எடுத்து குறையை நிறையாக்கிவிடலாம். ஆக, இனி 11–வது வகுப்பு பாடத்தை கற்றுக்கொடுக்காமல் எந்த பள்ளிக்கூடமும், ஆசிரியரும் இருக்கமுடியாது. இது மாணவர்களுக்கு கஷ்டம் என்று கல்வியாளர்கள் குறிப்பிடுவதை பற்றி, தமிழக பள்ளிக்கூட கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன் காய்ச்சல் வந்துவிட்டது, மருந்து கொடுத்தால்தான் சரியாகும் என்று கூறியதையும் கருத்தில் கொள்ள வேண்டியதிருக்கிறது.

Next Story