சட்டசபையில் விவாதித்து நிறைவேற்ற வேண்டும்


சட்டசபையில் விவாதித்து நிறைவேற்ற வேண்டும்
x
தினத்தந்தி 19 May 2017 10:08 PM GMT (Updated: 19 May 2017 10:08 PM GMT)

பா.ஜ.க. அரசின் ஒரு சாதனையாக கருதப்படுவது, அனைத்து மாநிலங்களின் ஆதரவையும் பெற்று சரக்கு சேவைவரி மசோதாக்களை நிறைவேற்றியது தான்.

பா.ஜ.க. அரசின் ஒரு சாதனையாக கருதப்படுவது, அனைத்து மாநிலங்களின் ஆதரவையும் பெற்று சரக்கு சேவைவரி மசோதாக்களை நிறைவேற்றியதுதான். சரக்கு சேவைவரி என்பது இப்போது நடைமுறையில் இருக்கும் கலால்வரி, சேவைவரி, விற்பனைவரி, நுழைவுவரி, மதிப்புகூட்டு வரி, கேளிக்கைவரி, சொகுசு வரி என்பது போன்ற பல வரிகளுக்குப்பதிலாக, ஒரேவரியாக வசூலிப் பதற்கு வகைசெய்வதுதான். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும், அனைத்து சேவைகளுக்கும் இந்த வரிவிதிப்பு பொருந்தும். கடந்த ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் இதற்கான 4 மசோ தாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய சரக்குகள் மற்றும் சேவைவரி விதிக்கும் மசோதா (சி.ஜி.எஸ்.டி. மசோதா), ஒருங்கிணைக்கப்பட்ட சரக்குகள் மற்றும் சேவை வரி மசோதா (ஐ.ஜி.எஸ்.டி. மசோதா) யூனியன் பிரதேச சரக்குகள் மற்றும் சேவை வரி மசோதா (யூ.டி.ஜி.எஸ்.டி. மசோதா), சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (மாநிலங்களுக்கு இழப்பீடு) மசோதா ஆகிய 4 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த மசோதாக்களுக்கான விதிகள், எந்தெந்த பொருட்கள் எந்தெந்த வரிவிதிப்பில் அமைகிறது என்பது போன்ற பல முடிவுகள் தற்போது ஸ்ரீநகரில் நடந்த மாநில நிதி மந்திரிகள் மாநாட்டில் எடுக்கப்பட்டுள்ளன. எல்லோரும் பயந்ததற்கு மாறாக பல பொருட்கள் விலை குறையும் அளவுக்கு வரிவிகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மொத்தம் ஆயிரத்து 211 பொருட்களுக்கு முதல்நாள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. மொத்த பொருட்களில் ஐந்தில் 4 பகுதி பொருட்கள் 18 சதவீதத்திற்கும் குறைவான வரி விதிப்பிலேயே வருகின்றன. 7 சதவீத பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 14 சதவீத பொருட்கள் 5 சதவீத வரி விகிதத்திலும், 17 சதவீத பொருட்கள் 12 சதவீத வரி விகிதத்திலும், 43 சதவீத பொருட்கள் 18 சதவீத வரி விகிதத்திலும், 19 சதவீத பொருட்கள் மட்டும் 28 சதவீத வரி விகிதத்திலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மக்களின் அத்தியாவசிய தேவை பொருட்களான உணவு தானியங்கள், பால், முட்டை, தயிர், பேக்கிங் செய்யப்படாத பன்னீர் மற்றும் இயற்கை தேன், காய்கறிகள், ஆட்டா, மைதா, காய்கறி எண்ணெய், பிரசாதம், கல்உப்பு, கருத்தடை சாதனங்கள் எல்லாவற்றுக்கும் முழுமையான வரிவிதிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை, டீ, காபி, சமையல் எண்ணெய், நிலக்கரி, பால்பவுடர், குழந்தைகள் பால்உணவு, செய்தித்தாள், குடை, பொதுவினியோக மண்எண்ணெய், சமையல் கியாஸ் போன்றவைகள் எல்லாம் 5 சதவீத வரிவிதிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. மற்ற பொருட்களெல்லாம் 12 சதவீதம், 18 சதவீத வரி விதிப்பில் ஆட்படுத்தப்பட்டுள்ளது. மற்றபடி நுகர்வோர் பயன்படுத்தும் பொருட்கள், கார், சிமெண்டு, சூயிங்கம், பான்மசாலா, வாசனை திரவியங்கள், ஷாம்பூ, மேக்கப் பொருட்கள், மோட்டார் சைக்கிள் போன்றவை 28 சதவீத வரி விதிப்புக்குள் ஆட்படுத்தப் பட்டுள்ளன. மோட்டார் சைக்கிள்களுக்கு 3 சதவீத கூடுதல் வரியும் விதிக்கப்படும். சிகரெட்டுக்கு 5 சதவீத கூடுதல் வரி விதிக்கப்பட்டு உள்ளது. பல நாடுகளில் சரக்கு சேவைவரி அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்தியாவில் ‘லேட்டா னாலும், லேட்டஸ்ட்டாக’ வந்து விட்டது என்றவகையில் வரவேற்கலாம். மாநிலத்தில் இந்த வரியை அமலுக்கு கொண்டுவர தமிழக சட்டசபையிலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். தமிழகத்தில் நிறைவேற்றப்படவேண்டிய மசோதாவை சட்டசபையை உடனடியாக கூட்டி விரிவாக விவாதித்து, அதன்பிறகுதான் நிறைவேற்றவேண்டும். இதுமட்டுமல்லா மல், சட்டசபையில் தாக்கல் செய்வதற்கு முன்பு பல்வேறு அரசியல் கட்சிகளின் வர்த்தகர் அணிகள், வணிகர் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து அவர்களோடு முழுமையாக ஆலோசித்து, அதன்பிறகு தான் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பது எல்லோருடைய கோரிக்கையாகவும் இருக்கும்.

Next Story