துணைவேந்தர் பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு


துணைவேந்தர் பதவிகளுக்கு நேர்முகத்  தேர்வு
x
தினத்தந்தி 23 May 2017 8:30 PM GMT (Updated: 2017-05-23T17:42:25+05:30)

கல்வியைப்பற்றி அமெரிக்க தத்துவமேதையும், உளவியல் நிபுணரும், கல்வி சீர்திருத்தவாதியுமான ஜான் டேவே மிகச்சிறந்த பல கருத்துகளை கூறியிருக்கிறார்.

ல்வியைப்பற்றி அமெரிக்க தத்துவமேதையும், உளவியல் நிபுணரும், கல்வி சீர்திருத்தவாதியுமான ஜான் டேவே மிகச்சிறந்த பல கருத்துகளை கூறியிருக்கிறார். அமெரிக்காவில் கல்வியிலும், சமூக சீர்திருத்தத்திலும் முக்கிய பங்காற்றிய அவர், கல்வியைப்பற்றி சொல்லும் போது கல்வி என்பது வாழ்வின் ஆயத்தமல்ல, வாழ்வே அதுதான் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆக, ஒவ்வொரு வருடைய வாழ்வும் அவர்கள் பெற்றுள்ள கல்வியில்தான் அடங்கியிருக்கிறது. பள்ளிக்கூட கல்வியை பொறுத்தமட்டில், தமிழகம் நிச்சயமாக வெற்றிப்பாதையில் இலக்கை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. அதுபோல, உயர் கல்வியில் இன்னும் போகவேண்டிய பாதை வெகுதூரம் இருக்கிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது, மறைத்துவிடவும் முடியாது. அந்தவகையில், தமிழ்நாட்டில் உயர்கல்வியை அளிப்பதற்காக 20 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இதில், சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக் கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்டபல்கலைக்கழகம் ஆகிய வற்றில் பல மாதங்களாக துணைவேந்தர் பதவிகள் காலியாக இருப்பதால், என்ஜின் இல்லாத ரெயில்போல நிர்வாகம் அப்படியே முடங்கிப்போய் கிடக்கிறது. சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவர் களுக்கு வழங்கப்பட்ட பட்டங்களில் துணைவேந்தர் கையெழுத்து இல்லாதது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

டாக்டர் ஏ.எல். முதலியார், என்.டி.சுந்தரவடிவேலு, மால்கம் ஆதிசே‌ஷய்யா, சில தினங்களுக்கு முன்பு மறைந்த பேராசிரியர் ஞானம் போன்ற பலர் இந்த துணை வேந்தர் பதவிக்கு பெருமை தேடித்தந்தனர். சில துணை வேந்தர்கள் தங்கள் பதவிக்குரிய கவுரவத்தை கட்டிக் காத்தனர். அமைச்சர்கள் பார்க்கவேண்டும் என்றாலும்கூட, துணைவேந்தர் அறைக்கு வந்துதான் பார்க்கவேண்டும் என்று உறுதியாக இருந்தவர்களும் உண்டு. ஆனால், சமீபகாலங்களில் பல துணைவேந்தர்கள், அமைச்சர்களின் அறைவாசலிலும், உயர்கல்வித்துறை செயலாளர் அலுவலக வாசலிலும் பைலோடு காத்துக்கொண்டிருந்த நிலையும் இருந்ததாக பலர் கூறுவது, நிச்சயமாக இந்த துறைக்கே பெரிய குறைபாடாகும். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த கல்யாணி மதிவாணன் ஓய்வுபெற்று 2 ஆண்டுகளாகியும், துணை வேந்தர் நியமிக்கப்படவில்லை. இதுபோல, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த தாண்டவன் ஓய்வுபெற்று 1½ ஆண்டுகளாகிறது. அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக இருந்த ராஜாராம் ஓய்வுபெற்று ஒரு ஆண்டாகிறது.

இவர்களுக்கெல்லாம் பதிலாக, புதிய துணைவேந்தர் களை நியமிக்க தேர்வுக்குழுக்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு துணைவேந்தர் பதவிக்கும் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் 3 பேர்களை முடிவுசெய்து, அந்த பட்டியல் தற்போது பல்கலைக்கழகங்களின் வேந்தரான கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த முறை மத்திய அரசாங்க மனிதவள மேம்பாட்டுத்துறை, பல்கலைக் கழக மானியக்குழு விதிமுறைகள்படி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் ஒரு புதிய முறையை இன்றுமுதல் 3 நாட்களுக்கு செயல்படுத்தப்பட போகிறார். அதாவது, பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப்புக்கு நேர்முகத்தேர்வு வைக்கப் போகிறார். ஒவ்வொருவரையும் அழைத்து உங்களை இந்த பல்கலைக்கழக துணைவேந்தராக நியமித்தால் இதன் மேம்பாட்டுக்காக என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?, மாணவர்களின் கல்வித்தரம் உயர எந்தவகையில் பங்காற்றப்போகிறீர்கள்? என்பதுபோன்ற பல கேள்விகளை கேட்டு, ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் இந்த 3 பேரில், யார் தகுதியானவர்? என்று தேர்ந்தெடுக்கப்போகிறார். மத்திய பல்கலைக்கழகங்களில் இத்தகைய நேர்முகத்தேர்வு முறைதான் கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் குரானா கவர்னராக இருந்தபோது, இதுபோல நேர்முகத் தேர்வு நடத்தினார். இப்போது யாரை துணைவேந்தராக கவர்னர் நியமிக்கப்போகிறார்? என்று ஒட்டுமொத்த தமிழகமே காத்துக்கொண்டிருக்கிறது. இவருக்கு தகுதி இருந்தது அதனால்தான் இந்த கல்வியாளரை நியமித்தார், இவர் தலைமையில் நிச்சயமாக இந்த பல்கலைக்கழகம் மேன்மைபெறும் என்ற வகையில் பொருத்தமான ஒருவரை நியமித்தார் என்ற புகழை கவர்னர் பெறுவார் என்பதே கல்வியாளர்களின், மாணவர்களின், பல்கலைக்கழக பேராசிரியர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.


Next Story