ஒரு ஆண்டை கழித்த அ.தி.மு.க. அரசு


ஒரு ஆண்டை கழித்த அ.தி.மு.க. அரசு
x
தினத்தந்தி 22 May 2017 8:30 PM GMT (Updated: 2017-05-22T20:26:58+05:30)

அ.தி.மு.க. ஆட்சி அமைத்து இன்றோடு ஒரு ஆண்டு முடிகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கும் அரசுக்கு 100 நாட்கள் ஆகப்போகிறது.

.தி.மு.க. ஆட்சி அமைத்து இன்றோடு ஒரு ஆண்டு முடிகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கும் அரசுக்கு 100 நாட்கள் ஆகப்போகிறது. 1987–ம் ஆண்டு எம்.ஜி.ஆர். மறைந்தபிறகு நடந்த 1989–ம் ஆண்டு தேர்தல் தொடங்கி எந்த கட்சியும் தொடர்ந்து 2 முறை ஆட்சியை நடத்தவில்லை என்ற வரலாற்றை 2011–ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த ஜெயலலிதா, மீண்டும் 2016–ம் ஆண்டு மே மாதம் நடந்த தேர்தலிலும் வெற்றி பெற்று முறியடித்தார். 2–வது முறையாக ஆட்சி தொடங்கியதில் இருந்தே அவருடைய உடல்நிலை சீராக இல்லை. அவருடைய நிகழ்ச்சிகள் எல்லாம் அதிகபட்சம் ஒருமணி நேரம் நடந்ததும், கோட்டைக்கு வரும்போதும், போகும்போதும் அவர் மெதுவாக நடந்து வந்ததும் எல்லோ ருக்குமே அவரது உடல்நிலை சரியில்லை என்பதை எடுத்துக்காட்டியது.

ஆனால், செப்டம்பர் 22–ல் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே அரசு நிர்வாகம் ஸ்தம்பித்தது என்பதை யாராலும் மறுத்துவிட முடியாது. அவர் உடல்நலம் குறைவாக இருந்தாலும், அவருடைய பெயருக்கு இருந்த பயத்தால் அரசு சக்கரம் சுழன்று கொண்டிருந்தது. 2016–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5–ந்தேதி ஜெயலலிதா மறைந்தவுடன், ஆட்சியிலும் குழப்பமான நிலை, கட்சியிலும் குழப்பமான நிலை ஏற்பட்டது. எதிர்க்கட்சித்தலைவர்கள் இப்போது சொன்னதுபோல, வாக்காளர்கள் ஒரு ஓட்டு போட்டார்கள், ஆனால் ஒரு ஆண்டுக்குள் மூன்று முதல்–அமைச்சர்களை பார்த்தார்கள் என்ற அளவில் தான் இந்த ஒரு ஆண்டில் நிலைமைகள் இருந்தன. ஜெயலலிதா மறைந்தவுடன், ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். பிறகு சசிகலா சட்டமன்ற கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அவரும் முதல்–அமைச்சராக
பதவி ஏற்கமுடியாத அளவில் வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி முதல்–அமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறார். கட்சியும் இருபிரிவாக எடப்பாடி அணி, ஓ.பி.எஸ். அணி என்று பிரிந்துள்ளது. ஓ.பி.எஸ். அணியில் 12 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். ஆனால், எடப்பாடி அணியும் அதிக வித்தியாசத்தோடு சட்டமன்ற உறுப் பினர்களைக்கொண்டு ஆட்சியை நடத்திக் கொண்டி ருக்கவில்லை.

இந்த ஒரு ஆண்டு சாதனைகளை பார்த்தால், ஒருசில பாராட்டுக்குரிய அம்சங்கள் இருந்தாலும், தொழில் வளர்ச்சி மிகவும் பின்தங்கியிருக்கிறது. சில புதிய தொழில்கள் தமிழ்நாட்டுக்கு வராமல் அண்டை மாநிலமான ஆந்திரா நோக்கி செல்கிறது என்று குறைபாடுகள் கூறப்படு கின்றன. அன்னிய நேரடி முதலீடும் குறைந்திருக்கிறது. இதுபற்றி உலக வங்கி தயாரித்த பட்டியலில் 12–வது இடத்தில் இருந்த தமிழகம், 18–வது இடத்துக்கு கீழே போய்விட்டது. ஆந்திராவும், தெலுங்கானாவும் முதல் இடத்தில் உள்ளன. இயற்கையும் கைகொடுக்கவில்லை. கடுமையான வறட்சி நிலவிக்கொண்டிருக்கிறது. ஏரிகளை தூர்வாரும் பணிகளுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒதுக்கப்பட்டுள்ள பணமெல்லாம் முழுமையாக எந்தெந்த பணிகளுக்கு செலவிடப்படுகிறது? என்பது குறித்து மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும். இதில் தீவிர கண்காணிப்பு நிச்சயம் வேண்டும்.
‘நீட்’ தேர்வை எதிர்கொள்ளமுடியாத அளவுக்கு கல்வித் தரம் இருப்பதால், கல்வித்தரத்தை உயர்த்தவேண்டிய நிலையும் தமிழக அரசுக்கு இருக்கிறது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கொடுக்கவேண்டிய ஓய்வூதிய தொகை, பிராவிடன்ட் பண்ட் கொடுக்கப்படாத நிலை இருக்கிறது. விவசாயத்திலும், தொழிலிலும், கல்வியிலும், நிர்வாகத்திலும், வேலைவாய்ப்பிலும் ஒரு புதிய
உத்வேகம் வர வேண்டும். ஊழல் புகார்கள் வரக்கூடாது. அரசில் வெளிப்படைத்தன்மை வேண்டும். ஒரு ஆண்டு ஆட்சியில் உள்ள குறைகளை எல்லாம் அரசு கணக்கிட்டு, அனைத்தையும் நிறைவுகளாக்கும் வகையில் அரசு எந்திரம் வேகமாக சுழல முழுமையான ஒரு நிர்வாக சீர்திருத்தம் வேண்டும்.


Next Story