கல்வித்துறையில் மறுமலர்ச்சி


கல்வித்துறையில்  மறுமலர்ச்சி
x
தினத்தந்தி 24 May 2017 11:30 PM GMT (Updated: 24 May 2017 6:34 PM GMT)

‘‘கல்வி என்பது மிகவும் சக்திவாய்ந்த ஒரு ஆயுதம். இதை பயன்படுத்தி இந்த உலகையே மாற்றலாம்’’ என்றார் நெல்சன் மண்டேலா.

‘‘கல்வி என்பது மிகவும் சக்திவாய்ந்த ஒரு ஆயுதம். இதை பயன்படுத்தி இந்த உலகையே மாற்றலாம்’’ என்றார் நெல்சன் மண்டேலா. அந்தவகையில், உலகமே பல்வேறு முன்னேற்றங்களை அடைந்து ஒரு பெரிய மாற்றத்தை கண்டுகொண்டிருக்கிறது. அத்தகைய மாற்றத் திற்கு தமிழ்நாடு செல்ல வேண்டுமென்றால், அது கல்வியால் மட்டும்தான் முடியும். அதிலும் பள்ளிக்கூட கல்வி மூலமாகத்தான் ஒவ்வொரு மாணவனின் எதிர்காலத்திற்கும் அடித்தளம் அமைக்கமுடியும். 1978–79 முதல் மேல்நிலைப் பள்ளிக்கூட கல்விமுறை அதாவது பிளஸ்–2 படிப்பு அமலுக்கு வந்தது. வழக்கமாக பள்ளிக்கூடங்களில் பாடத் திட்டங்கள் மூன்று ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்க வேண்டும். ஏனெனில், அறிவியல் ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் மற்றும் பல்வேறு வகைகளில் உலகம் பெரிய முன்னேற்றத்தை ஆண்டுதோறும் அடைந்து கொண்டிருக்கும்போது, மாணவர்களையும் அதற்கேற்ற வகையில் தயார் செய்ய பாடத்திட்டங்கள் மாற்றுவது மிகவும் இன்றியமையாததாகும். 

தமிழ்நாட்டில் 1–ம் வகுப்பு முதல் 10–ம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டு 7 ஆண்டுகளும், 11, 12–ம் வகுப்பு பாடத்திட்டங்களை மாற்றி 12 ஆண்டுகளும் ஆகின்றன. கடந்த பல ஆண்டுகளாகவே தமிழக மாணவர்களின் கல்வித்தரம் மிகவும் குறைவாக இருக்கிறது. இதனால், பாடத்திட்டங்களை மாற்றி அமையுங்கள் என்று எவ்வளவோ கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், இதுவரையில் கல்வித்துறை அதை கண்டுகொள்ளவில்லை. சமீபத்தில் கல்வி அமைச்சராக செங்கோட்டையன் பொறுப் பேற்றபிறகும், பள்ளிக்கூட செயலாளராக உதயச்சந்திரன் பொறுப்பேற்றபிறகும், பள்ளிக்கூட கல்வித்துறையில் பெரிய மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. தற்போது 1, 6, 9 மற்றும் 11–ம் வகுப்புகளின் பாடத்திட்டத்தை 2018–19–ம் கல்வி ஆண்டில் மாற்றவும், 2, 7, 10, 12 வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை 2019–20–ம் கல்வி ஆண்டிலும், 3, 4, 5, 8–ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை 2020–21–ம் கல்வி ஆண்டிலும் மாற்றியமைக்க அரசு ஆணையிட்டுள்ளது. இவ்வளவு சீர்திருத்தங்களை செய்யும் அரசு, ஓராண்டில் எல்லா வகுப்புகளுக்கும் பாடத்திட்டத்தை மாற்ற நடவடிக்கை எடுத்திருக்கலாமே? என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதில், பாராட்டத்தக்க அம்சம் என்ன வென்றால், 6 முதல் 10–ம் வகுப்புவரை தகவல் தொழில்நுட்ப கல்வியை அறிவியல் பாடத்தின் ஒருபகுதியாக கற்பிக்க பாடத்திட்டத்தில் உரியமாற்றம் கொண்டுவரவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மற்றொன்று வெறும் மனப்பாடம் செய்யும் எந்திரங்களாக மாணவர்கள் இருக்கும் நிலையை மாற்றி படைப்பின் பாதையில் பயணிக்கவைப்பதாகும். 

பள்ளிக்கூடங்களில் 10 ஆயிரம் புதிய கழிப்பறைகளை கட்டவும் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் முடிவு எடுத்துள்ளார். இந்த கழிப்பறைகளை கட்டுவதற்கு தொழில் நிறுவனங்களிடமிருந்தும், முன்னாள் மாணவர்களிடமிருந்தும், அந்தந்த ஊர் பெரியவர்களிடமிருந்தும் நன்கொடை பெறுவதற்கு அவர் முயற்சித்து வருகிறார். தற்போது தொழில் நிறுவனங்கள் சம்பாதிக்கும் லாபத்தில் 10 சதவீத தொகையை இதுபோல உதவிகளுக்கு நிறுவனங்களின் சமூகபொறுப்பு கடமையாக செலவழிக்க உத்தரவு இருப்பதால், அந்ததொகையை பயன்படுத்தி அதிகமான கழிப்பறைகள் கட்டுவதற்கு தொழில்நிறுவனங் களின் உதவியை பெறலாம். பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் என்.டி.சுந்தரவடிவேலு கல்வித்துறை இயக்குனராக இருந்தபோது, ஒவ்வொரு ஊரிலும் பள்ளிச்சீரமைப்பு மாநாடு ஒன்றை நடத்தி, பள்ளிக்கூடத்திற்குத் தேவையான எல்லா உபகரணங்களையும் உள்ளூரிலேயே நன்கொடையாக பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. அன்று காமராஜர் செய்த அதே முறையை பின்பற்றி செயல்படுத்த கல்வி அமைச்சர் எடுத்திருக்கும் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது. ஆனால், இந்த ஆண்டு, அடுத்த ஆண்டு பிளஸ்–2 தேர்வு எழுதும் மாணவர்கள் பாடத்திட்டம் மாற்றப்படாமல் இதே பாடத்திட்டத்தில் படிக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. இப்படிப்பட்ட மாணவர்களுக்கு ‘நீட்’ போன்ற தேர்வை எழுத அரசு சார்பில் சிறப்பு கவனம் செலுத்தி தனியாக பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும். 

Next Story